தேசத் துரோகிகளை தூக்கில் போடுங்கள்!




பாகிஸ்தான் அணி வீரர்கள் 'ஸ்பாட் ஃபிக்சிங்’ சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது, கிரிக்கெட் மீதான நம்பிக்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வீசிய ‘மேட்ச் ஃபிக்சிங்’ சூறாவளியில் அசாருதீன், ஜடேஜா, குரோனி, மாலிக் போன்ற நட்சத்திர வீரர்கள் ஆயுள் தடை விதிக்கப்பட்டு காணாமல் போனார்கள். இப்போது ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ சுனாமி பாகிஸ்தான் அணியை சுருட்டி வீசியிருக்கிறது.இங்கிலாந்துடன் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சூதாட்ட தரகர்களான அஸார் மஜீத், மஸார் மஜீத் சகோதரர்களை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்தது. நன்றாகக் கவனித்ததில், பாகிஸ்தான் வீரர்கள் 7 பேருடன் தங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் டெஸ்ட் தொடரின்போது நோ பால், வைடு வீசச் சொல்லி கோடிக்கணக்கில் கொடுத்து ஸ்பாட் ஃபிக்சிங் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்கள்!

வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து கணக்கில் வராத எக்கச்சக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன் பேச்சுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இங்கிலாந்துடன் நடந்த முதல் டெஸ்ட், கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுடன் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடித் தோற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் ஐசிசி ஊழல் தடுப்புக்குழு ஆய்வு செய்கிறது. ‘தேசத் துரோகிகளை தூக்கில் போடுங்கள்’ என்று ரசிகர்கள் கொதிக்கிறார்கள். ‘தாங்கள் நிரபராதிகள் என நிரூபிக்க சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்ச்சைகள் புதிதில்லை. போதை மருந்து பழக்கம், சர்வதேச தாதாக்களுடன் தொடர்பு, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு... இப்படி அவர்களுடைய திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை. ‘‘தாதாக்கள் ஆதரவுடன், மிக வலுவான நெட்வொர்க் அமைத்து செயல்படும் தரகர்களின் அச்சுறுத்தலுக்கு பணிவதைத் தவிர பாகிஸ்தான் வீரர்களுக்கு வேறு வழியில்லை’’ என்கிறார் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் லாசன்.

சூதாட்டத் தரகர்கள் தொடர்பு கொண்டது பற்றி தகவல் தெரிவித்தும் கிரிக்கெட் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டிருப்பதே ஸ்பாட் ஃபிக்சிங் சர்ச்சைக்குக் காரணம் என்று வேதனையுடன் கூறுகிறார் ஆஸி. ஆல் ரவுண்டர் வாட்சன். வங்கதேச வீரர்களும் கூட தரகர்கள் தங்களைத் தொடர்புகொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.  டி20 போட்டிகள் வந்த பிறகு கிரிக்கெட் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது. ஐபிஎல் போட்டியில் மட்டுமே ரூ.25 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்திருக்கிறது. சூதாட்டத்தைத் தடுக்கவோ, தரகர்களைக் கடுமையாக தண்டிக்கவோ முடியாத நிலையில் அதை சட்டபூர்வமாக அங்கீகரித்து விடலாம் என்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். ‘‘டிசம்பரில் நியூசிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. அப்போட்டிகளின்போது, ‘முதல் ஓவரில் எத்தனை ரன் எடுப்பார்கள்’, ‘போட்டியில் மொத்தம் எத்தனை சிக்சர் அடிக்கப்படும்’ என்பது உள்பட பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடத்தப் படும். இதற்காக ரசிகர்களின் பெட்டிங்கை வரவேற்போம்’’ என்கிறார் நியூசிலாந்து சூதாட்ட நிறுவன தலைமை தரகர் மார்க் ஸ்டாபோர்டு. நியூசிலாந்தில் விளையாட்டுப் போட்டிகளின்போது சூதாட்டம் நடத்துவது அங்கீகரிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவைச் சேர்ந்த சூதாட்டத் தரகருடன் ஆசிப் பேசியதன் ஒலிப்பதிவு மற்றும் வேறு சில ஆதாரங்களை ஐசிசி அதிகாரியிடம் கொடுத்துள்ளார் ஆசிப்பின் முன்னாள் காதலி நடிகை வீணா. பல முனையில் இருந்தும் நெருக்கடி அதிகரிக்கவே சல்மான் பட், ஆசிப், ஆமிர் ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதெல்லாம் போதாது... கடுமையாகத் தண்டித்தால் மட்டுமே மரண அடி வாங்கியிருக்கும் கிரிக்கெட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற முடியும்.

 - பா.சங்கர்