எங்க ஆத்தா ஒரு கோவில்... எங்க அப்பா அங்க சாமி...



‘‘பிறக்கும்போது ஒரு மனிதன் அனாதைங்கிறது உலக நியதி. ஆனா அவன் சாகும்போது அனாதையா போறது கொடுமை. பெத்தவங்களைத்தான் சொல்றேன். பிள்ளைகளைப் பெத்து வளர்த்து, கல்யாணம் பண்ணிக்கொடுத்து உறவுகளை வளர்த்தும்கூட அவங்க அனாதையா கைவிடப்படறது கொடூரம். அதுக்கான செய்தியாதான் ‘திவசத்தின்போது காக்கைக்கு சோறு வைக்கிறதைவிட,

பெத்தவங்க உயிரோட இருக்கும்போது ஒரு வாய் சோறு போடுங்க’ன்னு இந்தப்படத்தில சொல்றேன்...’’ என்கிறார் பாண்டியநாடு தியேட்டர்ஸின் ‘முத்துக்கு முத்தாக’ இயக்குநர் ராசு மதுரவன்.‘‘குழந்தைகளா இருக்கும்போது குடும்ப உறவுகள்ல எந்த சிக்கலும் இல்லை. ஆனா வாலிபம் தொடங்கி வேலை, திருமணம்னு இடம்பெயரும்போதுதான் எல்லா பிரிவினைகளும் வந்துடுது. அப்படி அஞ்சு குழந்தைகளைப் பெத்த ஒரு அப்பா & அம்மாவோட கதை இது. நட்ராஜ், பிரகாஷ், விக்ராந்த், வீரசமர், ஹரீஷ்னு அஞ்சு ஹீரோக்களும், ஓவியா, மோனிகா, வர்ஷினி, சுஜிபாலா, காயத்ரின்னு அஞ்சு ஹீரோயின்களும் இருந்தும் இந்தக்கதையைப் பொறுத்தவரை,

நான் ஹீரோ ஹீரோயின்னு சொல்றது அப்பா அம்மாவா நடிக்கிற இள வரசுவையும், சரண்யாவையும்தான்...’’ என்கிற ராசு மதுரவன், தன் முந்தைய படங்களின் அடிநாதத்தைப் பெரும்பாலும் குடும்ப உறவுகளை அடியொற்றியே அமைத்திருக்கிறார். அவரது ‘மாயாண்டி குடும்பத்தார்’, அண்ணன்&தம்பி உறவு முறைகளைச் சொல்லிவந்த படங்களில் முக்கியமானது.    ‘‘உறவுகளோட பெருமையைச் சொல்றதில இந்தப்படம் ‘மாயாண்டி குடும்பத்தாரை’விட பத்து படிகள் முன்னேறி இருக்கும். இப்படி என் படங்கள் இருக்கறதுக்கு, உறவுகள் சிதிலமடைஞ்சு போன சமூகச் சூழல் ஒரு காரணம்னா, என்னோட மாயாண்டி குடும்பத்தார் பார்த்துட்டு கனடாவிலிருந்து வந்த மெயில்கள் இன்னொரு காரணம். ‘படத்துக்குப் படம் அரிவாளும், வன்முறையுமா இருக்க சினிமாவில உங்க படங்கள் மட்டும்தான் உறவுகளைத் தூக்கிப்பிடிக்குது. தயவுசெஞ்சு இப்படியே படம் எடுங்க. உறவுகளைப்பிரிஞ்சு தூரத்தில இருக்க எங்களுக்குத்தான் உறவுகளோட அருமை அதிகமா புரியும்...’னு வந்த அந்த மெயில்களைப் பார்த்து கண்கலங்கிட்டேன். இந்த உணர்வுகளைப் புரிஞ்சுக்க, கடல்தாண்டிதான் இருக்கணும்னு அவசியம் இல்லை.

எல்லா மனித உணர்வுகளுமே உறவுகளோட அடிப்படையில அமைஞ்சவைதான்..!’’ என்கிற அவர், ‘களவாணி’யில் கவனிக்க வைத்த ஓவியாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்த காரணம் சொல்லித் தொடர்ந்தார்.
 
‘‘களவாணி வெற்றிக்குப் பிறகு அந்தப்பொண்ணுகிட்ட பத்துக்கும் மேல ஸ்கிரிப்டுகள் வந்ததாம். ஆனா எல்லாமே கிராமத்துக் கதைகளா இருக்கவே, மாடர்னான கேரக்டர் இருக்கறதுனாலயும், இந்த ஸ்கிரிப்ட் மேல இருந்த நம்பிக்கையாலயும் இதுக்கு உடனே ஒத்துக்கிட்டதா அந்தப்பொண்ணே சொன்னது. அதோட நல்ல நடிகைக்கு அடையாளமா, அஞ்சு ஹீரோயின்கள் கூட இருந்தும் தன் மேலயும், தனக்கான கேரக்டர் மேலயும் இருக்க நம்பிக்கையால முழு ஒத்துழைப்போட நடிக்கிறாங்க ஓவியா.

மோனிகாவும் அப்படித்தான். அதேபோல காயத்ரிங்கிற பெண்ணை இந்தப்படத்தில அறிமுகப்படுத்தறேன். எந்த முன் அனுபவமும் இல்லாம வாய்ப்பு கேட்டு அந்தப்பெண் வந்த நேரம், அந்தக் கேரக்டருக்காக ஏற்கனவே ஒரு நடிகையை முடிவு பண்ணி வச்சிருந்தேன். ஆனா நடிக்க வந்த காரணமா அவங்க அப்பா இறந்ததையும், அந்த சூழல்ல இருந்து குடும்பத்தை மீட்கவும்தான்னு காயத்ரி சொன்னதைக் கேட்டு ஆடிப்போயிட்டேன். அந்த உணர்வுகளே சரியா நடிக்க வச்சுடும்னு புரிஞ்சுக்கிட்டு அந்த வாய்ப்பை இந்தப்பெண்ணுக்கு தந்தேன்.

அந்த நம்பிக்கை வீண்போகலை.இளவரசுவோட கடைசி மகனா வர்ற ஹரீஷ் ‘கோரிப்பாளைய’த்திலயே நடிச்சவர்தான். அந்தக் கேரக்டருக்கு எதிரான இன்னொரு நிறத்தில அவரை நான் காட்டறேன். அவருக்கு ஜோடியா ஓவியா வர்றாங்க. பேஸ்கட் பால் ப்ளேயரா வர்ற ஓவியாவை விரட்டி விரட்டிக் காதலிக்கிறாரு ஹரீஷ். தனி ஹீரோவா நடிச்சிருக்க நட்ராஜ், விக்ராந்த், வீரசமர் எல்லாம் என் படத்தில அஞ்சில ஒருத்தரா நடிக்க ஒத்துக்கிற அளவுக்கு கதை அவங்களைக் கட்டிப்போட்டிருக்கு. பல படங்கள்ல நடிச்சிருக்க திண்டுக்கல் அலெக்ஸ் இந்தப்படத்தோட புரொடக்ஷன் வேலைகளை உசிலை சிவகுமாரோட சேர்ந்து கவனிச்சுக்கிட்டிருக்கறதோட, ஒரு கேரக்டர்ல நடிச்சும் இருக்கார். என் பேட்டர்ன்ல இருந்து வித்தியாசமான கலர்ல இந்தப் படத்தை உருவாக்க உதவியா யு.கே.செந்தில்குமாரோட ஒளிப்பதிவும், கவி பெரியதம்பியோட இசையும் இருக்கு. காட்சிகளை அழகுபடுத்த செந்தில்குமார் உதவறார்ன்னா 600 விளம்பரப்படங்களுக்கு மேல பங்கெடுத்திருக்க கவி பெரியதம்பியோட இசை அஞ்சு பாடல்களையும் அஞ்சுவிதமான உணர்வுகளோட கொடுத்திருக்கு.

அதில ‘மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு... ஊருக்குள்ள அப்பாவுக்குப் பேரு நல்ல பேரு...’ன்னு வர்ற பாடல்ல ‘எங்க ஆத்தா ஒரு கோவில், எங்க அப்பா அங்க சாமி, இதுதானே எங்களோட பூமி...’ன்னு வர்ற வரிகள், மொத்த படத்தோட ஜீவனைச் சொல்றதா இருக்கும்..!’’   - வேணுஜி