கையருகே நிலா



 
கடந்த அத்தியாயத்தில் ‘கல்விப் புரவலர் வளை’ என்ற அமைப்பைப் பற்றி எழுதியிருந்தேன். இதை நான் பல கூட்டங்களிலும் எடுத்துக் கூறியபோது, அப்படிப்பட்ட அமைப்பின் தேவை பற்றி விவாதமும் முளைத்தது. சமுதாயத்தில் ஏற்கனவே பல தன்னார்வ அமைப்புகள் கல்விக்கான உதவியைப் பல வகைகளில் செய்து வரும்போது இந்த அமைப்பு புதிதாக என்ன செய்யப் போகிறது என்பது அவர்கள் வாதம். இதைப் பற்றி நானும் யோசித்திருந்தேன். ஆனால் இந்த அமைப்பின் நோக்கமே, அப்படிச் செய்யப்படும் உதவிகள், தகுதியும் தேவையும் உள்ள குழந்தைகளுக்குச் சரியாகப் போய்ச் சேர உதவுவதே.
   
நான் முன்பு நினைத்திருந்ததைவிட இன்றைய காலகட்டத்தில் பணமாகவும், பொருளாகவும் தேவையான மாணவர்களுக்கு உதவிகள் மிகப் பெரிய அளவில் போய்ச் சேர்வதை என் கண் முன்னாலேயே காண முடிந்திருந்தது. ஆனால் எனது மனதில் அப்போது ஒரு எண்ணம் தலைதூக்கியது. அதன்படி இப்போதிருக்கும் இந்த தனிப்பட்ட முயற்சிகளால், ஒரே மாணவன் பலரிடம் உதவி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அவனுக்கு அடுத்ததாய் உள்ள மாணவனுக்கு இந்த உதவிகள் மறுக்கப்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது என்பதாக எனக்குத் தோன்றியது.

என்னுடைய இந்த அனுமானம் ஓரளவுக்கு உண்மையாவதைச் சமீபத்தில் காண முடிந்தது. எனது அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட தன்னார்வ நண்பர்களும், இனிமேல் சம்பந்தப்படப் போகும் தன்னார்வ நண்பர்களும் ‘கல்விப் புரவலர் வளை’ பற்றி உணரலாம். இதுபோன்ற ஒரு அமைப்பில் சேர்ந்து உதவிகளைச் செய்தால், தகுதியும் தேவையும் உள்ள மாணவர்களில் மிகவும் அதிகப்படியானவர்களுக்கு இந்த உதவிகள் போய்ச் சேர வாய்ப்பு ஏற்படும்.

ஊடகங்கள் மூலம் எனக்குத் தெரியவந்த ஒரு மாணவனின் தேர்வு மதிப்பெண்கள், அவனது குடும்பச் சூழ்நிலையில் அவன் செய்த ஒரு மிகப் பெரிய சாதனையாக எனக்குப் பட்டது. உடனே அவனது முகவரியைக் கேட்டுப் பெற்று, தொடர்பு கொண்டு பேசினேன். வாழ்த்து கூறினேன். மேற்கொண்டு விருப்பம் என்ன என்று கேட்டேன். அப்போது அவனது பதிலில் விருப்பம் மிகவும் சிறியதாகத் தெரிந்தது. ஆனால் அவனுடன் பேசியவரையில், அவனது புத்திக் கூர்மை அவனது வயதில் எனக்கு இருந்ததைவிட எந்த விதத்திலும் குறைவானதாக எனக்குத் தெரியவில்லை. அவனுடைய நிலையில், கேள்விப்படாதிருந்த காரணத்தால் ஐ.ஐ.டி&யைக் கோட்டை விட்ட நான் அந்த நாளிலேயே எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை எடுத்துப் படித்தேனல்லவா... அதே மாதிரி இந்த மாணவன் படித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அதைப் பற்றிக் கொஞ்சம் கூறினேன். பின், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு முன் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லி எனது தொலைபேசி எண் கொடுத்து விட்டு வந்தேன். இது மாதிரி நான் பலரிடமும் தொடர்பு கொண்டு விட்டு, என்னுடன் சேர்ந்து அவர்களுக்கு உதவ சில ஆர்வலர்களையும் தயார் செய்து வைத்திருந்தேன்.
 
கவுன்சிலிங்கிற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் ஒவ்வொருவராக அழைத்தார்கள். என்ன அதிசயம்... சொல்லி வைத்தாற் போல் எல்லாக் குழந்தைகளும் தங்களின் விருப்பத்தில் பல படிகள் தாண்டி இருந்தார்கள். சேர விரும்பிய துறைகளையும் கல்லூரிகளையும் காரண காரியங்களுடன் சொன்னார்கள். ஆனால் பலரின் ஆசை, அவர்கள் பெற்றிருந்த மதிப்பெண்களை வைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது. அதைப் பற்றி நான் சொன்னபோது அவர்களிடம் உடன் பதில் இருந்தது. ஒவ்வொருவரும் மூன்று, நான்கு சாய்ஸ் வைத்திருந்தார்கள். சில வாரங்களில் அந்தக் குழந்தைகளிடம் எவ்வளவு பெரிய மாற்றம்.

எங்கிருந்து எங்கு வந்திருக்கிறார்கள்! மிகக் குறைந்த ஆசையிலிருந்து மிகப் பெரிய ஆசைக்கு, இரண்டே மாதங்களில்! சந்தர்ப்பம் கொடுத்தால் இவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம் என்ற நம்பிக்கை மொட்டுகள் என்னுள் மலர்ந்தன. இந்த உணர்வுகளுடன், அடுத்த கட்டமாக நான் எப்படி உதவலாம் என்பதாய் எனது விசாரணை தொடங்கியது. அடுத்த கட்ட இன்ப அதிர்ச்சி, கவுன்சிலிங்கிற்கான ஐயாயிரம் ரூபாய்க்கான வங்கிக் காசோலைகள் அவர்களின் முயற்சியாலும், தன்னார்வ நண்பர்களின் உதவியாலும் அவர்களிடம் தயார் நிலையில் இருந்தன.

பல கல்லூரி தாளாளர்கள், நல்ல மதிப்பெண்களுடன் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் கல்லூரிகளில் முழுக் கல்வித் தொகையும் விடுதிக் கட்டணமும் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தனர். எனவே கவுன்சிலிங் நாளன்று இதைப் பற்றி என்னுடன் முன்பே பேசியிருந்த மாணவ, மாணவிகளிடம் கூப்பிட்டுப் பேசினேன். மறுபடியும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அனைவருக்கும் அந்தக் கல்லூரிகளை விடுத்து, வேறு பல கல்லூரிகளில் கிட்டத்தட்ட அதே சலுகைகள் அரசாங்கத்திடமிருந்தோ, அல்லது மற்ற தன்னார்வ நண்பர்களிடம் இருந்தோ கிடைத்திருந்தன. இந்த இன்ப அதிர்ச்சிகளின் பலன், நான் நம்பிக்கையுடன் உதவ நினைத்த குழந்தைகளுக்கு உதவிகள் கிடைத்திருந்தன. ஆனால் நான் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின் படி உதவத் தயாராக இருந்த பலர் அவர்களுடைய பங்களிப்பை இந்த வருடம் செய்ய முடியவில்லை.

இப்போது நினைத்துப் பாருங்கள், நான் சொன்னபடி ‘கல்விப் புரவலர் வளை’ என்று ஒன்று இருந்திருந்தால் அடுத்த கட்ட மாணவர்களுக்கு இந்த உதவி போயிருக்க முடியுமல்லவா? இதில் ஒரு நல்ல செய்தி என்ன தெரியுமா? நான் தோ¢ந்தெடுத்திருந்த அந்த மாணவர்கள் ஒருவரிடம் மட்டுமே உதவியைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்தவர் உதவ முன்வந்தபோது, இதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல செயல்.

ஆனால் சில நண்பர்கள் பணமாக உதவுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பணமாகப் போகும்போது அரசாங்க உதவியும், தன்னார்வ அமைப்புகளிடமிருந்து உதவியும் பெறும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உதவியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அதனாலும் அடுத்த கட்ட மாணவர்களுக்குத் தேவையான உதவி கிடைக்காமல் போவதற்கான அபாயம் உள்ளது. இந்தத் தவறால், தனது தேவையை விட அதிகமான உதவி பெறும் மாணவன், தனது பாதையிலிருந்து தவறுவதற்கான அபாயமும் உள்ளது. 

ஆனால், நான் சொன்ன ‘கல்விப் புரவலர் வளை’ திட்டத்தில் தகுதியும் தேவைகளும் உள்ள ஒரு மாணவனுக்கு ஒருவர் என்ற வகையில் உதவுவார். இதனால் அதிகபட்ச மாணவர்களுக்கு உதவி போய்ச் சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல மாணவன் ஒருவன் தவறான பாதையில் போவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால் தேவைக்கு அதிகமான பணம் அவர்களிடம் சேர்வதில்லை. அதற்கும் மேலாக, உதவி பெறும் ஒவ்வொரு மாணவரையும் அவரது கல்வி முன்னேற்றத்தையும், அவரது புரவலராக அடையாளம் செய்யப்பட்டவர் கண்காணிப்பார்.

இந்தக் ‘கல்விப் புரவலர் வளை’ என்ற அமைப்பை யார் ஆரம்பிப்பது? யார் நடத்துவது? இதை அரசேகூட ஆரம்பிக்கலாம். அரசும், தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து ஒரு வளைக் குழுவை அமைத்துப் பணிபுரியலாம். அதன் மூலம் உதவி செய்பவர்கள் மற்றும் உதவி பெறுபவர்கள் பற்றிய விபரம் வெளிப்படையாக இருக்கும். இப்படி இந்தச் செய்திகள் மட்டும்தான் ஒரே இடத்தில் இருக்கும். ஆனால் தன்னார்வ இயக்கங்களும் தனிப்பட்ட நண்பர்களும் தேவையானவர்களுக்கு எப்போதும் போலவே தாங்களாகவே உதவுவார்கள். அதில் எந்த மாற்றமும் தேவையில்லை. 

இப்படி நாம் மனதாலும் பொருளாலும் கூடுவதன் மூலம் பொறுப்பான தொடர் தலைமுறைகளுக்கு வித்திட முடியும். பெரியவர்கள் கண்காணிப்பில் இளைய தலைமுறை வளரும். அவர்களும், நம்மைக் கவனிக்கச் சமுதாயமே இருக்கிறது என்ற நம்பிக்கையில் வளர்வார்கள். இந்தக் கூட்டு முயற்சி நாட்டை இனம், மொழி, மதம் கடந்த ஒரு கூட்டுக் குடும்பமாக்கும்.

(அடுத்த வாரம் நிறைவு பெறும்)