மண்ணுக்கு வந்த விண்ணுலகம்!



உலகின் விழிகளை விரிய வைக்கும் பிரமாண்டங்கள் இன்றைய தமிழ் சினிமாவில் சாதாரணம். அத்தனை சாதனை சிகரங்களை தக்க வைத்திருக்கும் சினிமாவின் தாய்மடி சேலம். மாடர்ன் தியேட்டர்ஸ் தத்து எடுத்து வளர்த்த முத்துப்பிள்ளையே தமிழ்த்திரை. ஆங்கிலப்படம், முதல் பேசும் படம், முதல் வண்ணப்படம் எல்லாம் இங்கு பிறந்த செல்லங்களே. இதற்கு முன்பான காலகட்டங்களில் சேலத்தில் மேடை நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. இப்போது அவை நடனக்குழுக்களாக சுருங்கி விட்டன. சினிமா சென்னையில் மையம் கொண்டுவிட, ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே... சினிமா வளர்ந்த சேலம் மண்ணில் இப்போதும் ஆண்டுக்கு ஒருமுறை வலம் வருகிறது மின்னொளியில் மிளிரும் ‘வண்டி வேடிக்கை’!


ஆயிரங்களை தண்ணீராகச் செலவழித்து சிறப்பான ஒப்பனையிட்டு தேவலோகக் காட்சிகளை அரங்கேற்றும் மின்விளக்கு அலங்கார வண்டிகளை ஒவ்வொரு திரு விழாவின்போதும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைகின்றனர். இதற்காக பெங்களூரிலிருந்து சினிமா மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். வண்டிகளில் பிரமாண்ட அலங்கார வேலைகள் செய்யப்படுகின்றன.

‘‘வண்டி வேடிக்கை நூறாண்டு பழமைமிக்கது’’ என்கிறார் சேலம் சிக்காபக்கா குழுவின் லவ்ஓ நாகராஜன். ‘‘25 ஆண்டுகளாக சிக்காபக்கா என்ற குழு மூலம் இறைக்காட்சிகளை புகழ்பெற்ற ஒப்பனைக்காரர்களைக் கொண்டு சித்தரித்து, மின் அலங்கார வண்டிகளில் உலா வரச்செய்கிறோம். இப்படிப் பல குழுக்கள் உள்ளன. 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு. நினைத்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று அம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேடம் போடுகின்றனர். பத்து நாட்கள் கடும் விரதம். நெசவாளர்களாக உள்ள இம்மக்கள் அம்மன் பண்டிகையை ஒரு வாரம் கொண்டாடுகின்றனர். வண்டிகளின் எண்ணிக்கை 15&ல் இருந்து, இப்போது 50 ஆக உயர்ந்துள்ளது. ஒப்பனை, வண்டி வாடகை என குறைந்தபட்சம் ஒரு வண்டியின் பிரமாண்டத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது’’ என்கிறார் அவர்.

சிவன்&பார்வதி, ராமாயணம், மகாபாரதம் என புராணத்தின் புகழ்பெற்ற காட்சிகளை கண்முன் நிறுத்தும் பிரமாண்ட அலங்கார வண்டிகளில் கடவுள் வேடத்தில் உள்ள இளைஞர்களைக் கண்டுகளிக்க கூட்டம் அலை மோதுகிறது. வெள்ளித்திரை மீது சேலம் மக்கள் வைத்திருக்கும் பாசத்தை உணர்த்துகின்றன அந்தக் காட்சிகள்!

- ஸ்ரீதேவி