யூத் ஏரியா : ‘‘நான் முதல்வர் ஆனால்... இதுதான் தலைப்பு!’’




‘‘இரு இரு... எல்லோரும் கட்டுரை எழுதணும். ஒருத்தர் மட்டும் எழுதாம கால்மேல கால் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. கேட்டா, ‘முதல்வர் ஆனா நான் ஏன் எழுதப் போறேன்? பி.ஏ&வை எழுதச் சொல்வேன்’ங்கிற பதில்தானே? இந்த அரதப்பழசையே எத்தனை நாளைக்கு இழுப்ப? மாத்தி யோசிப்பா’’ & ரெண்டு வார்த்தையில நாசயா ‘தலைப்பு’ சொல்வதற்குள்ளேயே, அவரைப் பிறாண்டி இப்படி வாங்கிக் கட்டிக்கொண்டார் சாத்தப்ப சீனிவாசன்.‘‘முந்திரிக்கொட்டை... முந்திரிக்கொட்டை... எதுலயும் இப்படித்தான் அவசரம். என்ன சொல்ல வர்றேன்னு கேக்காமலே அட்வைஸா? வுட்டேன்னா!’’

முழங்கையை மடக்கி சாத்தப்பனின் முகத்துக்கு நேரே பாய்ந்த நாசயாவை, ‘‘பொறுமை வேணும்பா. அது இல்லாமத்தான சவாலை உடனே ஏத்துக்கிட்டு அர்ஜுன் அந்த அவஸ்தைப்பட்டாரு’’ என்று கூல் படுத்தினார் கோகுல்.
‘‘என்னாது... அர்ஜுன் அவஸ்தைப்பட்டாரா? உச் கொட்றது போதும். லந்து விடாம விஷயத்தை விளக்கு’’ & நாசயா முறைப்போடு சொல்ல, கோகுல் விளக்கியது இதுதான்...‘‘நாமெல்லாம் விஸ்காம் ஸ்டூடன்ட்ஸ் இல்லையா? எப்படியும் ஒருநாளைக்கு ஏதாவது ஒரு ஸ்டேட்ல சி.எம்&மை இன்டர்வியூ பண்ணணும். அப்ப நாம கேக்கற கேள்வியில அவர் மூட் அவுட் ஆகி, ‘நீயே இருந்து பாரேன்’ம்பார். ஒரு நாளோ, ஒரு மணி நேரமோ, அப்படியொரு சான்ஸ் கிடைக்கிறபோது, ‘என்ன செய்வீங்க’ங்கிறதுதான் கேள்வி. ஆளாளுக்கு அவுத்து விடுங்க பார்ப்போம்!’’முதலமைச்சர் கனவோடு அந்த இளசுகள் ஐடியா கலெக்ஷன் நடத்திக்கொண்டிருந்த இடம், சென்னை கோபாலபுரம் ஏ.எல்.எஸ். எடிட்டிங் இன்ஸ்டிட்யூட். சாத்தப்பன், கோகுல், சந்தோஷ் மூவரும் வேல்ஸ் கல்லூரி மாணவர்கள். எத்திராஜிலிருந்து வந்திருந்தார்கள் நாசயா, மனிஷா, புஷ்பா, மற்றும் சுதிர். எஸ்.ஆர்.எம்&மைச் சேர்ந்தவர் ராஜேஷ். கனி, கிஷோர், பிரவீண் மூவரும் லயோலா.

‘‘நான் ஃபர்ஸ்ட்’’ என முன்னால் வந்தது சுதிர். ‘‘ஈவ் டீசிங்கை இல்லாம பண்றதுதான் முதல் வேலையா இருக்கும். ஒரு பொண்ணா & அதுவும் எத்திராஜ் மாணவியா & எனக்குத்தான் அதோட வலி தெரியும். எங்க சீனியர் சரிகா ஷாவுக்கு செய்ற மரியாதையும்கூட. பசங்களே வேணாம்னுட்டு நாங்க பாட்டுக்குத் தனியாத்தானே (கோ&எட் இல்லையாம்) இருக்கோம். அப்படி இருந்தும் வம்பா அவங்களைப் பலிகொடுக்க வேண்டியதாயிடுச்சே’’ & பெங்களூர் சுதிரின் திட்டம் இடத்தை சீரியஸாக்க, மேட்டர் மீது சீரியஸானோம் நாம். புரிந்துகொண்டு புல்லரிக்க வைத்தார் சந்தோஷ்.‘‘சார், உடனடியா டி.ஜி.பி&யைக் கூப்பிட்டு, கேரள டி.ஜி.பி&யை லைன்ல பிடிக்கச் சொல்வேன். அங்கதான் சார் இருக்கா என்னோட வருங்கால மனைவி. பாவி மக, நல்லா ரூட் விட்டுட்டு இப்ப ரூட் மாறிட்டா. எங்க ஃபேமிலி செட் ஆகாதாம். ஆரம்பத்துலயே தெரியாதாமா இதெல்லாம்? எப்படியாச்சும் அவ மனசை மாத்தி அவளை கூட்டிவந்து கல்யாணம் பண்ணிக்கணும். நம்ம லைஃப் செட்டில் ஆனாத்தானே மக்கள் லைஃப்பை பத்தி யோசிக்க முடியும்?!’’

‘‘ஹலோ, சொந்த தேவைக்கு ரெண்டு மாநில போலீசைப் பயன் படுத்துனேன்னு கேஸ் போடுவேன். அப்புறம் புழல்தான் உங்களுக்கு ஹனிமூன் ஸ்பாட்’’ என்று குறுக்கே வந்த புஷ்பா, ‘‘மக்கள் சேவைக்குன்னு வந்த பிறகு பர்சனல் லைஃப் பத்தி கவலைப்படக்கூடாது. என்னோட கொள்கை இதுதான். ‘அரசியல்வாதிகளுக்கு ‘டூட்டி ஹவர்’ கொண்டு வரணும்ங்கிற ப்ளான் வச்சிருக்கேன். கட்டாயம் அந்த நேரத்துக்கு அவங்க உழைக்கணும். இதுக்கு எதிர்க்கட்சியில மட்டுமில்ல... ஆளுங்கட்சி ஆளுங்ககூட சப்போர்ட் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கேன். ஆனாலும், எனக்கிருக்கிற சிறப்பு அதிகாரத்தை வச்சு சட்டத்தை பாஸ் பண்ணுவேன்’’ என்றார்.‘‘முதல்ல விஸ்காம் பாஸ் பண்றியான்னு பாரு. ‘டூட்டி அவர்’ கொண்டு வாராளாமில்ல?! முதல்ல அரசியல்வாதியா உங்க ஊர் (புஷ்பா பீகார் பொண்ணாம்!) லாலுபிரசாத் அடிக்கிற லூட்டிகளைக் குறைக்க முடியுமான்னு பாரு. தொழுவத்துல போய் பால் கறக்கறாரு, சாணி அள்ளுறாரு, திடீர்னு போய் தனி நாடாளுமன்றம் நடத்துறாரு... என்னா லொள்ளு? பார்த்தா அதைக் கொஞ்சம் குறைக்கச் சொல்லு. தாங்க முடியலை!’’ & புஷ்பாவின் ஆசைக்கு மனிஷா தடா கொண்டு வந்து பேச்சை ஆரம்பிக்க...

‘‘அட, நிறுத்துங்கப்பா... நாளைக்கே பதவி கொடுத்திடுறாங்களாக்கும்? முதல்ல ரிப்போர்ட்டரா ஆகுறோமான்னு பாருங்க. பிறகு எடுக்கலாம் பேட்டி. இதுல எத்தனை பொண்ணுங்க படிப்பு முடிச்சதும், கல்யாணம், குழந்தை, குட்டின்னு போகப் போகுதுங்களோ? அதுக்குள்ள இத்தனை அலப்பறையா?’’ என்றார் லயோலாவின் பிரவீண். நாசயாவுக்கு சுளீரென வந்தது கோபம்.‘‘ஆமா, புள்ளகுட்டிகள் பெத்துக்கிடறது நாங்க மட்டுந்தானே? நாளைக்கே ‘யாரோ’ ஒரு பொண்ணு வந்து ‘கட்டிக்கிறீயா’ன்னு கேட்டா, இதுல எத்தனை பசங்கடா வேண்டாம்பீங்க?’’ என சீரியஸாகக் கேட்க, ஒட்டுமொத்தமாக கை தூக்கியது பாய்ஸ் குரூப்.

குழப்பத்தில் நாசயா நகம் கடிக்க, ‘‘ஹலோ... உங்க வீட்டுல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும். இங்க சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை செலக்ட் பண்ணிடலாம்னு பார்க்கறீங்களா? எங்ககிட்ட நடக்காது கண்ணு. அந்த யாரோ ஒரு பொண்ணு நீங்கதான்னு தெரிஞ்சுதான் எல்லோரும் கைதூக்குனோம்’’ என்றவர்கள், ‘‘நிஜந்தானே?’’ என உறுதிப்படுத்தக் கேட்டார்கள்.
‘‘நெசமாத்தான் சொல்றாய்ங்களா நாசயா?’’ & நாமும் கேட்டுத் தொலைக்க...‘‘நாளைக்கு எக்ஸாம்ப்பா. நான் கிளம்பறேன்’’ என்றபடி தோழிகளையும் கிளப்பிக்கொண்டு கிளம்பிவிட்டார் நாசயா.பசங்க அவசரப்பட்டுட்டாங்களே!

-குருவி ராஜன்