கவிதையால் காதல் வந்துச்சோ?



எழுதுகோலுக்கு மை போல காதலுக்குக் கவிதை. சினிமா பாடலாசிரியர்கள் உருகி எழுதும் பெரும்பாலான பாடல்களின் மையம் காதல். ‘‘உணர்வுகளே கவிதை... காதலிச்சாதான் கவிதை எழுத வரும் என்பதெல்லாம் சும்மா. மரணத்தைப் பற்றி எழுதுபவர்கள் அதை அனுபவித்துவிட்டா எழுதுகிறார்கள்?’’ என படபடத்த பாடலாசிரியர்களின் இளமை உணர்வுகளைத் தூண்டிய அந்தக் கேள்வி... ‘காதலிச்சாதான் கவிதை வருமா? கவிதையால ‘மடக்கின’ அனுபவங்களைச் சொல்லுங்களேன்!



பழநிபாரதி
காதலும் கவிதையும் & வருவது தெரியாமல் வானவில் போல வந்தபின் நம்மை வசீகரிப்பவை. காதலுக்கு கண்களில் இதயம் இருக்கிறது. கவிதையின் கண்கள் இதயத்தில் இருக்கின்றன. நிலவு தழும்பும் அவ்விழிகள் என் கவிதைகளிலும் மிதக்கின்றன. அந்த விழிகளுக்குப் பெயர் தேவையில்லை... காதலென்றே இருக்கட்டுமே!

நா.முத்துக்குமார்
‘காதல் எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அதை வாங்கிச்செல்லும் பாக்கியவான்களே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நான் ஏற்கனவே எழுதிய ஒரு கவிதையைப்போல எனக்கும் காதலுக்கும் காத தூரம். என் தலைக்குமேல் காதல் மேகங்கள் மழையாகப் பெய்து கொண்டிருக்கும்போது நான் குடை பிடித்தபடி கவிதையே எழுதிக் கொண்டிருந்தேன். அந்த மேகங்கள் காற்றில் களைந்துபோன பிறகுதான் காதலுக்கும் எனக்குமான இடைவெளியை உணரும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. ஆதலால் திருமணத்துக்குப் பிறகு மனைவியையும் மகனையும் காதலித்துக் கொண்டிருக்கிறேன். காதலிப்பவர்தான் காதல் கவிதை எழுத முடியுமென்றால் கொலை செய்பவர் மட்டும்தான் க்ரைம் கதையை எழுத முடியும்! எனக்குள்ளும் சில காதல்கள் இருந்திருக்கின்றன. முதல் காதல், பிஞ்சுக்காதல், பதின்வயது காதல் ரயில், பயணக்காதல், கல்லூரிக் காதல் என பட்டியலின் நீள அகலம் அதிகம்தான். இந்தக் காதல் சுவடுகளையெல்லாம் கடந்து செல்லாதவர்கள் இருக்கிறார்களா என்ன?’

சினேகன்
காதலிக்கிற எல்லோரும் கவிதை எழுதுறது இல்ல. ஆனா, கவிதை வந்தா காதலிக்க ஆரம்பிச்சிடுவாங்க. கவிதையால மடக்கினதை விட மடிஞ்சது அதிகம். என் கவிதையில இருக்குற சின்னச் சின்ன விஷயங்கள்ல கூட புளகாங்கிதப்பட்டுடுறாங்க. கவிதை எழுத வருவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி எனக்கு பெண்கள் மீது காதல் வந்ததே இல்ல. என் கவிதைகள் எனக்கு நிறைய தோழிகளை தந்திருக்கு. கவிதையைத் தவிர எதிலும் எனக்குக் காதல் இல்லை... இதை நீங்க நம்பியே ஆகணும்!

கபிலன்
காதலிச்சாதான் கவிதை வரும் என்பதை ஏத்துக்க முடியாது. கவிதைக்கும் காதலுக்கும் சம்பந்தமில்ல. கவிதை வாழ்க்கையின் பதிவு. அந்தப்பதிவு காதலைப் பற்றி இருந்தால் காதல் கவிதை. சமுதாயத்தைப் பற்றியதா இருந்தா சமூகக் கவிதை. கடல்ல ஒரு துளி மாதிரிதான் காதலைப்பற்றிய கவிதைகளும். நானும் காதலிச்சு கல்யாணம் செய்தவன்தான். ஆனா, அந்த காதலுக்கு முன்னாலயே கவிதை வந்திடுச்சு. பள்ளிப்பருவத்தில வருவதெல்லாம் காதல் கிடையாதுங்க. அது கிளர்ச்சி. அணுக்களோட திமிர். எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்கிறேன். தன்னை உணர்ந்து எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது வருவதுதான் காதல். என்னோடதும் அப்படித்தான். கவிதையால ரசிகர்கள், இயக்குநர்களை மடக்கியிருக்கேன். திரைப்பாடலாசிரியர் ஆக்கியது அந்த மடக்குதல்தான்!

இளையகம்பன்
காதலிச்சாதான் கவிதை வரும்னா தமிழ்நாட்டுல இருக்குற 6 கோடிப் பேர்ல முக்கால்வாசிப்பேர் கவிஞர்களாத்தான் அலைவாங்க. காதலிக்கக்கூடாதுனே வலியுறுத்தி எழுத இப்ப நிறைய கவிஞர்கள் உருவாகிட்டாங்க. எனக்கு காதல் வந்ததில்லை. என் வகுப்புத் தோழர்கள், நண்பர்கள் பலரோட காதலுக்காக என்னுடைய கவிதைகள் அதிகமா பயன்பட்டிருக்கு. ஆனா, அது காதலை வரவைக்கவில்லையே தவிர கண்ணீரைத் தந்தது மட்டும் உண்மை. நான் மடக்கியதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். என்றும் இளமையாக இருக்கும் ‘தமிழை’ மடக்கியதால்தான் அவள் எனக்குள் கவிதை எழுதும் ஆற்றலைத் தந்திருக்கிறாள். 

விவேகா
நான்காம் வகுப்பு படிக்கும்போதே கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இதுல இருந்தே தெரியலையா காதலுக்கும், கவிதைக்கும் சம்பந்தமில்லைனு. எப்பவுமே வகுப்புல முதல் மதிப்பெண் வாங்குற, சுமாருக்கும் குறைவா இருந்தாலும் அந்தப் பெண்ணுங்க மேல ஒரு ஈர்ப்பு வரும். நல்லவேளை எங்க கிளாஸ்ல அப்படிப்பட்ட பெண்கள் சுமாரா இருந்தது ஆறுதலான விஷயம். +2 படிக்கும்போது ஒரு பொண்ணு மேல ஆழமான ஈர்ப்பு வந்தது. ஆனா, காதலுக்குரிய முதிர்ச்சி அடையாத அந்த காலகட்டத்தை, வாழ்க்கைக்கான தேடலும் முயற்சியும் தாண்டி வரவைச்சது. சினிமாவுக்கு வந்த பிறகு நல்ல புரிந்துணர்வோடு என் மனைவியை காதலித்து கரம்பிடித்தேன். அவங்களக்கூட நான் கவிதையால மடக்கல.     
 
தொகுப்பு: ஆர்.எம்.திரவியராஜ்