7 மருத்துவர்கள்! - வலியில்லா மரணத்துக்காக வழிகாட்டும் கடவுள்கள்- திலீபன் புகழ்

‘‘சின்னதாக தலைவலி வந்துவிட்டால் போதும்... ‘பக்கத்தில் இருந்து யாராவது நம்மைக் கவனித்துக் கொள்ள மாட்டார்களா’ என்று மனம் ஏங்கும். அப்படியிருக்க, தனக்கென்று யாருமே இல்லாதவர்கள் யாரிடம் உதவி கேட்பார்கள்? காய்ச்சல், தலைவலி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் வந்தால் அவர்கள் எங்கு செல்வார்கள்?

மரணிக்கும் தருவாயில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ஆதரவற்றவர்களின் நிலை எங்களைத் தூங்க விடவில்லை. அதே நேரத்தில் இந்த மாதிரி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இனிமேல் யாரும் வலியுடனும், தங்களுக்கு யாருமே இல்லை என்ற வேதனையுடனும் மரணிக்கக்கூடாது...’’ மனித நேயம் பொங்க பேச ஆரம்பித்தார் மருத்துவர் பாலகுருசாமி.

மதுரை கடச்சனேந்தலில் ஏழு பேரைக் கொண்ட மருத்துவக்குழு ‘ஐஸ்வர்யம் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி மருத்துவ சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிதான் பாலகுருசாமி. அமுத நிலவன், சபரி மணிகண்டன், வித்யா மஞ்சுநாத், அறுவை சிகிச்சை நிபுணர் அருண் குமார், பிசியோ தெரப்பிஸ்ட் ரம்யா, நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் ஆகியோர் இதன் முக்கிய தூண்கள்.

வாழ்க்கையின் இறுதி நாட்களை வலியுடன் கடத்திக் கொண்டிருக்கும் ஆதரவற்றவர்களைத் தங்களுடைய வலி நிவாரண மையத்துக்கு அழைத்து வந்து இலவசமாக சிகிச்சை அளிப்பதே இவர்களின் முதன்மையான பணி. ‘‘இன்றைக்கு எந்த வலியும் இல்லாமல் இயற்கையாக, நிம்மதியாக மரணிப்பது குறைந்துவிட்டது. கடுமையான நோய், அது தரும் வலிகளுடன்தான் மரணத்தை பலர் சந்திக்கின்றனர். வசதி வாய்ப்புடன் இருப்பவர்கள் அந்த வலிகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்கின்றனர்.

இதற்காக பல மருத்துவ மையங்கள் இருக்கின்றன. ஆனால், ஏழைகளின் நிலை அப்படியில்லை. ஏழ்மையில் பிறந்து, வளர்ந்து, தங்களுடைய இறுதி நாட்களையும் ஏழ்மையிலேயே வலியுடன் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். பணம் இல்லாமல் மருத்துவ உதவி ஏதும் பெறமுடியாமல் வீட்டிலேயே தங்களின் இறுதி நாட்களை மிகுந்த வலியுடன் எதிர் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எங்களால் அப்படி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்றும் மனம் அடித்துக்கொண்டே இருந்தது. இவர்களுக்காகவே ஏழு டாக்டர்கள் ஒன்றிணைந்து இந்த சேவை மையத்தை ஆரம்பித்தோம்...’’ என்கிற பாலகுருசாமி தங்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘அமுதநிலவனும், சபரி மணிகண்டனும் என்னுடன் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். படித்துக் கொண்டிருக்கும்போது அமுதநிலவனின் அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார். மரணத்துக்கு முன்பு தாங்கமுடியாத வேதனையிலும், வலியிலும் அவர் துடித்ததை அருகில் இருந்து பார்த்தோம். அதைப்பற்றி இப்போது நினைத்தாலும் தூக்கமே வராது. அன்றிலிருந்து, வலியுடன் இறக்கும் தருவாயில் இருப்பவர்களைத் தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஒரு நாள் பார்வையும், சுய நினைவையும் இழந்த வயதான பெண் ஒருவரைச் சொந்த மகனே சாலையில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அவருக்கு நண்பர் மணிகண்டன்தான் சிகிச்சை தந்தார். அடுத்து உடல் முழுவதும் புண் வந்து சீழ் பிடித்த முதியவர் ஒருவரைச் சந்தித்தோம். இந்த நிகழ்வுகள் எல்லாம் எங்களைப் பாதித்தது. இவர்களுக்காக நாம் இருப்போம் என்று முடிவு செய்தோம். இதற்காக சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினோம்.

வயதாகி, நோய்வாய்ப்பட்டு, குணப்படுத்த முடியாமல் இருக்கும் மனிதர்கள், வாழ்க்கையின் கடைசி  கட்டத்தில் இருப்பவர்கள், சாலையோர முதியவர்கள் என நாங்களே தேடிச் செல்கிறோம். சிலரை வலியில் இருந்து குணப்படுத்தி அவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம்...’’ என்ற பாலகுருசாமியைத் தொடர்ந்தார் அமுதநிலவன்.

‘‘இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் வலியால் துடித்து இறக்கிறார்கள். அதுவும் மீள முடியாத மரண வலி. புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் வலியின் கொடுமை புரியும். இப்படி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்.

ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லாதவர்கள். மல ஜலத்தைச் சுத்தம் செய்யக்கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோராகவும் இருப்பது இன்னும் கொடுமை...’’ என்றவர் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளியைக் காணக் கிளம்பினார். அந்த மையத்தில் மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறை.

மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள். தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் நோயாளிகளை கவனிக்கிறார்கள். இரவும், பகலும் செவிலியர்களும், மற்றவர்களும் நோயாளிகளுடன் இருக்கிறார்கள். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, இறுதிக் காலம் வரை நோயாளிகளைப் பராமரிப்போம்.

எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை சிலர் வாங்கித் தந்து உதவுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக் கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாபர்’ காட்டன்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன. மரணத்தின் பிடியில் இருக்கும் இந்த மனிதர்களுக்காக மருத்துவம் பார்ப்பதில் உண்மையிலேயே ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதுதான் எங்களை தொடர்ந்து இதில் இயங்க வைக்கிறது..!’’ நெகிழ்வுடன் முடித்த  அருண்குமாருக்கும், அவரின் குழுவுக்கும் ஒரு சல்யூட்!                 

படங்கள்: அர்ஜுன்

நில தானம்

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொது மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஷைலஜா. தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி அறிந்து தங்கள் செலவிலேயே பத்திரம் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்போது அதில் கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.