இந்தியாவின் உடன் பிறவா சகோதரர்கள்!



பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், ரயில் சிநேகமாக வழித்தடங்களில் பூக்கும் ‘இன்ஸ்டன்ட்’ நட்பு என்றாலும்... நமது வாழ்வில் அவசியமான ஓர் உறவாக அது மாறிவிடுகிறது.

வெவ்ேவறு சூழ்நிலை மற்றும் தருணங்களில் இவை ஏற்பட்டாலும் அதில் எது உண்மையான நட்பு... அதன் ஆழம்தான் என்ன... என்பதில் நமக்குள் எப்போதும் ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் அந்த நட்பைக்கண்டு உடன் இருக்கும் உறவுகள் பொறாமைப்பட்டாலும், நட்புக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான உணர்வைப் புரிந்துகொள்ளுதல் கடினம்.அம்மாதிரியான அபூர்வமான நண்பர்கள் தங்களது நட்புக்காக உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர எந்த சூழ்நிலையிலும் தங்களுக்குள் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்.

‘உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக் கூறும் துணிச்சலுடன் மேலும் மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார்’ என்று நட்பு குறித்து கூறுவார்கள். அப்படி ஒரு நட்பை இன்று கண்கூடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலம்... 15 வயதில் குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தின் வாத் நகர் ரயில் நிலையத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து டீ விற்றுக் கொண்டிருந்த சிறுவனை யாரும் பெரிதாக நினைத்திருக்க மாட்டார்கள்.

விவரம் அறியாத 8 வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்த அந்தச் சிறுவன் தனது 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி இமாச்சல் மலைப்
பகுதிகள் உட்பட நாட்டின் பலபகுதிகளில் தேசாந்திரியாக சுற்றித்திரிந்து 2 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பினார்.அங்கும் இருக்க விரும்பாத அவர், 1971ல் அகமதாபாத்திலுள்ள குஜராத் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கேன்டீன் நடத்தி வந்த தனது மாமாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்தச் சிறுவனுக்கு வயது 21 இருக்கும். தன்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர பிரசாரகராக இணைத்துக் கொண்டதுடன் இளைஞர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரீஷத்தையும் கவனித்து வந்தார்.

அப்படியே தில்லி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸில்’ பிஏ பட்டமும், தொடர்ந்து குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பட்டமும் பெற்றார்.பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ெநருங்கிப் பழகும் இந்த இளைஞரை, 1982ல் பி.எஸ்சி ‘பயோகெமிஸ்ட்ரி’ படித்த மற்றொரு இளைஞர் சந்தித்தார்.

அன்று தொடங்கிய இவர்கள் இருவரது நட்பு, இன்று இந்திய அரசியலில் பலவித கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்தகால இந்திய அரசியல் வரலாற்றில் கோலோச்சிய பெருங் கட்சிகளுக்கு இவர்கள் இருவரும் சிம்ம சொப்பனமாகி உள்ளனர்.

முதலில் கூறிய இளைஞர்தான் இன்று 2வது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடி எனப்படும் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி!
அவருடைய நம்பிக்கைக்குரிய, 1982ல் பயோகெமிஸ்ட்ரி படித்த இளைஞர்தான் இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷா!
அமித் ஷா மும்பையில் பிறந்திருந்தாலும், இவரது தந்தை அனில்சந்திர ஷா பிவிசி பைப் உற்பத்தித் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். குடும்பம் குஜராத்துக்கு இடம்பெயர்ந்த பின், தன் தந்தையைப் போல தொழிலதிபராக வேண்டும் என்று கனவு கண்ட அமித் ஷா, கல்லூரிப் படிப்பை படித்துக்கொண்டே, பங்குச்சந்தை முதலீட்டிலும், தந்தையின் தொழிலிலும் கவனம் செலுத்தி வந்தார்.

மோடியின் சந்திப்புக்குப்பின், ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.1986ல் மோடி ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்டபோது அமித் ஷாவும் பாஜகவில் இணைந்தார். 1991ல் நடந்த மக்களவைத் தேர்தலில், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானிக்காக பரபரவென வேலை பார்த்தார். இதன் விளைவாக 1997ல்  முதல்  முறையாக சர்கேஜ் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இதே தொகுதியில் 4 முறை சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது, அவரது அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட முக்கியமான 12 துறைகளுக்கு அமைச்சரானார்.
குஜராத்தில் மோடிக்கு அடுத்த இடத்தை அலங்கரித்தாலும், 2005ல் நடந்த என்கவுன்ட்டரில் சோரப்தீன் ஷேக் கொல்லப்பட்ட போது அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில் 2010ல் அமித் ஷா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சோரப்தீனின் நண்பர் துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர், இஸ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர், இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட புகார், குஜராத் கலவரம் என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒருகட்டத்தில், குஜராத்தைவிட்டே அமித் ஷா வெளியேற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்படி வெளியேறி, 2014 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வெற்றிபெறச் செய்வதற்காக அங்கே முகாமிட்டார். பிரசாரத்தில் இரு சமூக மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதால், அவரை பொதுக்கூட்டங்களில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் அமித் ஷா மன்னிப்புக் கேட்டார். எனவே ,அவர் மீதான தடை நீக்கப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் மாநிலத்தின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக ஒட்டுமொத்தமாக அள்ளியது.மத்தியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி 2014ல் மோடி பிரதமரானார். கட்சியின் தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து காலியாக இருந்த பாஜக தேசியத் தலைவர் பதவியில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் அமித் ஷாவை அமர்த்தினார் மோடி.

அன்று முதல் பல மாநிலங்களில் தொடர் வெற்றிகளைக் குவித்த மோடி - அமித் ஷா கூட்டணி, 2018 டிசம்பரில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பெரும் சறுக்கலைச் சந்தித்தது. ‘அடுத்து வரும் மக்களவை தேர்தலில், பாஜக ஆட்சி முடிந்துவிடும்’ என்று கணிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.

இவர்களின் நட்பு மற்றும் ெவற்றி குறித்து, இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களும் இப்போது விவாதிக்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் மத்தியில் இறங்கி சாதுரியமாக இந்துத்துவா கருத்துக்களை எளிமையாகப் பேசி குறிப்பான இலக்குடன் அமைப்பாக்குவதில் அமித் ஷா திறமைசாலி.

நாட்டின் வளர்ச்சி என்ற கோணத்தில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதனை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதில் கைதேர்ந்தவர் மோடி. இருவரும் வெவ்வேறு கோணங்களில் பயணித்தாலும், இந்துத்துவா - வளர்ச்சி என்ற மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவேதான், ‘‘கற்பனை வளம்மிக்க சிந்தனைகளும், கட்சியை அமைப்பு ரீதியாக வழிநடத்தும் உத்தியும் அமித் ஷாவிடம் நிரம்பவே உள்ளன’’ என்கிறார் ராஜ்நாத் சிங். மோடி - அமித் ஷா ஆகிய இருவர் மீதும் எத்தனையோ நீதிமன்ற வழக்குகள், அரசியல் சதி, சர்வதேச மிரட்டல்கள், உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல், பொதுவெளியில் நடத்தப்படும் கடுமையான விமர்சனங்கள்... எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

என்றாலும் இருவரும் ஒருசேர அவற்றை எல்லாம் ஏற்கிறார்களே தவிர, பிரச்னையான நேரத்தில், ‘அவர்தான் காரணம்’ என அடுத்தவரைக் கைகாட்டவில்லை; சிக்க வைக்கவில்லை.இவர்கள் இருவரையும் அரசியல் ரீதியாக பிரிப்பதற்கு கட்சிக்குள் பல சதிவேலைகள் நடந்தாலும், அதையெல்லாம் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் புரிதல் இன்றுவரை வலுவாகவே உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் 7ம் கட்ட தேர்தல் பிரசார நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அப்போது மோடி அமைதியாக இருந்தார். உடன் இருந்த அமித் ஷாதான் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார்! ‘‘இந்தச் செய்தியாளர் சந்திப்பை கட்சியின் தலைவர் அமித் ஷாதான் நடத்துகிறார். பாஜகவில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்...’’ என இதற்கான காரணத்தை மோடி தெரிவித்தார்.
 
‘மைக்’ நீட்டும் இடமெல்லாம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், மோடி - அமித் ஷா நட்பு ஆழமானதாகவும் மர்மம் நிறைந்ததாகவும் பார்க்கப்படுகிறது.  

செ.அமிர்தலிங்கம்