`மார்க் ஷீட்




''அப்பா’’ என செல்லமாய் மகள் நிம்மு கூப்பிட...
‘‘என்ன?’’ & அப்பா நாணாவின் அவசரக் கேள்வி.
‘‘பயமாயிருக்குப்பா... ரேங்க் கார்ட்!’’
‘‘மறுபடி எட்டாவது ரேங்க்கா? கணக்கில் 80 மார்க்தானே?’’ & சிம்ம உறுமல்.
‘‘நானும் டீச்சர். அப்பாவும் டீச்சர். ட்யூஷன் வைச்சு சொல்லித் தந்தும், ஒரு தரம்கூட முதல் ரேங்க் வாங்கல...’’ & அம்மா மல்லிகா சத்தம் போட...
வேலைக்காரி, ‘‘உம் போ... போ’’ என்று ஜாடை காட்ட...
அப்பாவிடம் மெல்லச் சென்றது குழந்தை நிம்மு.
‘‘என்ன மார்க்?’’
வாங்கிப் பார்த்தார் அப்பா. தூக்கிவாரிப் போட்டது.
‘பெற்றோர் பாசம் & 20 மார்க்
கவனிப்பு & 15 மார்க்
டிரஸ், குளியல், மேக்கப் & 12 மார்க்
சாப்பாடு போடுவது & 0 மார்க்
மொத்தத்தில் ஃபெயில் & பெற்றோராக.’
‘‘ஏய், நீயா எழுதினே...’’ & நாணா கத்த...
வேலைக்காரி ஜாடை காட்ட...
‘‘இல்லை... இதுவும் டீச்சர் போட்டது’’ என்றது குழந்தை நிம்மு.
ரெண்டு டீச்சரும் பெற்றோராக சற்று நேரம் கண்ணீர் விட்டனர்.
வேலைக்காரிக்கு நன்றி சொன்னது குழந்தை.                     

- மாதவி