சிறுகதை -படிப்பு



பாத்திரம் மலையாகக் குவிந்திருந்தது. நேற்று இரவு ஜமுனாவின் அண்ணன், அக்கா வீட்டினர் விருந்துக்கு வந்திருந்தனர். அத்தனை பேருக்கும் சமைத்து ஒழித்துப் போட்டிருந்த ஸின்க் கொள்ளாத பாத்திரங்கள்! கீழே 4 குக்கர்கள், வாணலிகள் வேறு இருந்தன.சரஸ்வதி வேலைக்கு அஞ்சுபவள் அல்ல. அதுவும், தான் செய்யும் வேலையைமிகுந்த ஈடுபாட்டுடன் செய்வாள். ஜமுனாம்மாவே சொல்வார்கள், ‘‘எங்க சரஸ்வதி தேச்சு வச்சா, குத்துவிளக்கு தங்கம் மாதிரி பளபளக்குது...” என்று.

“சரசு! இந்த காப்பிய குடிச்சிட்டு வேலை செய்...” பெரிய டம்ளரில் சுடச்சுட காப்பியைக் கொடுத்தாள் ஜமுனா.எட்டு வருடங்களாக அங்கு வீட்டு வேலை செய்யும் சரஸ்வதியை தங்கள் வீட்டில் ஒருத்தியாகத்தான் அங்கே எல்லோருமே கருதி வந்தார்கள்.‘அம்மா அம்மா... நீ எங்க அம்மா...’சரஸ்வதியின் போன் அடித்தது. பெரியவன் அன்புதான் தன்னுடைய நம்பரிலிருந்து போன் வந்தால் இந்த பாட்டு கேட்குமாறு ரிங்டோன் செட்டப் செய்திருந்தான். போனை  எரிச்சலோடு எடுத்தாள்“என்னடா வேலைக்கு நடுவில்... இதோட நீயும் செந்திலும் மாத்தி மாத்தி போன் போட்டுகிட்டே இருக்கீங்க. என்ன விஷயம், சொல்லு?”

“யம்மா துண்ண எதுமே இல்ல... நான் வேலைக்கு போவணும். செந்திலு கபடிக்கு போவணும். என்னா துண்ண?”

“புகழ் எங்கடா தொலைஞ்சு போனா? அப்பலேர்ந்து அவள காணுன்றீங்க? வூட்டுல சமயல் பண்ணாத எங்க்கதான் போச்சு கழுத. கீழ போயி, ரேஷன் கடையண்ட போயி எங்கனா பாருங்க. காலைலேர்ந்து காணுன்றீங்க...”“யம்மா நல்லா தேடிட்டோம்மா... புகழ் எங்கியுமே இல்ல. காலைல மூணு மணிக்கு பேக் எடுத்துட்டு படியிறங்கி போச்சுன்னு கீழ செல்வா அம்மா சொல்லிச்சு. கேட்டா உன்னோட ஊருக்கு போறேன்னு சொல்லிச்சாமா...”“என்னடா இடிய போடுற! நான் கிளம்பி வரும்போது இருந்திச்சே... நான்தான் கவனிக்கலையா? சரி இரு நா வரேன்...”

போனை வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தபடி யோசித்தாள். காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு கிளம்பினாள் சரசு. அப்போது பக்கத்தில் வரிசையாக மூன்று பிள்ளைகளும் போர்வைக்குள் முடங்கி இருந்தனர். ‘அப்ப புகழு போர்வைக்குள்ள இல்லையா? எங்க போயிருப்பா?’கொஞ்சமாக பயம்  சுருண்டு வயிற்றைக் கலக்கியது.

காலையில கிளம்பிய சரசு, முதலில் ஸாஸ்தா பிளாட் வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு, இதோ இந்த பில்டிங் முதல் மாடியில் டீச்சர் வீட்டில் வேலையை முடித்துவிட்டு, ஜமுனா அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள்.சர்ச்சில் மணியடித்து காலை 11:00 என்று சொன்னது. ‘எங்கே போயிருப்பாள் புகழ்?’

மறுபடி சரசுவின் போன் அடிக்க “சரசு வேலை கொட்டிக்கிடக்கு. ஆபீஸர் மாதிரி உனக்கு மாத்தி மாத்தி போன்! அதை ஆப் பண்ணி உள்ள போடு. அப்பதான் வேலையாகும்...” கடுகடுத்தாள்  ஜமுனாம்மா. “இல்லம்மா இது ஒரு போன் எடுத்துக்கறேன்மா...” சரசு போனை எடுத்தாள். திருவள்ளூரில் இருந்து அவளுடைய அத்தைதான் பேசினாள்.“சரசு உன் பொண்ணு புகழ் நம்ம தலைல கல்ல போட்டுட்டாடி...” ஓவென்று அத்தை அழுததில் சரசு பதறிவிட்டாள்.“என்னத்த... என்ன ஆச்சு? புகழுக்கு என்ன ஆச்சு? இங்க அவள காணும்னு தேடறோம்...” உடல் நடுங்கக் கேவினாள் சரசு.

“நீ மொதல்ல அன்ப கூட்டிட்டு இங்க கிளம்பி வா. புகழ் இங்கனதான் இருக்கு. பாவி மக செஞ்சிருக்கற வேலைய வந்து பாரு...”தன் பெண் அங்குதான் இருக்கிறாள் என்ற செய்தி மனதுக்கு சமாதானத்தை அளித்தாலும், ‘இவள் ஏன் அங்கே போனாள், சொல்லாமல் ஏன் போனாள், அம்மா இல்லாமல் வீட்டு வாசல்படி இறங்காதவள் எப்படி அவ்வளவு தூரம் போனாள்’... மனதுக்குள் பல கேள்விகள் அலைமோத பரபரவென்று அரைமணியில் வேலையை முடித்துவிட்டு கிளம்பினாள் சரஸ்வதி.

திருவள்ளூர் பக்கத்தில் பூக்காடு என்ற கிராமம்தான் சரஸ்வதியின் ஊர். பெயருக்கு ஏற்றாற்போல் சாமந்தி, சம்பங்கி என்று  பூக்கள் பூத்துக் குலுங்கும் ஊர். அந்தப் பூக்களின் மொத்த வியாபாரம்தான் அங்கு பலருக்கும். சரஸ்வதியின் அப்பா ராமசாமியும்  தன்னுடைய தோட்டத்தில் சாமந்தி பயிரிட்டு விற்று வந்தார். இரண்டு பெண்கள். லட்சுமி, சரஸ்வதி. மனைவி செங்கம்மா. இரண்டு பெண்களுக்கும் படிப்பு சுத்தமாக ஏறவில்லை. நாலாவது தாண்டவும் இல்லை. லட்சுமியை தங்கை மகனுக்கே கட்டிக் கொடுத்தார். சரஸ்வதியை சென்னையிலிருந்த தன் பள்ளித் தோழன் சுடலையின் மகன் செல்வனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பூவாயி அம்மன் குடி கொண்டு கோலாகலமாக இருந்த பூக்காட்டில், டாஸ்மாக் வாசம் வீச, கிராமத்தில் இருந்த எல்லா ஆண் சிங்கங்களும், சரஸ்வதியின் அப்பா ராமசாமி உட்பட, குடியில் விழுந்தார்கள். போதையே உலகம் என்றாகியதில் ராமசாமிக்கு  விவசாயம் போய், உழைப்பு போய், வருமானம் போய், பிறகு நிலமும் போனது. லட்சுமி புருஷன் உள்ளூரிலேயே லோடு வண்டி ஓட்டும் டிரைவராக இருந்தான். சரஸ்வதியின் புருஷன் சென்னையில் கோயம்பேட்டில் கூலி வேலை பார்த்து வந்தான்.

சரஸ்வதிக்கு அன்பரசு, புகழரசி, செந்திலரசு என்று மூன்று குழந்தைகள். கணவனின் வருமானம் போதாமல் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தாள் சரசு.இனிமேல் கொஞ்சம் நன்றாக வாழ்வோம் என்று கனவு கண்ட சரசுவின் ஆசை அரும்புவதற்கு முன்பே கருகியது. முதுகில் மூட்டையுடன் குனிந்து நடந்து கொண்டிருந்த செல்வனின் மேல் ரிவர்ஸில் வந்த லோடு லாரி ஏறியதில், பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தும் பலனின்றி உயிரை விட்டான் சரஸ்வதி புருஷன். அப்போது அன்புக்கு வயது பன்னிரண்டு.மூன்று குழந்தைகள் பசியோடு அம்மாவின் முகத்தைப் பார்த்து ஏங்கும் போது அழுது மூலையில் உட்காரக் கூட நேரமில்லாமல் உழைத்துத் தேய்ந்தாள் சரசு.

தான் மட்டும்  நாலு எழுத்து படித்திருந்தால் வாழ்க்கையே வேறுவிதமாக மாறியிருக்குமே என்று இப்போது வருந்தினாள். தன் குழந்தைகளிடம் படிப்புதான் உயர்வு என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள். மன உறுதியோடு நேர்மையாக வாழ்ந்து நிமிர்ந்து நின்றாள். யாரிடமும் அனாவசியமாக நின்று பேசி சிரித்து என்று எந்த குணமும் அவளுக்குக் கிடையாது. அவள் குழந்தைகளுக்கும் கிடையாது.

மானம் மரியாதைதான் முக்கியம் என்று தீர்மானமாக வாழ்ந்தாள் சரசு. அவள் வேலை செய்த வீடுகள் உதவ, குழந்தைகளைப் படிக்க வைத்தாள். பெரியவன் அன்பரசு பிபிஏ படித்து, ஜமுனாம்மாவின் கணவர் உதவியதில் இன்று பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்ந்துவிட்டான். டீச்சரம்மா புண்ணியத்தில் புகழரசி பிகாம் சேர்ந்து இரண்டாம் வருடம் இப்போது! செந்தில் பிளஸ்-2.அதோடு வாலிபால் டீமிலும் இடம் பெற்று மேட்ச் விளையாடி நல்ல ஸ்போர்ட்ஸ்மேன் ஆகிக் கொண்டிருக்கிறான்.

‘சரஸ்வதி மாதிரி இருக்கணும். அவள மாதிரி புள்ளங்கள வளக்கணும்’ என்று அவள் வீட்டு அருகில் எல்லோருமே சரஸ்வதியைத்தான் உதாரணம் காட்டுவார்கள்.
“ஏம்மா ஒண்ணும் பேசாம கம்முனு நிக்கிற? உங்கம்மா வந்திருக்காங்க... அண்ணன் வந்திருக்கான். ஏதாவது பேசும்மா...”அது ஒரு போலீஸ் ஸ்டேஷன். பூக்காடு கிராமத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாலூர் போலீஸ் ஸ்டேஷன். அங்குதான் சரஸ்வதியும் அன்பரசுவும் வந்திருக்கிறார்கள். அவளோடு அவள் அத்தை, அப்பா, அம்மா, லட்சுமி, அவள் புருஷன், இன்னும் சொந்தக்காரர்கள் என்று பத்துப் பதினைந்து பேர் வந்திருந்தார்கள்.

அத்தனை பேர் முகத்திலும் கொப்பளிக்கும் கோபம். எதிரில் மாலையும் கழுத்துமாக ஈரம் காயாத புதுத் தாலியோடு புகழரசி நிற்க, அவள் அருகில் கழுத்தில் மாலையோடு வீராசாமி தெரு மாரியம்மாவின் மகன் தன்ராசும் நின்று கொண்டிருந்தான்.அவர்களைச் சுற்றி மாரியம்மாள், அவள் உறவினர்கள், கொஞ்சம் ஊர்க்காரர்களும். அவர்களும் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். அத்தை போனில் சொன்ன செய்தி கேட்டு அலறித் துடித்து அன்பரசுவுடன் வந்திருந்தாள் சரஸ்வதி.

எப்படிப் பழகினார்கள், என்ன ஆனது என்றே தெரியவில்லை. பூக்காடு கிராமத்திலிருந்து பிளசர் கார் எடுத்துக்கொண்டு செல்வாவும் அவள் இரண்டு நண்பர்களும் சென்னைக்கு வர, யாருக்கும் தெரியாமல் பேசி வைத்துக் கொண்டபடி அவர்களுடன் விடியற்காலை கிளம்பியிருக்கிறாள் புகழரசி.

வழியில் ஒரு கோயிலில் கல்யாணம் முடித்து  அப்படியே பூக்காடு ஊர் வந்து சேர, ஊருக்குள் விஷயம் பத்து நிமிடத்தில் பரவி விட்டது. விஷயம் கேள்விப்பட்ட சரஸ்வதியின் அத்தைதான் அவளுக்கு போன் செய்து வரவழைத்திருக்கிறாள். லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போனபோது புகழுக்கும் தன்ராசுக்கும் பழக்கம் வந்திருக்கும் என்று சொல்கிறது ஊர்.

அப்பா இல்லாத தன்ராசுக்கு அத்தனை கெட்ட பழக்கங்களும் இருந்தன. படிப்பு ஆறாவது பெயில். புகழுக்கு இப்போதுதான் 18 வயசு முடிந்திருக்கிறது. தன்ராசுக்கு முப்பத்தி இரண்டு. தன்ராசின் அம்மாவே மகன் செய்திருக்கும் காரியத்திற்கு அவனைத் திட்டி அடித்திருக்கிறார். இரண்டு பக்கமும் சண்டை போட்டு ஊரில் பெரிய ரகளையாகிவிட, எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டனர்.

அங்கு வைத்துதான் சரஸ்வதி தன் மகளின் திருட்டுக் கோலத்தைப் பார்த்தாள். மகளைப் பார்த்து எதுவுமே பேசவில்லை. அழவும் இல்லை. அப்படியே இடிந்து போய் நின்றுகொண்டிருந்தாள்.

இன்ஸ்பெக்டர்தான் மனசு தாங்காமல் புகழிடம் சொன்னார்,  “இதெல்லாம் வயசுக்கோளாறு. நாங்க எத்தனை பேரைப் பார்க்கிறோம்! அந்தப் பையன் குடிகாரன். உன்ன விட 14 வயசு பெரியவன். படிக்காதவன்.

சென்னையில நீ பிகாம் படிக்கிறன்னு சொல்றாங்க. படிச்ச பொண்ணு இப்பிடி போயி கெணத்துல விழுவியா? பேசாம உங்க அம்மா, அண்ணனோட கிளம்பிப் போயிரு. அதுதான் நல்லது. நா போலீஸ்காரன். ஊர்க்காரங்க சொல்ற மாதிரி உங்களைப் பிரிக்க என்னால சட்டப்படி முடியாது. ஆனா, ஒரு அப்பனா சொல்றேன். இது கல்யாணமே இல்லை. மாலைய கழட்டி கடாசிட்டு உங்க அம்மாவோட போயிடு. என்ன சொல்ற?”

உண்மையான ஆதங்கத்தில் சொன்ன இன்ஸ்பெக்டரை அவசரமாகத் தடுத்துப் பேசினாள் புகழரசி. “இல்ல சார்,  நான் போகமாட்டேன். எங்களுக்கு மேரேஜ் ஆயிட்டுது. எனக்கு
அவருதான் வேணும்...”எல்லாம் தெரிந்தவள் மாதிரிப் பேசும் புகழின் பதிலைக் கேட்டு அவளை ஊடுருவிப் பார்த்தாள் சரஸ்வதி. தனக்குப் பின்னால் மறைந்து மறைந்து பயத்துடன் நடக்கும் புகழா இது? படிப்பு முக்கியம், மானம் தான் பெரிது என்று சொல்லிச் சொல்லி வளர்த்த தன் மகளா இவள்?

‘அம்மா... நான் படிச்சு சம்பாரிச்சு, உன்ன கார்லயும்,ப்ளேன்லயும் கூட்டிட்டு போறேம்மா’ என்று, பாத்திரம் தேய்த்து காய்த்துப் போன தன் விரல் பிடித்து பேசிய சின்னப் பெண்ணா இவள்? சே... வெறுப்பிலும் கோபத்திலும் மனதிற்குள் விஸ்வரூபம் எடுத்தாள் சரஸ்வதி.

“அன்பு இவ என்னடா வரமாட்டேன்னு சொல்றது, எனக்கு இனிமே இவ வாணாம்டா. இவ்ளோட படிப்பு இவளுக்கு வாழ்க்கைன்னா என்னாங்கற புத்திய குடுக்கல. வளத்த அம்மாவ நம்பாம வூட்டவிட்டு ஓடிவந்திருக்கா. அப்படி தேடி வந்த ஆளு சரியில்லேன்றதும் கண்ணுக்கு தெரில. இப்டி ஒரு பொண்ணு எனக்கு வாணாம்டா.

இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி எழுதிக் குடுத்துடு. இதுக்கு மேல நமக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதிக்குடுத்துட்டு  வாடா...”ஊரே வேடிக்கை பார்க்க, நிமிர்ந்து புடவையைச் சரிபண்ணிக்கொண்டு விருட்டென்று திரும்பி வாசலை நோக்கி நடந்த சரஸ்வதிக்கு படிப்புதான் இல்லையே தவிர தன்மானம் கிரீடமாக ஜொலித்தது.

கிரிஜா ராகவன்