ஹோன்ஸ்லா ராக்
எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? உடனே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் பஞ்சாபி மொழித்திரைப்படமான ‘ஹோன்ஸ்லா ராக்’கைப் பாருங்கள்.துடிதுடிப்பான இளைஞன் யென்கே சிங். ஸ்வீட்டியைக் காதலித்து திருமணம் செய்கிறான். ஸ்வீட்டி கர்ப்பமடைகிறாள்.
 அவளுக்கு நிறைய கனவுகள். அதனால் அவளுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் கொஞ்சம்கூட விருப்பமில்லை. மகனைப் பெற்றுக்கொடுத்துவிட்டு யென்கேவிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறாள் ஸ்வீட்டி. மகனுக்குப் பெயர் ஹோன்ஸ்லா. வேலையும் பார்த்துக்கொண்டு மகனையும் வளர்ப்பது யென்கேவுக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு சில மாதங்களே ஆன ஹோன்ஸ்லாவைத் தத்துக் கொடுக்கிறான். ஹோன்ஸ்லா இல்லாதபோது அவனின் அருமையை உணரும் யென்கே குழந்தையைத் திரும்ப பெற்றுக்கொள்கிறான். ஹோன்ஸ்லாவும் சுட்டியான சிறுவனாக வளர்கிறான். மகனுடன் சேர்ந்து புதிய அம்மாவைத் தேடப் புறப்படுகிறார் யென்கே. ஹோன்ஸ்லாவுக்கு அம்மாவும், யென்கேவுக்கு மனைவியும் கிடைத்தார்களா என்பதே நகைச்சுவை திரைக்கதை.
படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது திரைக்கதை. யென்கேவாக நடித்து படத்தை தயாரித்திருக்கிறார் தில்ஜித். படத்தின் இயக்குநர் அமர்ஜித் சிங். இதுவரை வெளியான பஞ்சாபி திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது ‘ஹோன்ஸ்லா ராக்’.
|