ஜெட் வேகத்தில் பறக்கும் தமிழ்நாடு தொழில்துறை!
முதல்வர் வைத்த இலக்கு...கூடவே சில கண்டிஷன்ஸ்... ஜெட் வேகத்தில் பறக்கும் தமிழ்நாடு தொழில்துறை!விவரிக்கிறார் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
கோவை கொடிசியா தொழில் கண்காட்சி அரங்கில் ‘முதலீட்டாளர் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் 35,208 கோடி முதலீட்டில் 76,795 நபர்களுக்கு வேவைாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 54 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாடு; தொழில் துறை வளர்ச்சியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்; தமிழ்நாடு முழுவதும் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்… என பல கேள்விகளோடு, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனான ஓர் உரையாடல்.
 இந்த தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
முதற்கட்ட மிகப்பெரிய நன்மை ஆயிரக்கணக்கான இளைஞர்கள், படித்தவர்கள், வேலைவாய்ப்பு இன்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமில்லாமல் பரவலாக மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சிக்கு ஒப்பந்தங்கள் வழிவகுக்கும். இதன் மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2030ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கன் டாலராக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார். அதற்கு இவை பெரிய அளவில் உதவி செய்யும்.
 தமிழ்நாடு முழுவதும் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் என்ன?
தொழில் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மையம் கொண்டிருக்கிறது. ஒரகடம், இருங்காட்டுப்படை, பிள்ளைப்பாக்கம், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என சென்னையைச் சுற்றியே இருந்துள்ளது. 90களின் இறுதியில் பெரிய அளவில் கார் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பெரும் கனரக தொழிற்சாலைகள் சென்னையை மையமாக வைத்து உருவாகின. அதற்கு முக்கிய காரணம் சென்னையின் சர்வதேச அளவிலான விமான நிலையம், பெரிய துறைமுகம். அதே போல் கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை மற்றும் திருச்சி குறிப்பிட்ட அளவில் சிறு, குறு தொழில்களுக்கான இடமாக இருக்கிறது.
 ஆக இந்த தொழில் வளர்ச்சி சமச்சீர் வளர்ச்சி ஆகவேண்டும். எனவே, தமிழ்நாட்டில் வாய்ப்பு இருக்கக்கூடிய பிற இடங்களுக்கும் கொண்டு போக வேண்டும். தெற்கே எல்லாவிதமான வசதிகள் இருந்தாலும் கூட பெரிய அளவில் தொழில் வளர்ச்சி வரவில்லை. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், ஏர்போர்ட் இருக்கிறது. ஆக, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெரிதாகக் கொண்டு வர வேண்டும்.
அதே நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் போன்ற வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே இருக்கிறது. அங்கேயும் அடிப்படையாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழில் வளர்ச்சி வந்தால்தானே வேலைவாய்ப்பு வரும். இதையெல்லாம் உள்ளடக்கித்தான் பரவலாக தொழில் அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள மனித வளத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம்?
இந்த விஷயத்தில் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலம். இந்தியாவில் இருக்கக் கூடிய மிக முன்னணி கல்வி நிறுவனங்கள் சென்னையில் இருக்கின்றன. திறமையானவர்கள் படித்து வருகிறார்கள். அந்தக்காலத்திலேயே தமிழ் நாடு முழுவதும் பெரிய அளவில் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ என இருந்தன. இந்த மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. படித்துவிட்டு வருபவர்கள் பணியில் இருக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.
தொழிற்சாலைகளின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த கல்வி இவர்களிடத்தில் இருக்கிறதா என்றால், அடிப்படைக்கல்வி இருக்கிறது. ஆனால், இரண்டுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கிறது. தகுதி இல்லை என்று சொல்ல மாட்டேன். ஓர் இடைவெளி இருக்கிறது. பல இடங்களில் புதிய தொழிநுட்பம் வந்துவிட்டது.
அவர்களின் தேவை வேறு மாதிரி இருக்கிறது. அந்த தேவைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில், அந்த தொழிற்சாலை தேவைகளுக்கு ஏற்ப தங்களுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதோடு, அந்த இடைவெளியைப் போக்க திறன் மேம்பாடு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக அதற்கான முன்னெடுப்புகளும் எடுக்கப்படுகிறது. தொழில் துறையின் சார்பாக சென்டர்ஆஃப் எக்ஸலன்ஸ் உருவாக்குகிறோம். அதில் பெரிய நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறுகிறோம். நம்மிடம் இருக்கக் கூடிய தொழில்நுட்பத் திறன் வாய்ந்தவர்களை, தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப அடாப்ட் செய்து இவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் ஒப்பந்தமாகும் அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படுகிறதா என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதற்கான பதிலை இந்த அரசிடம் செயல்வடிவில் எதிர்பார்க்கலாமா?
கடந்த ஆட்சியில் இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தன. ஒரு முறை வெளிநாட்டுக்கு அமைச்சர்கள் சுற்றுப் பயணம் எல்லாம் செய்தார்கள். அம்மையார் இருக்கும்போதே மூன்று லட்சம் கோடி என்றார்கள். அதற்கடுத்து இவர்கள் ஐந்து லட்சம் கோடி என்றார்கள். ஒரு நிறுவனம் நம்மிடம் வரவேண்டும்.
MOS போடுவது மிக முக்கியமான ஒன்று. அந்த MOSகளை ரியாலிட்டியாக மாற்றுவது அதைவிட முக்கியம். அதை நடைமுறை சாத்தியமாகக் கொண்டு வர வேண்டுமல்லவா? சென்ற ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் என்னென்ன நடைமுறைக்கு வந்தன, எவையெல்லாம் நடைமுறைக்கு வரவில்லை என்பதை சட்டமன்றத்தில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறேன்.
இந்த அரசின் முதல் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் கடந்த ஜூலையில் நடத்தியபோது, நமது முதலமைச்சர், ‘நீங்கள் இவ்வளவு பேரிடம் முதலீடுகளை ஈர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவற்றில் எவை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது என்பதுதான் முக்கியம்’ என்று என்னையும், தொழில் துறை செயலாளரையும் அழைத்து சொல்லிவிட்டுச் சென்றார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், அன்றைய சூழலிலேயே ரூ.19 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்திருந்தோம். அது தொழிற்சாலைகளாக உருப்பெற வேண்டும். அந்த தொழிற்சாலைகள் மூலமாக இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு தொழில்துறைக்கு இருக்கிறது என எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
மாநில பொருளாதாரத்தில் தொழில் துறை, சேவைத் துறை, வேளாண் துறை ஆகியவை பங்கு வகிக்கின்றன. இதில் கடந்த 15 ஆண்டுகளாக சேவைத் துறை மட்டுமே முதன்மையானதாக இருக்கிறது. இம்மூன்றையும் சரிவிகிதத்தில் அமைக்க வாய்ப்புள்ளதா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பங்கு வகிக்கின்றது. ஜிடிபியில் உற்பத்தித் துறை மிகப் பெரும்பான்மையானது கொடுக்கும். சேவைத்துறை கொஞ்ச காலம் கொடுக்கிறது. அதேபோல் வேளாண் தொழிலும் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த ஜிடிபி என்னவாக வர வேண்டும் என்று பார்க்கவேண்டும். ஒவ்வொரு துறையிலும் அது பெரிதாக வரவேண்டும். கடந்த காலங்களில் சேவைத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது. என்றாலும் இன்னும் பெரிய அளவில் வரவில்லை என்றே நினைக்கிறோம்.
இப்போது வரக்கூடிய தொழில் முதலீடுகள் சேவையில் அதிகம் வருகிறது. பின்டெக், டேட்டா சென்டர்ஸ் என சேவைத் துறையில் ஓப்பனிங் பெரிய அளவில் இருக்கிறது. சேவைத் துறைகளில் நம் தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் எடுத்திருக்கிறோம்.
அண்மையில் நாம் எடுத்திருக்கிற MOSஇல் பின்டெக் நிறுவனங்கள் வந்திருக்கின்றன. ஒரு மில்லியன் சதுர அடியில் சென்னை நந்தம்பாக்கத்தில் உருவாக்குகிறோம். அதை நோக்கி நம் பார்வை போகிறது. வேளாண் துறைக்கு பெரிய பூஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், அத்துறைக்கு தனி பட்ஜெட் கொடுத்திருக்கிறோம். எல்லா துறைக்குமான முக்கியத்துவம் நிச்சயம் இந்த அரசில் இருக்கும்.உணவு சார்ந்து எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தை உணராமல் தொழில் துறை வளர்ச்சி என்கிற பெயரில் வேளாண்மைக்கு ஆதாரமாக இருக்கும் நீர் ஆதாரங்களை அழித்துவிட்டு விவசாயம் வளரவில்லை என்று சொல்வதை எப்படி பார்க்கலாம்?
அதனால்தான் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறோம். ஏற்கனவே இருக்கக்கூடிய இயற்கை ஆதாரங்களை அழித்துவிட்டு அதன்வாயிலாக தொழில் வளர்ச்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், அதில் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்கிறோம்.
அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு கருத்து அந்தத் திட்டத்திற்கு எதிராக வந்தால்கூட ஒப்புக்கொள்வதில்லை. பெட்ரோகெமிக்கல் மண்டலங்கள் வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினோம். ஓஎன்ஜிசி ட்ரில்லிங் ஆபரேஷனுக்காகக் கேட்டார்கள். வேளாண் மண்டலங்களில் ட்ரில்லிங் ஏஜென்சிகளை அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டோம். வேளாண் மண்டலங்கள் தவிர்த்து இருக்கக் கூடிய பகுதிகளில் செய்ய வேண்டும் என்றாலும் முறையான சுற்றுப்புறச் சூழல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் கொண்டு வரப்படும். மாண்புமிகு முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இயற்கை ஆதாரங்களை அழித்துவிட்டு அங்கு தொழில் வளர்ச்சி கொண்டு வர வேண்டும் என்பதில்லை. ஓர் இடத்தில் வந்தது என்றால் அங்கிருக்கக் கூடிய ஸ்டேக் ஹோல்டர்ஸை அழைத்துப் பேசி அவர்களுக்கு ஒப்புதல் இருந்தால்தான் இந்த முடிவுகள் எடுக்கப்படும்.
தொழில் வளர்ச்சிக்கு நிலம் தேவை. நிலம் இல்லாமல் தொழில் வளர்ச்சி பண்ண முடியாது. அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்துக்காக எல்லாமே செய்துவிட முடியாதல்லவா! விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லாமல்தான் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் சொல்லியிருக்கிறார்.தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றால் அங்கு தொழிற்சலைகள் அதிகளவில் அமைக்கப்பட வேண்டும் என மூத்த தலைவர் நல்லகண்ணு பல முறை கூறியிருக்கிறார். அரசிடம் அதற்கான திட்டங்கள் இருக்கிறதா?
தென் மாவட்டங்களில் ஒரு முறை பெரிய அளவில் சாதிக் கலவரம் வந்தபோது, தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தார். அப்போது, மறைந்த நீதியரசர் ரத்னவேலு பாண்டியன் தலைமையில் ஒரு குழு அமைத்து ஸ்டடி பண்ணச் சொன்னார். அக்குழுவின் பெரிய பரிந்துரையே புதிய தொழில்கள் வந்தால்தான் இத்தகைய சாதிப் பிரச்னைகள் வராது என்பதுதான். எனவேதான்,கலைஞர் முதல்வராக இருக்கும்போது தூத்துக்குடி - மதுரை தொழில் பெருந்தடம் உருவாக்கினார்.
அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியாளர்கள் அதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கிடப்பில் போட்டார்கள். இப்போதைய சூழலில் தென் மாவட்டங்களில் நிறைய தொழில் வாய்ப்புகள் உருவாக்க வேண்டும். பெரிய ஃபர்னிச்சர் பார்க்கிங் வருகிறது. ஃபுட் பார்க், டெக்ஸ்டைல் பார்க், தூத்துக்குடியில் ஒரு டைடல் வருகிறது. மறைந்த ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு முரசொலி மாறன் முயற்சியில் நாங்குநேரி ஸ்பெஷல் எக்கனாமிக் ஸோன் உருவாக்கப்பட்டது. அதையும் அப்படியே கடந்த ஆட்சி கிடப்பில் போட்டது.
இளைஞர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு, அவர்களுடைய வேலை வாய்ப்புக்கு, இந்த அரசு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும். கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு பல முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். தொழில் துறையில் அரசு பல சலுகைகள் அறிவித்தும் ஏன் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை? கடந்த ஆட்சியின் போக்குகள் அவர்களை அப்படிச் செய்ய வைத்தன. ஆனால், இப்போது அவர்கள் நம்மை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று அதிகமாக இருந்த கால கட்டத்திலேயே நம்மால் 19ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முடிந்தது. அதன் பிறகு அக்டோபர் மாதம் நடத்திய ஏற்றுமதியாளருக்கான முதலீட்டு மாநாட்டில் ஏற்றுமதிக்கான ஒரு கொள்கையை முதன் முறையாக வைத்தோம். அன்றைக்கு 20ஆயிரம் கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் கொண்டு வரமுடிந்தது.
சமீபத்தில் கோவையில் 39ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, மிக முக்கியமான எல்லா துறைகளிலும் உற்பத்தி, சேவை, ஏரோ ஸ்பேஸ், சோலார் எனர்ஜி, ஸ்பின்னிங், ஈ மொபிலிட்டி...
என பல துறைகளில் வந்திருக்கிறது. இப்படி புதிய தொழில் வாய்ப்புக்கும், இயற்கையாக தமிழ்நாட்டுக்கு என்று பலம் வாய்ந்த துறைகளாக இருக்கும் ஜவுளித் துறை, தோல் பதனிடும் துறை, ஆட்டோ மொபைல்... ஆகியவற்றுக்கும் சரி முதலீடுகள் வந்திருக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நம் முதலமைச்சர் மீது இருக்கக் கூடிய நம்பிக்கையால்தான் இந்த புதிய முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
செய்தி: அன்னம் அரசு
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|