திருஷ்யம் 2



இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி, முதல் பாகத்தை தொடும் அளவுக்கு ஹிட் அடித்த ‘திருஷ்யம் 2’ மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக் அதே பெயரில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது. கொலைக் குற்றத்தில் மாட்டிக்கொண்ட தன் குடும்பத்தினரைப் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றுகிறார் ராம்பாபு. ஆறு வருடங்களுக்குப் பின் திரையரங்க உரிமையாளராகி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

ஆனால், அவருடைய பெரிய மகள் இன்னும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. மனைவியும் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறார். இவர்களது வீட்டுக்கு அருகிலேயே காவல்துறையைச் சேர்ந்த இருவர், கணவன் - மனைவி போல நடித்து ராம்பாபுவின் குடும்ப நடவடிக்கைகளைக் கவனித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் 6 வருடங்களுக்கு முன்பு நடந்த சில உண்மைகளை மாறுவேடத்தில் இருக்கும் பெண் போலீஸிடம் ராம்பாபு மனைவி சொல்ல, மீண்டும் ராம்பாபுவின் குடும்பம் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது.  

இம்முறையும் தன் குடும்பத்தை ராம்பாபு எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. முதல் பாகமான ‘திருஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார் நடிகை ப்ரியா. இந்த இரண்டாம் பாகத்தை மலையாள வெர்ஷனை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருக்கிறார்.ராம்பாபுவாக நிமிர்ந்து நிற்கிறார் வெங்கடேஷ்.