நீரின்றி அமையாது உலகு...



16. தண்ணீர்

பிரச்சினைக்கு ஆறுகள் இணைப்பு தீர்வாகுமா?
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெய்யும் கனமழையும்; தமிழ்நாட்டில் இந்த பருவமழையில் மாநிலம் முழுதும் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதும் ஒரு சிந்தனையைத்
தோற்றுவிக்கும்.ஆம். பெருவெள்ளம் கடலில் போய் சேர்வதை பார்த்தும், கோடையில் கடும் வறட்சி நிலவும்போதும் ஆறுகளை இணைப்பது ஒரு நல்ல திட்டம்தானே என்று தோன்றும்.
ஆறுகளை இணைப்பது அவ்வளவு எளிதான பணியில்லை. இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றை விரிவாகக் காண்போம்.

இந்திய ஆறுகளை இணைப்பது என்பது  வடக்கே ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கும், மேற்கிலும் தெற்கிலும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்னைக்கும் தீர்வு என்ற கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் நன்றாகத்தான் தோன்றும்.இந்தியாவில், 37 ஆறுகளை 30 கால்வாய்களும் 3000 நீர்த்தேக்கங்களும் அமைத்து இணைப்பதன் மூலம் மிகப்பெரும் நீரிணைப்பை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு அதிகரித்திருக்கிறது. இத்திட்டத்தில் இமயமலை ஆறுகள் இணைப்பு என்பது 14 இணைப்புகளால் ஆனது.

கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து, மழைக்கால நீரைத் தேக்குவது; கோகி, கண்டக், காக்ரா ஆறுகளின் நீர்ப்பெருக்கைக் கொண்டு சென்று அரியானா, ராஜஸ்தான், குஜராத் பகுதிகளை வளப்படுத்துவது.தீபகற்பப் பகுதியில் ஆறுகள் இணைப்பு என்பது 16 இணைப்புகளைக் கொண்டது. மகாநதியையும், கோதாவரியையும் இணைத்து; கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீர் அளிப்பது.

இதற்கு பல பெரிய அணைகளும், பெரிய கால்வாய்களும் அமைக்கப்பட வேண்டும். மேலும் கென் ஆறு, பெட்வா, பர்பாதி, கலிசிந்து, சம்மல் ஆகிய ஆறுகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள பத்து மாநிலங்களில், சுமார் 254 மாவட்டங்கள் ஆண்டுதோறும் கடும் வறட்சியைச் சந்திக்கின்றன. இதற்கு நதிநீர் இணைப்பு சிறந்த தீர்வாக இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கப்படுகிறது.

காக்ரா - யமுனா, சர்தா - யமுனா
ராஜஸ்தான் - சபர்மதி நதிகள்
மானஸ் - சங்கோஸ் - தீஸ்தா
ஜோகிகோபா - தீஸ்தா - பரக்கா
கங்கா - தாமோதர் - சுபர்ணரேகா
சுபர்ணரேகா - மகாநதி நதிகள்
பரக்கா - சுந்தர வன நதிகள்
கந்தக் - கங்கா நதிகள்
ராஜஸ்தான் - யமுனா நதிகள்
சேன் நதிகள் இணைப்பு திட்டம்
சோன் அணை - தெற்கு துணை நதிகள்
கோசி - காக்ரா நதிகள்

கோசி - மெச்சி நதிகள் ஆகிய நதிகளை இணைக்கும்போது ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும்; மானாவாரிப் பயிர்கள் அதிகமாக விளைவிக்க முடியும்; குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்பது நிபுணர் குழுவின் எண்ணம்.

இதைப்போல தென்னிந்திய நதிகளான -மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பு, பர் - டபி - நர்மதா நதிகள், கென் - சம்பல் நதிகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகள் இணைப்பது குறித்த முழுமையான ஆய்வறிக்கை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து நதிகள் இணைப்புத் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களாக தீபகற்ப மாநிலங்களுக்கான திட்டங்களுக்கும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.

பர் - டபி - நர்மதா நதிகள் இணைப்புத் திட்டப் பணிகள் குஜராத்தில் தொடங்கப்பட்டுவிட்டன. அதற்கு முதல்கட்டமாக ரூ.2,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - வெண்ணாறு - காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு 2004 - 2005ம் ஆண்டில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டன.

இதையடுத்து நதிகள் இணைப்பு பணிக்குகுழு அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. கோதாவரி - காவேரி நதிகள் இணைக்கும் திட்டம், ஈஞ்சம்பள்ளியிலிருந்து (தெலங்கானா) செயல்படுத்த தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (NWDA) முடிவு செய்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

2050ம் ஆண்டுக்குள் 150 முதல் 180 கோடி மக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 4.5 கோடி லட்சம் டன் உணவை நாம் உற்பத்தி செய்யவேண்டும். அதற்கு இப்போதுள்ள விவசாய நிலங்களை விட கூடுதலாக 6 கோடி ஹெக்டேர் நிலங்கள் தேவை. இதனை நதிநீர் இணைப்பு திட்டங்கள் மூலம் 3.5 கோடி முதல் 4.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும். அதில், 2.5 கோடி ஹெக்டேருக்கு நதிநீர் பாசனமும், ஒரு கோடி ஹெக்டேருக்கு நிலத்தடி நீர் பாசனமும் கிடைக்கக்கூடும்.

இப்போது கிடைக்கும் நீரின் அளவை விட தனிநபர்களின் நீர்த்தேவை அடுத்த 50 ஆண்டுகளில் கூடுதலாக 760 கன மீட்டர் அளவுக்கு தேவைப்படும். இதனை நாம் நதிநீர் இணைப்பு திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று நதிநீர் இணைப்பு திட்டங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.பொருளாதார ரீதியாக நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு சுமார் 11 லட்சம் கோடிகள் தேவைப்படும். மேலும், அவற்றை பராமரிக்கும் செலவுகளே ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் கோடிகளை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  

இதில் பாதி அளவு இருந்தாலே, இந்தியாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரிவிட முடியும் என்று நீரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இத்திட்டங்கள் செயல்படாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளில் மிகப் பெரும் வறட்சியை நாம் சந்திக்க நேரிடும் என்கிறது மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை. ஆனால், நாடு முழுவதும் ஓராண்டில் பெய்யும் மழையின் டிஎம்சி அளவில், கால் பகுதியைக் கூட நாம் சேமித்து வைப்பதில்லை என்கிறது மற்றொரு அறிக்கை.

ஆறுகளின் இணைப்பு என்பது சமீபத்தில் எழுந்த சிந்தனையல்ல. முடியாண்ட மன்னர்களும் இந்தியாவில் ஆங்காங்கே ஆறுகளை இணைத்து வந்துள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னன் மூன்றாம் இராஜசிம்மன் நாட்டார்க்கால் என்ற கால்வாய்மூலம் வைகை மற்றும் சருகணி ஆறுகளை இணைத்தார். இது இப்போது ஆர்எஸ் மங்கலம் ஏரி என அழைக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்  உள்ளது.

பெரியாறு, வைகை ஆறுகளின் இணைப்புதான் முல்லைப்பெரியாறு இணைப்புத் திட்டம். பெரியாற்றின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1895ம் ஆண்டில் கட்டப்பட்ட 152 அடி உயர நீர்த்தேக்கம் பெரியாறு அணை. இந்த திட்டத்தால் மதுரை - இராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. உலகின் முதல் பெரிய ஆறுகளின் இணைப்புத்திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

கி.பி 900 ஆண்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரளியாறும், பழையாறும் 2 கிமீ நீள கால்வாய் வழியாக இணைக்கப்பட்டது. இதில் பரளியாற்றில் நீர் வளம் அதிகம்.
கொள்ளிடமும், வெள்ளாறும் கூட இணைக்கப்பட்ட ஆறுகள்தான். வெள்ளாற்று நீர், இராசவாய்க்கால் என்ற கால்வாய் மூலம் உருவானதுதான் வீராணம் ஏரி. இதில் இருந்தும் சென்னைக்கு நீர் கொண்டுவரப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு இணைப்பின் பயனால் 4 லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் பாசன வசதி பெற்றன.

தெலுங்கு கங்கை திட்டம் மூலம் கிருஷ்ணா, பெண்ணாறு, கொற்றலை ஆறு ஆகியவை இணைக்கப்பட்டு சென்னைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. 1839ம் ஆண்டு ஆங்கிலேயர் சர்.ஆர்தர் காட்டன் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் நீர்வழிப்போக்குவரத்துடன் கூடிய பாசன வசதிகளை ஏற்படுத்த அன்றைய மதிப்பீட்டில் சுமார் 400 கோடிக்கான திட்டத்தை கொடுத்தார். ஆனால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இப்போது இந்த திட்டத்தின் மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆறுகள் இணைப்பு என்பது உலகம் முழுவதும்  செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆறும் இயற்கையிலேயே தனது பாதையை உருவாக்கி பயணப்படுகிறது. இப்படி ஓடும் ஆறுகளை நம் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்து நெளித்து இணைப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அடுத்துவரும் அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம்.  

(தொடரும்)

- பா.ஸ்ரீகுமார்