ரீமேக் படங்கள் பண்றதுல ப்ளஸ் & மைனஸ் இரண்டும் இருக்கு!



‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ துவங்கி ஆர்.கண்ணனின் படங்கள் எப்போதும் குடும்பத்திற்கான படங்களாக, கடந்து செல்ல முடியாத படங்களாகவே தமிழ் சினிமாவில் ஜொலிக்கும். இதோ இப்போது ‘தள்ளிப்போகாதே’ கொடுக்கத் தயாராக இருக்கிறார். ‘‘அதர்வா + அனுபமா பரமேஸ்வரன் ரெண்டு பேர் கெமிஸ்ட்ரியும் ரொம்ப அருமையா வந்திருக்கு...’’ திருப்தியுடன் புன்னகைக்கிறார் ஆர்.கண்ணன்.  

இது என்ன ஃபார்முலா... ஒரு சொந்த கதை, பிறகு ஒரு ரீமேக் கதை?

தொடக்கம் முதலே இதை ஃபாலோ செய்துட்டு இருக்கேன். ரீமேக் படங்கள் எடுக்கறதுதான் இருக்கிறதிலேயே மிகப்பெரிய ரிஸ்க். ஏற்கனவே ஒரு மார்க்கெட்... ஒரு ஹிட்... இப்படி நிறைய விஷயங்களை செட் செய்திருப்பாங்க. அதை மீறி நாம என்ன செய்ய முடியும்னு யோசிக்கணும். அதிலும் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு கலாசாரம், பழக்கங்கள் இருக்கும். அதை எல்லாம் தமிழுக்கு ஏற்றபடி நாம மாத்தியாகணும். அதனால் ரீமேக் படங்கள் அவ்வளவு ஈசி கிடையாது. ஆனாலும் இந்த ரிஸ்க் எனக்கு பிடிச்சிருக்கு. ‘தள்ளிப்போகாதே’ தெலுங்கில் வெளியான ‘நின்னுக்கோரி’ படத்தின் ரீமேக்.

‘தள்ளிப்போகாதே’ கதை பற்றி சொல்லுங்கள்?

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு காதல் கதை. ‘கண்டேன் காதலை’ படத்துக்குப் பிறகு காதல், குடும்பம் இரண்டும் சேர்த்து ஒரு படம் கொடுக்கணும்னு நினைச்சேன். தெலுங்கில் வந்த ‘நின்னுக்கோரி’ படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது.என் தயாரிப்பில் நானே இயக்கியிருக்கேன்.
காதல் கதைகளைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு, நடிகர்கள்; இன்னொண்ணு மியூசிக். அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இவங்க ரெண்டு பேருடைய பெர்ஃபாமென்ஸை குறையே சொல்ல முடியாது. அவ்வளவு நல்லா நடிச்சிருக்காங்க.

காதல் கதைகள் தமிழ்சினிமாவில் குறைஞ்சதுக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க?

மக்களுடைய பார்வை மாறிடுச்சுன்னு நினைக்கறேன். மேலும் இன்னைக்கு படம் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிச்சிடுச்சு. வெரைட்டியான கதைகளை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. திரில்லர், ஹாரர், டார்க்  காமெடி... இப்படிக் கதைகளைத்தான் அதிகம் இளைஞர்கள் பார்க்கறாங்க. அதனால்தான் மென்மையான காதல் கதைகள் வரவு குறைஞ்சிடுச்சுன்னு நான் நினைக்கிறேன்.

ஏன்... படம் பார்க்கற விதமே மாறிடுச்சு. ஒரு பஸ் டிராவல், வீட்டிலிருந்து ஆபீஸ் போற அந்த இடைப்பட்ட நேரத்துல கூட படம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதற்கிடையில் மென்மையான உணர்வுகளைப் பேசக்கூடிய கதைகளை மக்கள் விரும்புவது கம்மி ஆகிடுச்சு.

ஆனால், இதற்கு இடையிலும் ‘96’ மாதிரியான நல்ல காதல் கதைகள் வரும்போது ஜெயிக்கத்தான் செய்யுது. அதையும் நாம மறுக்க முடியாது.  
அதர்வாகூட ரெண்டாவது படம்... இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பற்றி சொல்லுங்க?

இதற்கு முன்னாடி ‘பூமராங்’ படத்தை நானும் அதர்வாவும் சேர்ந்து செய்தோம். நதிநீர் இணைப்பு பற்றி பேசப்பட்ட படம். அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்புதான் மறுபடியும் ‘தள்ளிப்போகாதே’ உருவாகக் காரணம். தெலுங்கில் நானி செய்த கேரக்டர்லதான் தமிழில் அதர்வா நடிச்சிருக்கார். காதல் கதைகள் அப்படின்னு எழுதினாலே நிச்சயம் அதர்வா பெயர் இருக்கும். அதற்கான எல்லா ஃபிரேம்களிலும் அதர்வா சரியாகப் பொருந்துவார். அப்படித்தான் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் அதர்வாவை சிறந்த சாய்ஸா நான் பாக்கறேன்.

படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?

அனுபமா பரமேஸ்வரனைப் பொறுத்தவரைக்கும் நடிப்புக்கு அவங்ககிட்ட பஞ்சமே இருக்காது. சின்னச் சின்ன ரியாக்‌ஷன்ஸைக் கூட ரொம்ப அழகா வெளிப்படுத்துவாங்க. அதர்வா + அனுபமா இரண்டு பேருடைய கெமிஸ்ட்ரி ரொம்ப சூப்பரா ஒர்க் அவுட் ஆயிருக்கு. அமிதாஷ்க்கு ஒரு முக்கியமான ரோல். இவங்க இல்லாம ‘ஆடுகளம்’ நரேன், காளி வெங்கட், வித்யூலேகா ராமன் எல்லாருக்கும் முக்கியமான கேரக்டர்ஸ்.

படத்துக்கு மியூசிக் கோபி சுந்தர். தெலுங்கு ‘நின்னுக்கோரி’ படப்  பாடல்களை அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கோம். வரிகளை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கார். பாடல்கள் ஏற்கனவே டிரெண்டுல இருக்கு. ஒளிப்பதிவு சண்முகசுந்தரம். கலரிங், லைட்டிங் எல்லாமே பார்த்துப் பார்த்து வேலை செய்திருக்கார்.

ரீமேக் படங்கள் எடுக்கிறதிலே பிளஸ், மைனஸ் என்ன?

மைனஸ் விமர்சனங்கள்தான். ரொம்ப சுலபமா ரீமேக் படம்தானேனு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க. குறிப்பா ஒரு இயக்குநரா, படைப்பாளனா ஏத்துக்கவே யோசிப்பாங்க.

ஆனா, ஏற்கனவே உருவாக்கி வைச்சிருக்கற ஒரு பிளாக்பஸ்டரைக் கையில் எடுத்து அதிலே வேலை செய்கிறது மிகப் பெரிய சவால். பிளஸ்னு பார்த்தா படத்தினுடைய பட்ஜெட் இவ்வளவுதான் அப்படின்னு சரியா முடிவுசெய்து ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணலாம். படத்திற்கு என்ன தேவை எது தேவையில்லைன்னு ஆரம்பத்திலேயே ஒரு கிளியர் கிராஃப் கிடைச்சுடும். அதுதான் ரீமேக் படங்களுடைய பிளஸ். மேலும் கதைக் களத்துக்கு வேலை செய்தா மட்டும் போதும்.

அடுத்தடுத்து உங்களுடைய படங்கள் என்னென்ன?

ஒரு முழுநீள காமெடி திரைப்படம் கொடுக்கணும்னு விரும்பினேன். அதனால் 1972ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தை அதே பெயர்ல ரீமேக் செய்திருக்கேன். அந்தப் படத்தினுடைய வேலைகள் அத்தனையும் முடிஞ்சிடுச்சு. ‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி மேம், கருணாகரன், சிவாங்கினு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க.
இது தவிர மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சு ரிலீசுக்கு காத்திருக்கு. அந்தப் படத்துக்கு நான் இயக்கம் மட்டும்தான். தயாரிப்பு தரப்பு ஓடிடியில் படத்தை வெளியிட இருக்காங்க.

ஊரடங்கு காலத்திலும்கூட வருஷம் தவறாமல் படம் கொடுத்தது எப்படி?

என் படங்களுக்கு நானே தயாரிப்பாளர். அதனால் பணத்தின் மதிப்பு எனக்குத் தெரியும். இதனாலேயே படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டமிடுவேன். எனக்கு தெரிஞ்சது சினிமா மட்டும்தான். வேற எதுவும் தெரியாது. அதை சரியா செய்யறேன்னு நம்பறேன்.

அதிலும் என்னுடைய குரு மணிரத்னம் சார் கூட 10 வருடங்கள் வேலை செய்திருக்கேன். ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மணிரத்னம் சார் எப்போதுமே நிறைய நேரம் எடுத்துக்குவார். அந்த பாடம்தான் ஊரடங்கு காலத்திலும் கூட தவறாமல் படம் கொடுக்க வைச்சிருக்கு.

‘தள்ளிப்போகாதே’ பார்வையாளர்களுக்கு என்ன கொடுக்கும்?

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஓர் அழகான காதல் கதை. அவசர வாழ்க்கையில் உணர்வுகளுக்கு நேரம் கொடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணர்வுகளின் மதிப்பைப் பேசக்கூடிய படமா ‘தள்ளிப்போகாதே’ இருக்கும்.

ஷாலினி நியூட்டன்