ஒரு விவசாயி மகனின் சாதனைக் கதை! நான்கு முறை தோற்று... ஐந்தாவது முறைதான் ஐஏஎஸ் ஆனேன்...
சமீபத்தில் வெளியான ‘பனையடி’ என்ற நாவல் தமிழ் இலக்கியச் சூழலில் அதிர்வுகளைக் கிளப்பி வருகிறது. என்.சி.பி.எச் இதை வெளியிட்டிருக்கிறது.ஐம்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு குக்கிராமத்தின் கதையைப் பேசும் இந்நாவலை எழுதியிருப்பவர் செல்வம் ஐ.ஏ.எஸ். நாவலில் நடுப்புள்ளை, ராசகுமாரி என்ற விவசாயத் தம்பதியின் மூத்த மகனாக வருகிறார் தமிழ். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் கிராமமான அய்யப்பநாயக்கன்பேட்டைதான் கதை நடக்கும் களம். அங்கே மானாவாரி விவசாயம் நிகழும் நிலப்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனைமரங்கள் காட்சியளிக்கின்றன.

இந்த நிலப்பகுதியைத்தான் நாவலில் வரும் எல்லோரும் ‘பனையடி’ என்கிறார்கள். இன்றைய சென்னை போலவே பேய்மழை பெய்தாலும் பிரச்னை, மழை இல்லாவிட்டாலும் பிரச்னை எனும் சூழலில் இருந்த கிராமம் அது. காரணம், நீர்ப்பாசன வசதி கிடையாது.
 அய்யப்பநாயக்கன்பேட்டையில் விவசாயம் பொய்த்தால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதுதான் தொழில். உயிரைக் காப்பாற்ற மக்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள். போலீசில் பிடிபடுகிறார்கள். குடும்பங்கள் சிதைகின்றன. ஆனால், ஒரு சிறுவன் மட்டும் விடாமுயற்சியாக விவசாயத்தையும், கல்வியையும் விடாமல் தொடர்கிறான். அவன்தான் தமிழ். 
நடுப்புள்ளையின் பக்கத்து ஊர் நண்பர்களில் ஒருவரான அறிவொளி என்பவர் தமிழுக்கு அடைக்கலம் கொடுத்து சோற்றுக்கும், கல்விக்கும் வழிசெய்கிறார். தமிழைச் சுற்றி நடக்கும் இந்நாவலை எழுதிய செல்வம் சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தோல்பொருள் ஏற்றுமதி கவுன்சிலில் உயர்பதவியில் இருக்கிறார்.
‘‘ஆம்; தமிழும் நானும் ஒருவரே. ஆரம்பத்தில் சுயசரிதையாக எழுத நினைத்தேன். ஆனால், அது வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கும். தகவல்களுக்குப் பின்னணியில் இருக்கும் வலி, போராட்டம் இருக்காது என்பதால் நாவல் வடிவத்தை கையில் எடுத்தேன். அத்துடன் தகவல்களாக இருந்தால் நம்மை நாமே தம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். அதனால் மூன்றாம் நபராக இருந்து நாவலை எழுதினேன். இப்படி எழுதினால் சம்பவங்களை நடுநிலையோடு சொல்ல முடியும்...’’ என்று ஆரம்பித்த செல்வம் அன்றைய போராட்டங்கள் குறித்து விவரித்தார். ‘‘அன்றைய என் கிராமம் வறுமையில் சுழன்று கொண்டிருந்தது. சாலை, மின்சாரம், போக்குவரத்து என்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பள்ளிகளும் கூரை வேய்ந்ததாகத்தான் இருந்தன. சுமார் 20 கிலோமீட்டர் வரைக்குமான சுற்றுவட்டாரப் பகுதிகளைத்தான் மக்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ரயிலைப் பார்க்காத மனிதர்கள் கூட அப்போது இருந்தார்கள். உணவு, வீடு, குடும்பம், அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் என்பதற்குள் வாழ்க்கை இருந்தது. வெளி உலகம் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. வெளி உலகம் தெரிய வேண்டுமானால் விழிப்புணர்வு அவசியம். அது இல்லாததுதான் அவர்களை விளிம்பில் இருக்க வைத்தது...’’ என்கிற செல்வம் தன் முதுகலைப் படிப்புக்குப் பிறகே ஐ.ஏ.எஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறார். ‘‘பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளில் படித்தேன். நெல்லையில் இளங்கலை வேளாண் படிப்பு படித்தபோது ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. ஆங்கிலத்தைக் கடினப்பட்டு சமாளித்தேன்.
பிறகு கோவையில் பயிர் நோயியல் துறையில் முதுகலைப் படிப்பை முடித்தேன். இளங்கலை முடித்தபோதே வேலைக்கு முயன்றேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு போட்டித்தேர்வு மூலம் அரசு ஊக்கத்தொகை கிடைத்ததால்தான் முதுகலைக்குச் சேர்ந்தேன். முதுகலை முடித்தபோதும் வேலை கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் நீர்பிடிப்புத் துறையில் ஒரு தற்காலிக வேலை கிடைத்தது. ஆண்டிமடத்தில் வேலை. இதைச் செய்துகொண்டிருக்கும்போது வேளாண் துறையில் வேலைக்கு அறிவிப்பு செய்தார்கள். இதில் இரண்டு துறைகளில் வெற்றிபெற்று, வேளான் விரிவாக்க அலுவலர் துறையில் இணைந்துகொண்டேன்...’’ என்கிற செல்வம், ஐஏஎஸ் கனவையும் பகிர்ந்தார்.
‘‘கிராம வாழ்க்கையில் அதிகாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எல்லோரும் உணர்ந்திருப்பார்கள். அன்றைய காலத்தில் நான்கூட ஒரு தாசில்தாரை நேரடியாகப் பார்த்தது கிடையாது. ஆனால், கிராம மக்களுக்கு கலெக்டர், எஸ்.பி பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. வேளாண் விரிவாக்க அதிகாரியாக வேலை செய்தபோதுதான் கல்லூரி நண்பர்கள் மூலம் ஐஏஎஸ் குறித்து கேள்விப்பட்டேன்.
அதையும் முயற்சி செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. உண்மையில் அன்றைக்கும், இன்றைக்கும் நகரங்களில் வாழ்கிறவர்கள் சிறுவயதிலேயே ஐ.ஏ.எஸ் கனவைப் பெற்றுவிடுகிறார்கள். வயதானாலும் முயற்சிக்கலாம் என்பதே என் கொள்கையாக இருந்தது...’’ என்கிற செல்வம், ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய அனுபவங்கள் குறித்தும் பேசினார்.
‘‘பிரிலிமினரி, மெயின் என இரண்டு தேர்வுகள். முதல் முறை பிரிலிமினரியிலேயே தோல்வி. இரண்டாவது முறை இரண்டிலும் தேர்ச்சி பெற்று நேர்காணலில் தோற்றுவிட்டேன். மூன்றாம் முறை நேர்காணலை சமாளித்துவிட்டேன். ஆனால், ரயில்வே போக்குவரத்து டிராபிக்கில்தான் வேலை கிடைத்தது.
அகில இந்திய ரீதியில் குரூப் ஒன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒரு வழக்கு தொடுத்ததால் ஐ.பி.எஸ்ஸாக தேர்வாக வேண்டியது தடைப்பட்டது. ஆனால், ரயில்வேயில் வேலை செய்துகொண்டே நான்காவது முறையாக பிரிலிமினரி எழுதினேன். இதில் பிரிலிமினரியிலேயே தோற்றுவிட்டேன். பிறகு ஐந்தாம் முறை. நான்குமுறை எழுதிய தேர்வுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எதை படிக்கவேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அத்துடன் நான் பலமுறை நேர்காணலில்தான் கோட்டைவிட்டிருப்பது தெரிந்தது. பொதுவாக கிராம மாணவர்களுக்கு கம்யூனிகேஷன் பிரச்னை இருக்கும். நானும் அப்படித்தான். பிறகு பல நண்பர்களின் துணையோடு மாதிரி நேர்காணல்களை எங்களுக்குள்ளேயே செய்துபார்த்தோம்.
ஐந்தாவது முறையில்தான் எனக்கு கலெக்டராகும் வாய்ப்பு கிடைத்தது...’’ என்கிற செல்வம், முதல்முறையாக இமாச்சலப்பிரதேசத்தில் 2001ல் கலெக்டர் ஆனார். பிறகு தில்லியில் மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றினார். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் தன் சேவையை ஆற்றிவருகிறார். அவரிடம், ‘உங்கள் கலெக்டர் கனவால் அய்யப்பநாயக்கன்பேட்டை மாறியிருக்கிறதா...’ என்றோம்.
‘‘‘பனையடி’யில் முக்கியமான பிரச்னை விவசாயத்துக்கான நீர்ப்பாசனப் பிரச்னை. இப்போது கிராமத்தில் சுமார் 50 ஆழ்துளைக் கிணறுகளாவது இருக்கும். அதுபோல படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாவலில் வருவதுபோல விவசாயம் பொய்த்தால் சாராயம் காய்ச்சி குடும்பங்களை இழக்கும் சோகம் இருந்தது. இது எல்லாம் இன்றைய அய்யப்பநாயக்கன்பேட்டையில் கிடையாது. இன்று அங்கு 12ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கிறது. கிராமம் பச்சைப்பசேலாக உள்ளது. நிறையப்பேர் விவசாயம் பார்க்கிறார்கள். காவல்துறை, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று கிராமம் முன்னேறியிருக்கிறது.
நானும், என் போன்ற அதிகாரிகளும் தேவையை உணர்ந்து சிறுசிறு உதவிகளை அரசு சார்பாகப் பண்ணுகிறோம். நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோருடன் நிலத்தில் ஈடுபட்ட விவசாய வேலைதான் இன்றைக்கு இந்தளவுக்கு ஊக்கத்தோடு செயல்படுவதற்கான டானிக்கை கொடுத்திருக்கிறது...’’ என்று அழுத்தமாக முடித்தார் செல்வம் ஐஏஎஸ்.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|