யாரா
தரமான திரில்லிங் ட்ரீட்டாக வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ‘யாரா’. இந்த இத்தாலி மொழித்திரைப்படம் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக் கிடைக்கிறது. 13 வயது சிறுமி யாரா. இசை வகுப்புக்கு ஒரு பொருளைக் கொடுக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லை. அவள் பெற்றோர் எங்கு தேடியும் யாரா கிடைக்கவில்லை.  யாராவைக் கண்டுபிடிக்கும் வழக்கை கையில் எடுக்கிறார் வழக்குரைஞர் ரக்கேரி. சல்லடை போட்டுத் தேடினாலும் யாராவைப் பற்றி எந்த தகவலும் கிடைப்பதில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு கொலையுண்ட யாராவின் உடல் மட்டுமே கிடைக்கிறது. அவள் அணிந்திருந்த ஆடையில் கொலைகாரனின் டிஎன்ஏ இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.
அந்த டிஎன்ஏ யாருடையது என்று கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கானோரின் டிஎன் ஏவைப் பரிசோதைனை செய்கின்றனர். இந்தப் பரிசோதனை ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது. எப்படி, எப்பொழுது ரக்கேரி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதே திரைக்கதை. இத்தாலியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே படமாக்கியிருக்கின்றனர்.
ஒரு பெண் குழந்தை காணாமல் போவது ஒரு நாட்டையே உலுக்குகிறது. தவிர, கொலைகாரனைக் கண்டுபிடிப்பதற்காக அரசும் மக்களும் காட்டுகிற ஈடுபாடும், ஒத்துழைப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ரக்கேரியாக வாழ்ந்திருக்கிறார் இஸபெல்லா. படத்தின் இயக்குநர் மார்க்கோ டுலியோ.
|