எகிறும் காய்கறிகள் விலை உயர்வு... அரசு என்ன செய்யவேண்டும்?



கடந்த வாரம் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ 180 ரூபாய் வரை சென்று பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது. ஆப்பிள் விலைக்கு நிகராக உயர்ந்ததால் தக்காளியை ஆப்பிளுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள்.
பிறகு, படிப்படியாக குறைந்த தக்காளி விலை கிலோ 40 ரூபாய் வரை வந்து இப்போது மீண்டும் சிறிய விலையேற்றம் கண்டுள்ளது. கடும் மழை காரணமாக வரத்து குறைவு என இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. மழைக்காலம் முடியும் வரை தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஏறி இறங்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

பொதுவாக தக்காளி, வெங்காயம், துவரம்பருப்பு, எண்ணெய் போன்ற அன்றாட சமையலில் நாம் தினமும் பயன்படுத்துகிற அத்தியாவசியப் பொருட்களின் விலைதான் எப்போதும் விலையேற்றத்தைச் சந்திக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயமும், துவரம்பருப்பும் கிலோ 200 ரூபாயைத் தொட்டது நினைவிருக்கலாம்.
சில சமயங்களில் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் உயர்வதை பார்க்கிறோம். இப்போது தக்காளி.இது ஒருபுறம். இன்னொருபுறம் தக்காளியின் விளைச்சல் அதிகமாகி விலை குறைவால் சாலைகளில் கொட்டுவதும் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகி வருகிறது.

கடந்த ஆண்டு இதேகாலத்தில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் பெரும்நஷ்டத்திற்கு ஆளாகினர். உண்மையில், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வுக்கு என்ன காரணம்... அரசு என்ன செய்ய வேண்டும்... என்ற கேள்விகளுடன் கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமாரை சந்தித்தோம்.

‘‘தமிழ்நாட்டுல தக்காளி சாகுபடி ரொம்ப குறைவா பண்றாங்க. தென்மாவட்டங்களுக்குப் பிறகு கிருஷ்ணகிரி, ஓசூர் பக்கம் தக்காளி உற்பத்தி இருக்கு. அப்புறம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள்ல அதிக சாகுபடி பண்றாங்க. சென்னைக்கு ஆந்திரா, கர்நாடகாவுல இருந்தே தக்காளி அதிகம் வருது.

இதுதவிர, மற்ற காய்கறிகளையும் அங்க அதிகம் சாகுபடி பண்றதால அங்கிருந்தே பல்வேறு காய்கறிகளைத் தருவிக்கிறோம்.இந்தமுறை தொடர் மழை காரணமா ஐம்பது சதவீதம் ஆந்திராவில் மூழ்கிப் போச்சு. இதனால, வரத்து தாமதமாகி தக்காளி விலையேற்றம் ஆகிடுச்சு. இப்ப மத்தியப் பிரதேசத்துல இருந்து கொண்டு வந்திருக்கோம். அதனால, விலை குறைஞ்சிருக்கு.

பொதுவா, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்துக்கு ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம். இந்த கொரோனா டைம்ல ஆன்லைனை அரசு ஊக்கப்படுத்தியது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கணும்னு செய்தாங்க. அப்ப புதுசா நிறைய பேர் வர்த்தகத்துக்குள்ள வந்தாங்க. அவங்க லாபம் பார்த்ததும் அதுல தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி ஆயிரம்பேருக்கும் மேல பண்றாங்க. சூப்பர் மார்க்கெட் மாதிரியும் வச்சிருக்காங்க. நேரடியா பெரிய கடைகளுக்குக் கொடுக்குற மாதிரியும் செய்றாங்க. இதுதவிர, வால்மார்ட் மாதிரியான நிறுவனங்களும் மார்க்கெட் உள்ள வந்திட்டாங்க.

முன்னாடி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விவசாயிகள்கிட்ட இருந்து காய்கறிகள் நேரடியா வரும். இங்க வந்ததும் விலை நிர்ணயிக்கப்பட்டு பிறகு சென்னை, புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தாண்டி விழுப்புரம் வரைக்கும் போகும். இப்படியே இருந்திருந்தா தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை எப்பவும் ஏறாது. ஆனா, இப்ப இந்த ஆன்லைன், பெரிய மார்ட்களுக்குனு பாதி சரக்கு போயிடுது. ஒரு பொருள் கோயம்பேடு சந்தைக்கு எவ்வளவு வருதோ அதற்கேற்பதான் விற்பனை விலை நிர்ணயிப்பாங்க. அப்ப வியாபாரிகள் பாதி பொருள்தான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு... இது சென்னைக்குப் பத்தாதுனு சொல்லி விலையை ஏற்றி விற்பாங்க.

இந்த விலையைப் பார்த்து மற்ற கடைக்காரங்களும் அதேவிலையில் விற்பாங்க. இப்ப 180 ரூபாய் வரை தக்காளி விலை ஏறினதற்கு இதுவே காரணம். மார்க்கெட்டுக்கு வந்தபிறகுதான் விலை வைக்கணும்னு இருப்பதற்கு பதிலா பதுக்கி வைச்சால் எப்படி குறைவான விலைக்கு கொடுக்க முடியும்?

இடைத்தரகர் நேரா எடுத்திட்டுப் போய் பெரிய நிறுவனங்களுக்குக் கொடுக்கறாங்க. அவங்க குடோன்ல வச்சிட்டு கோயம்பேடு மார்க்கெட்ல என்ன விலை சொல்றாங்களோ அதைப் பார்த்து விலையை சொல்றாங்க. அப்ப குடோன்ல வைக்கிற பொருளை கோயம்பேடு மார்க்கெட்ல விலை நிர்ணயிச்சு கொண்டு போயிருந்தால் விலை குறையுமா இல்லையா?
முன்னாடி கொத்தவால்சாவடி மார்க்கெட் இருந்தப்ப விவசாயிகள் லாரிகள்ல சரக்குகளை கொண்டு வருவாங்க. அந்நேரம் இடைத்தரகர் போய் நிற்பாங்க. அப்ப விவசாயிகள் இடைத்தரகர்கள்கிட்ட சரக்கை வித்துக்கொடுக்க சொல்வாங்க.

அங்கதான் கமிஷன்மண்டி உருவாகுது. அவங்க அன்றைய தேதிக்கு என்ன விலை வச்சு விற்கலாம்னு கடை வியாபாரிகளை கேட்பாங்க. விலை நிர்ணயத்தை நாங்க செய்வோம். அப்ப விலைவாசியும் நார்மலா இருந்தது. மக்களுக்கு பொருளும் சிறந்த தரத்துல வாங்குற விலையில் கொடுத்தோம். இப்படி நடந்த மார்க்கெட், ஆன்லைன் பிசினஸ் வந்ததும் மாறிப்போச்சு.

கொரோனாவுக்கு முன்னாடி வெங்காயம் நூறு ரூபாய்க்கு போனது. அப்ப ஸ்டாக் பண்ணி பதுக்கி வச்சிருக்காங்கனு சொன்னோம். ஒருவாரத்துல வெளியே வந்தது.

நமக்கு வெங்காயம் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்துல இருந்து வருது. ஒருமுறை அங்க செம மழை. அப்ப பொருட்கள் வீணாச்சு. அடுத்த பயிர் வரும்வரை நமக்கு வெங்காயம் தேவை. அதனால, வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி செய்யணும்னு கோரிக்கை வச்சோம். இறக்குமதி பண்ணினாங்க. விலையும் குறைஞ்சது.அதனால, அரசு முதல்ல காய்கறிகள்ல ஆன்லைன் வர்த்தகத்தை முற்றிலும் தடை பண்ணணும். ரெண்டாவது, சென்னையைச் சுற்றி எந்த ஒரு காய்கறி குடோனும் வச்சிக்கக் கூடாதுனு அரசு சொல்லணும்.

இப்ப ஏகப்பட்ட குடோன்கள் இருக்கு. இதையும் அரசு கண்காணிக்கணும். மளிகைப் பொருட்கள் விலை ஏற்றத்துக்கும் பொருட்களை பதுக்கி வச்சு விலையைக் கூட்டுறதுதான் காரணம். இதையும் தடுக்கணும்...’’ என்கிறார் முத்துக்குமார். இதை ஆமோதித்தபடியே தொடர்ந்தார் வேளாண் தகவல்தொடர்பு தொழில்நுட்ப வல்லுநரும், விவசாயியுமான திருச்செல்வம்.

‘‘பொதுவா, காய்கறிகள், பயிர்கள், எண்ணெய்வித்துக்கள் போன்றவற்றில் கடந்த சீசனின் உற்பத்தி சேமிப்பில் எவ்வளவு இருக்கு? இந்த வருடம் எவ்வளவு தேவை இருக்கு? இப்படியான விஷயங்கள் இங்க பார்க்கப்படுவதில்ல. ஒரு பருவம் ஆரம்பிக்கும்போது இவ்வளவு உற்பத்தி செய்தால் போதுமென தேவைக்கேற்றதை தீர்மானிச்சிட்டு அதன்பிறகு விவசாயிகள் எப்போதெல்லாம் பயிர் செய்கிறார்களோ அதையெல்லாம் நாம் லைவ் அப்டேட் பண்ணிட்டோம்னா நமக்கு தேவையானதைப் பெறமுடியும். விவசாயிகளையும் இவ்வளவு பயிரிடுங்கனு சொல்லலாம்.

அப்படியான ஒரு தகவல் அமைப்பு நம்மகிட்ட இல்ல.இப்ப நடந்த நிகழ்வு என்னனா... ஒண்ணு வறட்சி வந்து உற்பத்தி குறைஞ்சு தக்காளி விலை அதிகரிப்பது. அடுத்து, நீர் அதிகமாகி அழுகிப்போய் கொண்டு வரமுடியாமல் விலை அதிகரிப்பது. இந்தமுறை மழையால் விளைந்ததைக் கொண்டுவரமுடியல.

அப்ப ரெண்டு நிகழ்வின் தகவல்களும் நேரடியா அரசுக்குப் போனா, எந்தெந்த இடத்துல இருந்து வருகிற தக்காளி வராமல் போச்சு என்கிற தகவல்கள் எளிதா கிடைக்கும். இந்தந்த இடங்கள்ல மழையினால் தக்காளி வராது. இப்ப காலநிலை இப்படியிருக்குனா எவ்வளவு பற்றாக்குறையாகும். இதையெல்லாம் பார்த்திட்டா மழையில்லாத பகுதியில் இருந்து தக்காளியை வரவழைக்கலாம்.

அடுத்து, எப்போதும் இது மழைக்காலத்துல தொடர் நிகழ்வா இருக்கிறதால அத்தியாவசிய காய்கறிகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளிர்பதன கிடங்கில் வச்சிட்டே இருக்கணும்.

நம்மகிட்ட அந்த சேமிப்பு கிடங்கு இருக்கு. ஆனா, அதுல யார் போய் வைப்பது? இப்ப அரசு, விவசாயிகள் குளிர்சாதன கிடங்கில் வச்சு நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளலாம்னு சொல்லுது. ஆனா, யாரும் பண்றதில்ல. ஏன்னா, சேமிப்புக் கிடங்குல போய் வச்சு விலை கூடினால் விவசாயிகளுக்கு லாபம். ஒருவேளை விலை இன்னும் குறைஞ்சு போச்சுனா? அந்த ரிஸ்க்கை விவசாயிகள் எடுக்கமாட்டாங்க.

அப்ப அரசு நுகர்வோரின் உணவு வீக்கத்தை தடுக்கணும். அதுக்கு முன்கூட்டியே மழை, வெள்ளம் வந்தால் எவ்வளவு நாளைக்கு பற்றாக்குறையாகும் என்பதை தெரிஞ்சுக்கணும்.
ஒரு பத்து இருபது நாளைக்கு பற்றாக்குறைனா அதுக்கு எவ்வளவு அத்தியாவசிய காய்கறிகள் தேவைப்படுமோ அதை விளையிறப்ப வாங்கி சேமிக்கணும். தொடர்ந்து பராமரிச்சிட்டு வந்தால் எப்ப இந்தமாதிரியான அசாதாரண சூழல் வருதோ அப்ப இந்த சேமிப்புல உள்ளதை பயன்படுத்தலாம்.

ஆனா, இங்க இடைத்தரகரை நம்பிதான் எல்லாமே நடக்குது. அரசே நேரடியா அந்த விளைபொருளை வெளியே கொண்டு வந்தால் இடைத்தரகர்கள் மூக்கை உள்ளே நுழைக்க முடியாது.

இப்ப தக்காளி வண்டி குறைவா வருதா? உடனே அரசு தன் சேமிப்பு கிடங்கில் உள்ள தக்காளியை கொண்டு வந்தால் விலை எப்படி ஏறும்? ஒருவேளை இப்படியான அசாதாரண சூழல் அந்தாண்டு வரலனாலும் அரசு அந்த விளைபொருட்களை மெதுவா சந்தைகளுக்கு கொண்டு போகலாம். தக்காளியா இருந்தால் அதை சாஸா மாற்றலாம். எதுவும் பண்ண முடியலன்னா அரசே வேறு மாற்று செய்யலாம்.

ஒரு விவசாயியை நஷ்டப்பட வச்சு அவர் சாலைகளில் தக்காளியைக் கொட்டுறப்ப அவரால் வங்கிக் கடனையும் கட்டமுடியாமல் போகுது. அந்த வங்கிக் கடன் அரசாங்கம் தருவதுதான். அதேநேரம், விலையேற்றம்னு வரும்போதும் நுகர்வோர் பாதிக்கப்படறாங்க. அதுவும் அரசைத்தான் பாதிக்கும். இதனை சரியா செய்யணும்னா அரசுக்கும், விவசாயிக்கும் நேரடி தொடர்பு இருக்கணும்.

ஊருக்கு ஒரு விவசாய மேலாண்மை மையம் அரசு ஆரம்பிக்கணும். விவசாயிகளின் சாகுபடி தொடர்பான விவரங்களை சேகரிக்கணும். அப்ப அந்த ஊரிலுள்ள விளைபொருட்களின் தகவல்களை அரசு தெரிஞ்சுக்கலாம். இந்த ஏரியாவுல தக்காளி யார் போட்டிருக்கானு தெரிய வரும். தவிர, அவர் யார்கிட்ட தக்காளியை விற்றார் என்பதும் தெரிய வந்திடும்.

அரசு ஒரே உத்தரவுல இந்த விலைக்கு விளைபொருளை வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டால் விலை எப்படி குறையும்? தக்காளியை இந்த மையத்துல இந்த விலைக்கு கொடுத்திடுங்கனு அரசு சொல்லும்போது இடைத்தரகரும் இடையில் போய் கூடுதல் விலை கொடுத்து வாங்க முடியாது. அல்லது வாங்கக்கூடாதுனு அரசு உத்தரவு போடலாம். விவசாயிகளிடமும் இந்த அளவுக்கு மேல வெளியில் கொடுக்காதீங்கனு சொல்லலாம்.

இதனால, குறிப்பிட்ட விலைக்குக் கீழ் விளைபொருள் வந்தால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அரசே விவசாயியை காப்பாற்ற முடியும். அதை சேமிப்பில் வச்சு விலை கூடும்போது குறைவான விலைக்கு விளைபொருளை வெளியே கொண்டு வந்து மக்களையும் காப்பாற்றலாம்...’’ என்கிறார் திருச்செல்வம்.

பேராச்சி கண்ணன்