அதிகரிக்கும் குழந்தைகள் வன்கொடுமை! ஷாக் ரிப்போர்ட்
கடந்த வருடம் ஜூலை மாதம் அசாமில் உள்ள ஒரு காவல்நிலையத்துக்கு சந்தேகத்துக்கு இடமான ஃபேஸ்புக் பக்கம் தொடர்பாக ஒரு புகார் வந்தது. ஒரு வணிக நோக்கமற்ற சமூக அமைப்பு இந்த முகநூல் பக்கத்தின் மீது குற்றம் சாட்டியது. குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறை, சித்ரவதை ஆகியவற்றை உள்ளடக்கமாகக்கொண்ட வீடியோக்கள், படங்கள் அத்தளத்தில் மிகுதியாகக் கொட்டிக்கிடக்கின்றன என்பது அந்த முகநூல் பக்கத்தின் மீதான புகார்.  இது தொடர்பாக கெளஹாத்தி காவல்துறை ஒரு மாதம் கழித்து சாவகாசமாக ஒரு கிராமத்து இளைஞரைக் கைது செய்திருக்கிறது. ஆனால், அந்த நபரின் செல்போனில் இருந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் கொடூரங்கள் அதில் கொட்டிக்கிடந்திருக்கின்றன.
இந்தக் கொடூரனைக் கைது செய்த காவல் துறை ஆய்வாளர் கீதாஞ்சலி டூலே, ‘அவற்றைப் பார்த்தபிறகு பல இரவுகள் என்னால் தூங்க முடியவில்லை’ என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
அந்த மனிதன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம் மூலம் அங்கு வரும் உபயோகிப்பாளர்களுக்கு வலை விரித்து அங்கிருந்து வேறு பலான இணையதளங்களுக்கும் பாலியல் ஆப்களுக்கும் செல்ல உதவியிருக்கிறார்.
இதன் மூலம் அந்த நபருக்கு என்ன வருமானம் என்பதைப் பற்றி காவல்துறைக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை இதிலிருந்து ஏதும் வரும்படி வருவதற்குள்ளாக காவல்துறையின் கண்களில் அந்த நபர் மாட்டியிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
இந்த நிலையில் பெயிலில் வந்த இந்த நபர் தன்மீதான எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார். ‘நான் இதில் ஈடுபடவேயில்லை’ என்று கூறியிருக்கிறார்.குழந்தைகள் வன்கொடுமையிலும் வல்லுறவிலும் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று, இந்தியா. தேசிய குற்றப் பதிவேட்டு ஆவணம் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் குற்றச் சம்பவங்களை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு பனிரெண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறை சம்பவம் இங்கு கொடூரமாக அரங்கேறுகிறது.
களச் செயல்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் நிஜம் இதைவிடக் கொடூரமானது... இது உண்மையில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை என்று அலறுகிறார்கள். குழந்தைகளுடனான பாலுறவு வீடியோக்கள், படங்கள், பாலியல் வல்லுறவுக் காட்சிகளை அச்சிடுவது, விநியோகிப்பது சட்டப்படி தவறானது என்று நம் நாட்டில் சொல்லப்பட்டாலும் அது தடையின்றி ஒருபுறம் பரப்பப்பட்டுதான் வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக, இந்த கொரோனா கொடுந்தொற்று காலத்தில் இது மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
களச் செயல்பாட்டாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் கருத்துப்படி, இதற்கான உலக அளவிலான ஆன்லைன் தேவை அதிகரித்திருக்கிறதாம். நம் நாட்டிலும் இந்த கொடூர வீடியோக்களைப் பார்க்கும் ஆன்லைன் பார்வையாளர்கள் அதிகரித்திருக்கிறார்களாம். லாக்டவுனில் வீட்டிலேயே இருக்க நேர்ந்ததின் கொடூரப் பின்விளைவாக மனிதர்களுக்குள் உள்ள மிருகம் கண்விழித்துக்கொண்டதோ என்னவோ... இந்தப் பழக்கம் முன்பின் இல்லாதவர்களுக்குக்கூட சரி இதில் என்ன இருக்கிறது எனப் பார்க்கலாம் என்ற விபரீத ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. விளைவு, இங்கு எட்டிப் பார்க்கிறார்கள்.
சிலர், இதன் விஷ வலையில் சிக்கிக்கொண்டு இதன் குரூர ரசிகர்களாகவும் மாறி குற்றங்களுக்கு உடந்தையாகிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். கேட்கவே விபரீதமாக இருக்கிறது.
குறிப்பாக, இந்தச் சூழல் தென்னிந்திய அளவில் கேரளத்தில் இருநூறு முதல் முந்நூறு சதவீதம் வரை தடாலடியாக உயர்ந்திருக்கிறதாம். இது பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையிலிருந்து ஏற்பட்டிருக்கும் விபரீதம். இதைச் சொல்லியிருப்பவர் கேரள காவல்துறையின் சைபர் பிரிவு தலைமைப் பொறுப்பில் இருக்கும் மனோஜ் ஆபிரகாம்.
இந்த பெருந்தொற்றில் நிகழ்ந்த இன்னொரு கொடூரம், இப்படியான வக்கிர வீடியோக்களின் உற்பத்தி உள்ளூர் மற்றும் வீட்டு அளவில் அதிகரித்திருப்பதுதான் என்று பகிரடிக்கிறார் ஆபிரகாம். வீட்டில் உள்ள குழந்தைகளைத்தான் பெரும்பாலான உறவினர்கள் தங்கள் பலத்தால் இப்படித் தவறாகக் கையாள்கிறார்கள். இதை வீடியோவாகவும் எடுத்துப் பகிர்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் விரும்பாமலே இது பிறரால் அவர்கள் செல்போனிலிருந்து எடுக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்கிறார் அவர்.
இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு இல்லை. இருபாலினருமே கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு இதில் கூடுதலாக பாதிப்பு நிகழ்கிறது என்பதும் உண்மைதான் என்கின்றன ஆய்வுகள்.இந்திய குழந்தைகள் காப்பு நிதியம் 2019 மற்றும் 2020ம் ஆண்டில் நடைபெற்ற குழந்தைகள் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது. இதில், இந்தியாவின் பிரதானமான நூறு நகரங்களில் இந்தச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
இப்படி குழந்தைகள் பாலியல் வீடியோக்கள், படங்கள் பார்ப்பவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஆண்கள்தானாம். ஒரே ஒரு சதவீதம் பெண்கள், எஞ்சியவர்கள் எந்தப் பாலினம் என அடையாளம் காண இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்பாலானவர்கள் ஊர்ப்புறங்களில் நிகழும் குழந்தைகள் பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களையும் பள்ளி மாணவர்கள் ஈடுபடும் வீடியோக்களையும் இளையோர் வீடியோக்களையுமே அதிகம் விரும்புகிறார்களாம்.
இதில் ஈடுபடும் பலர் விபிஎன் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களது வசிப்பிடம் உள்ளிட்டவற்றை மறைக்க முயல்கிறார்கள்.உளவியலாளர்கள் இதற்கான காரணங்களை சொல்வதைக் கேட்டால் அதிச்சியாக இருக்கிறது. அதிக நேரம் தனிமையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஆன்லைனில் இருப்பவர்கள் இப்படி குழந்தைகள் மீதான பாலியல் கொடும் இச்சை கொண்டவர்களாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல்- இன்று உள்ள பல வளரிளம் பிள்ளைகள் இப்படியான தனிமையான சூழலில் அதிக நேரம் இணையத்தில் செலவிடுபவர்களாகவே உள்ளனர். இது அவர்களை பீடோபைல்களாக (Paedophiles) மாற்றி விடுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.இது உண்மையிலேயே அதிர்ச்சியான விஷயம்தான். நாம் நம்முடைய வளரிளம் பருவத்தினரிடமிருந்து நம்முடைய சக வளரிளம் பருவத்தினரையும் குழந்தைகளையும் காப்பற்ற வேண்டிய துயரத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் நிபுணர்கள். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒரே குழந்தை என்று செல்லம் கொடுத்து, அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். இப்படியான சமூகக் குற்றங்களை ஊக்குவிக்கும்விதமான சமூகச் சூழல்கள் மறுபுறம். இவ்விரண்டுக்கும் இடையில் சிக்கி இளைய சமூகம் திணறிக்கொண்டிருக்கிறது.இந்த விஷச் சூழலிலிருந்து நம் சமூகத்தை மீட்டெடுக்கவேண்டிய முக்கிய கடமை நம் அனைவருக்குமே இருக்கிறது.
இளங்கோ கிருஷ்ணன்
|