செல்லப்பிராணிக்கு செயற்கை கால்கள்!



ரஷ்யாவிலுள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் நான்கு கால்களையும் இழந்து தவித்துக்கொண்டிருந்தது ஒரு நாய். அதனால் இருக்கும் இடத்தைவிட்டு நகர முடியவில்லை. யாராவது நாயின் கால்களை வெட்டி எடுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. அந்த நாயைக் கண்டெடுத்தவர்கள், அதற்கு மோனிகா என்று பெயரிட்டு தன்னார்வலர் லியோன்கினாவிடம் சேர்த்திருக்கிறார்கள். மோனிகாவுக்கு டைட்டானியம் செயற்கை கால்களைப் பொருத்துவதற்காக பலரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் லியோன்கினா.

பலரும் சர்ஜி கோர்ஸோவ் என்ற கால்நடை மருத்துவரைப் பரிந்துரை செய்திருக்கின்றனர். லியோன்கினா வசிக்கும் இடத்திலிருந்து 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சர்ஜியின் கிளினிக். தவிர, டைட்டானியம் கால்களைப் பொருத்த சில லட்சங்கள் வேண்டும். உடனே கிரவுட் ஃபண்டிங்கை திரட்ட ஆரம்பித்துவிட்டார் லியோன்கினா. ஒரே வாரத்தில் 4 லட்ச ரூபாய் சேர்ந்தவுடன் மோனிகாவுடன் விமானத்தில் பறந்து சர்ஜியின் கிளினிக்கை அடைந்திருக்கிறார் லியோன்கினா.

தொடர்ந்து பல மணி நேரம் போராடி மோனிகாவுக்கு டைட்டானியம் கால்களைப் பொருத்தியிருக்கிறார் சர்ஜி. அவர் நாய்களுக்கு செயற்கை கால்களைப் பொருத்துவது இதுவே முதல்முறை. இப்போது மோனிகா வீறு நடைபோடுகிறது.