சமூக அக்கறை + பகுத்தறிவு + நக்கல் = நக்கலைட்ஸ்!



மூன்று கோடிக்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் இணையத்தில் நடமாடுகின்றன. தினமும் ஒரு நிமிடத்துக்கு 500 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் வீடியோக்கள் அங்கே பதிவு செய்யப்படுகின்றன. சினிமா, சமையல், எலெக்ட்ரானிக் சாதனங்கள் என யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்படாத விஷயங்களே இல்லை.
ஆனால், சமூக அக்கறை, பகுத்தறிவு சிந்தனைகள் கொண்ட சேனல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் ஒன்று ‘நக்கலைட்ஸ்’. கடந்த சென்னை வெள்ளத்தின்போது துவக்கப்பட்ட இந்த சேனல் இந்த மாமழை காலத்திலும் வெற்றிநடை போடுகிறது. சேனலின் முக்கியப்புள்ளிகளில் ஒருவரான பிரசன்னா பாலசந்திரனிடம் பேசினோம்.

‘‘நான் பெரிதாக படிக்கவில்லை. ஆனால், பாடம் அல்லாத இலக்கியம், சித்தாந்தம் சார்ந்த புத்தகங்கள் படிக்க பிடிக்கும். நிறைய வேலைகளுக்குப் போனேன். கிடைக்கும் சம்பளத்தில் நிறைய புத்தகங்கள் வாங்குவேன். மற்றவர்கள் சொல்கிற விஷயங்களைக் கேட்க மாட்டேன். நேரடி அனுபவமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வேன்.
இந்த வழியில் போனால் குறைவான அனுபவங்கள்தான் கிடைக்கும். நிறைய அனுபவங்கள் கிடைக்க வேண்டுமானால் வாசிப்புதான் ஒரே வழி என்று உணர்ந்தேன். பிறகு புத்தகங்களே என் உலகமாக மாறிவிட்டது.  அவையே எனக்குப் புதிய உலகைத் திறந்து காட்டின.

தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் மத அடிப்படைவாதிகளும், பெருவணிகர்களும் கைகோர்த்து இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை உருவாக்கினார்கள். மதமும், வணிகமும் இணைந்தது என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. பிறகு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த மூவ்மெண்ட் பக்கம் பயணித்தேன்.

இடதுசாரி சிந்தனைகள் எனக்குள் இருந்த மனிதத்தை வெளிக்கொண்டு வந்தது...’’ என்று ஆரம்பித்த பிரசன்னா மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்‘‘ஆந்திராவின் பஸ்தர் காடுகளில் வாழ்ந்த மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடன் பயணித்து ‘வனம் எழுதும் வரலாறு’ எனும் புத்தகத்தை எழுதினார் பத்திரிகையாளர் சத்நாம்.

பழங்குடிகளின் வாழ்வியல் மற்றும் அவர்களின் பிரச்னைகள் குறித்த முக்கியமான நூல் இது. இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தேன். இது வெளியாக ‘விடியல்’ பதிப்பகம் சிவாவும், நண்பர்களும் உதவினார்கள். தவிர, பதிப்பகம் வைத்து பல புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்...’’ என்றவர் யூடியூப் பக்கம் திரும்பியதற்கான கதையையும் பகிர்ந்தார்.  

‘‘சில வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள எழுத்தாளர்கள் மிரட்டப்பட்டார்கள். எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் மீது சாதியவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

அந்த சமயத்தில் நண்பர் ராஜேஸ்வரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து ‘ஆண்ட பரம்பரை’ என்னும் குறும்படத்தை எடுத்து யூடியூபில் வெளியிட்டோம். அதுதான் எங்களுடைய முதல் யூடியூப் வீடியோ. எழுத்தாளர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை அந்தக் குறும்படத்தில் பதிவு செய்திருந்தோம். சமூக அவலங்களைப் பதிவு செய்ய சரியான ஊடகம் யூடியூப்தான் என்பதை புரிந்துகொண்டேன்.

அன்றிலிருந்து சாதிரீதியாக நடக்கும் கொடுமைகள், பெண்களுக்கு எதிராக நிகழ்கிற அநீதிகள், அரசியல் அவலங்களை கோவைக்கே உண்டான நக்கலோட வீடியோவாக்கத் தொடங்கினோம். குறிப்பாக பகுத்தறிவு சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்...’’ என்ற பிரசன்னாவிடம், ‘இப்போதெல்லாம் உங்களின் வீடியோக்களில் அரசியல் அங்கதம் குறைவாக இருக்கிறதே..?’ என்றோம்.

‘‘கோவிட் தொற்றுக்குப் பிறகு வீடியோக்கள் பண்ணவில்லை. அதற்கு முன்பு வரைதான் பதிவேற்றி வந்தோம். எங்களைச் சுற்றி பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் தளமாகவும் ‘நக்கலைட்ஸ்’ இருக்கிறது. குடும்ப உறவுக்குள் நடக்கிற பிரச்னைகளையும், சிக்கல்களையும் வீடியோவாக்கினோம்.

சமூகம், அரசியல் சார்ந்து இயங்குவதற்காக ‘அர்பன் நக்கலைட்ஸ்’ என்னும் ஒரு சேனல் துவங்கி, அதில் வீடியோக்களைப் பதிவு செய்துவருகிறோம். கடைசியாக தூய்மைப் பணியாளர்கள் பற்றிய படம் மக்களால் கவனிக்கப்பட்டது...’’ என்றவரிடம், ‘உங்களுக்குப் பிறகு வந்த யூடியூபர்கள் படம் இயக்கிவிட்டார்கள். நீங்கள் எப்போது..?’ என்றோம்.

‘‘யூடியூபில் தொடர்ந்து இயங்க வேண்டும். வணிக நோக்கமாக இல்லாமல் மக்களுக்கான சேனலாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். சொற்ப வருமானமாக இருந்தாலுமேகூட, திரும்பிப்பார்க்கும்போது நாம் என்ன செய்திருக்கிறோம் என்கிற பார்வை ரொம்ப முக்கியம். பணம் என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டும்தான். அதற்காக அவசரப்பட்டு சினிமா செய்ய மாட்டோம். நாங்கள் எடுப்பது சின்ன படமாகத்தான் இருக்கும். ஆனால், அது மக்களுக்கானதாக இருக்கும்...’’ என்ற பிரசன்னா, கடந்த ஐந்து வருட சேனல் அனுபவங்களையும் பகிர்ந்தார்.

‘‘மக்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளைத்தான் அதிகமாக வீடியோவாக்கினோம். பெண்களுக்கான சிக்கல்கள், மாதவிடாய் அலப்பறைகள், அண்ணன் - தம்பி சிக்கல், அம்மா - தங்கை உறவுக்குள் நடக்கும் சண்டைகள் என பலவற்றை நகைச்சுவையாகப் பதிவு செய்தோம். கதையை தயார் செய்வதற்கு முன்பு குழுவாக உட்கார்ந்து பேசுவோம். கருத்து சொல்வதைத் தாண்டி மக்களைச் சிந்திக்க வைக்கவேண்டும் என்பதில் எல்லோருமே உறுதியாக இருப்போம். அதே நேரத்தில் அது பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தோம்.

ஐந்து வருடங்கள் போனதே தெரியவில்லை. மட்டுமல்ல, அழகு குறித்து சிரத்தை எடுக்க மாட்டோம். அழகு என்பது நாம் கட்டமைத்ததுதான்.

முகத்துக்கு பவுடர் பூசி பல வருடங்கள் ஆகிறது. எங்கள் வீடியோக்களில் மேக்-அப் குறைவாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் ‘நக்கலைட்ஸ்’ குழுவுக்கு மேக் - அப் மேனே கிடையாது.

எங்கள் வீடியோக்கள் எவ்வளவு இயல்பாக இருக்கிறதோ அதுபோலத்தான் நாங்களும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சுயமரியாதைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்போம். எங்கள் குழுவில் இருக்கும் அனைவருமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள்தான்...’’ கம்பீரமாகச் சொல்கிறார் பிரசன்னா.

திலீபன் புகழ்