தமாகா
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிய கொரியன் படம், ‘த டெரர் லைவ்’. இதன் இந்தி ரீமேக்தான் ‘தமாகா’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணலாம். தமிழ் டப்பிங்கிலும் பார்க்க கிடைக்கிறது. ஒரு காலத்தில் டாப் செய்தி வாசிப்பாளராக இருந்த அர்ஜுன் பதாக், சில பிரச்னைகள் காரணமாக, தான் பணியாற்றிய டிவி சேனலுக்கு சொந்தமான ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றும் நிலைக்குத் தாழ்த்தப்படுகிறார். இதற்கிடையில் மனைவியுடன் விவாகரத்தும் ஆகிவிடுகிறது.
 மனம் நொந்துபோய் ரேடியோ ஸ்டேஷனில் அவர் இருக்கும்போது ஓர் அழைப்பு வருகிறது. ‘கடற்பாலத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்...’ என்று அழைத்தவர் சொல்கிறார். யாரோ நம்மிடம் விளையாடுகிறார்கள் என்று அந்த அழைப்பை அலட்சியம் செய்கிறார் அர்ஜுன். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கடற்பாலத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது.
அதிர்ச்சியடையும் அர்ஜுன் குண்டு வைத்தவனைத் தொலைக்காட்சி மூலம் லைவ் ஷோவில் நேர்காணல் செய்கிறார். இந்த லைவ் ஷோ என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதே திரில்லர் திரைக்கதை. செய்தி வாசிக்கும் அறையில் நடக்கும் கதை. ஒரு நொடி கூட அலுப்புத்தட்டவில்லை. அர்ஜுன் பதாக்காக அடித்து விளையாடியிருக்கிறார் கார்த்திக் ஆர்யன். படத்தின் இயக்குநர் ராம் மத்வானி.
தொகுப்பு: த.சக்திவேல்
|