கலகல சௌந்தர்யா... களிப்பில் ரஜினி...




சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் கடந்த மூன்றாம் தேதி சென்னையில் திருமணம் இனிதாக நடந்தேறியது. திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின் ஹைலைட்ஸ்...

 பெரும்பாலான வி.ஐ.பிக்கள் கலந்துகொள்கிற நிகழ்ச்சியாக இருந்ததால் ‘‘யார் மனதும் புண் படாதவாறு நடந்துகொள்ளுங்கள்...’’ என்று தன்னைச் சேர்ந்தவர்களிடத்தில் அன்புக்கட்டளையே போட்டிருந்தார் ரஜினி.

 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டனர். அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர் ரஜினி என்பதால் அந்தக்கணத்தில் மேடையில் நிலவிய மகிழ்ச்சி மொத்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்.  

 திருமணத்துக்கு முதல்நாள் நடந்த நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்து வாழ்த்தினார்கள் அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யாராய், தெலுங்கு நட்சத்திரம் அல்லு அரவிந்த், லதா, ஸ்ரீபிரியா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் ஸ்ரீகாந்த், வெங்கட்ராகவன், டபிள்யூ.வி.ராமன்.

 திருமணமேடையின் பின்னணியில் ரஜினி விருப்பப்படி சீதா கல்யாண நிகழ்ச்சி ஓவியம் அழகுற வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான தன் விரல் முத்திரைகளுடன் களிப்புடனும், அவ்வப்போது நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டார் ரஜினி.

 வேதபாராயணத்துடன் தொடங்கிய திருமண நிகழ்ச்சியில் மராட்டிய பாரம்பரிய தலைப்பாகையுடன் ரஜினி உள்ளிட்ட பெண் வீட்டுக்காரர்கள் கம்பீரத் தோற்றமளித்தனர். சம்பந்தி கஸ்தூரிராஜா மேடையின் ஓரமாக அமர்ந்திருப்பதை கவனித்த ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ரஜினியிடம் சொல்ல, அவரையும் அழைத்து தலைப்பாகை அணியச்செய்தார் ரஜினி.
 
 தங்கையின் திருமணத்துக்கு ஓடியாடி வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா தனுஷ். மூத்த மாப்பிள்ளை என்கிற முறையில் சம்பிரதாய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தனுஷ், அவற்றை முடித்த கையோடு படப்பிடிப்புக்குக் கிளம்பினார்.

 மணமேடையில் மகிழ்ச்சியுடன் வந்தமர்ந்த சௌந்தர்யா கலகலப்பாக சிரித்தபடி அஸ்வினுடன் பேசிக்கொண்டேயிருந்தார். சரியாக 8.04 க்கு சௌந்தர்யாவை ரஜினி மடியில் அமர்த்திக்கொள்ள, தாலி கட்டினார் ஆறடி உயர அஸ்வின். அந்த நேரம் லதா ரஜினி சற்றே கண்கலங்க, நெகிழ்ச்சியுடன் இருந்த ரஜினி திருமண நிகழ்ச்சியின் கடைசியில் பாடப்பட்ட ‘சீதா கல்யாண வைபோகமே’ பாடலின்போது கண்கள் துளிர்க்க, சட்டென்று சகஜ நிலைக்குத் திரும்பினார்.

 நீலநிற டிசைனர் பட்டுப்புடவையில் வளைய வந்த ஆன்ட்ரியா, கஸ்தூரிராஜா குடும்பத்தினருக்கு அருகில் அமர்ந்துகொண்டு திருமண நிகழ்ச்சிகளை தன் செல்போனில் பதிவு பண்ணிக்கொண்டிருந்தார்.

 திருமணநிகழ்ச்சியில் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் கே.பாலசந்தர், மணிரத்னம், பாலா, கே.பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஹரி உள்ளிட்ட இயக்குநர்களும், சிவகுமார், விஜயகாந்த், சரத்குமார், ராதிகா, பிரபு என்று நடிகர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். கணவர் வித்யாசாகருடன் வந்திருந்தார் மீனா. நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் வந்திருந்தவர்களில் ஸ்ரீதேவி & போனிகபூர் தம்பதியும், வைஜயந்திமாலாவும் முக்கியமானவர்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தன் வழக்கப்படியே தனியாக வந்திருந்தார் சூர்யா. கணவர் சுந்தர்.சியுடன் வரவேற்பில் கவனத்தைக் கவர்ந்தார் குஷ்பு.

 சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்பரீஷ் என்று தெலுங்கு, கன்னடத்திரை வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர். ரஜினியின் ஆப்த நண்பரான மோகன்பாபு முதல்நாளிலிருந்து ரஜினியுடனேயே இருந்தார். ரஜினிக்காக வந்திருந்தவர்களை வரவேற்றார் எஸ்.பி.முத்துராமன்.

 லண்டன் செல்வதற்காக பிரிட்டிஷ் கான்சுலேட்டுக்குச் சென்றிருந்ததால் கடைசி வி.ஐ.பியாக வந்தார் கமல். ‘‘கடமையை முடிச்சுட்டீங்க..?’’ என்ற கமலிடம் பரவசத்துடன் ஆமோதித்தார் ரஜினி.

 திருமணத்துக்கு முன்னதாக நடந்த மெகந்திவிழாவில் ஆண்களும், பெண்களும் தனித்தனி அணியாகப் பிரிந்து பாடிய ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் ரஜினி பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன. அதில் ஹைலைட்... ‘‘மாமா, உன் பொண்ணக் கொடு..!’’

தொகுப்பு: வேணுஜி