யாருக்கும் தெரியக் கூடாது!




லிங்க் பதறிப்போய் ஓட்டலுக்குத் திரும்பியபோது அங்கிருந்த மேனேஜர், ''என்ன சார், உங்க செல்தானா இது? மறந்துபோய் மேஜை மேலயே விட்டுட்டுப் போய்ட்டீங்க போல... சர்வர் எடுத்துத் தந்தார். ஏதோ உங்க நல்ல நேரம்... இனிமேலாவது கவனமா இருங்க...’’ என்றெல்லாம் சொல்லவில்லை.‘‘எத்தனையோ பேர் வர்றாங்க, போறாங்க... யார் யார் எதைக் கொண்டு வர்றாங்கன்னு நாங்க கண்காணிக்க முடியாது. சாப்பிட வர்றவங்க அவங்க பொருளை அவங்கவங்கதான் பாதுகாத்துக்கணும். மாடல், நம்பர் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க சார், கிடைச்சா சொல்றோம்...’’லிங்க்கிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. திரும்ப அவன் சாப்பிட்ட இடத்துக்குச் சென்றான்... ஆராய்ந்தான். கை கழுவும் இடத்துக்குச் சென்றான்... தேடினான். பரிமாறிய சர்வர், ‘‘சிம்கார்டு முக்கியம் சார். முதல்ல கம்ப்ளைன்ட் பண்ணிருங்க... ரொம்ப காஸ்ட்லி போனா சார்?’’ என்றார்.‘முட்டாளே, பணத்தைப் பற்றி யாருக்குக் கவலை? அதில் நானும் வர்ஷாவும் நேற்றிரவு கூச்சமின்றி அடித்த அந்தரங்கக் கும்மாளங்கள் அட்டகாசமாக ஒளிந்திருக்கிறதே..!’
அவனுக்கு ஓட்டலில் அத்தனை பேர் மத்தியில் தான் நிர்வாணமாக நிற்பதுபோல உணர்வு ஏற்பட்டது. முதலில் எல்லோரும் கேலியாகச் சிரித்துவிட்டு, அப்புறம் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப்பொருட்களை அவன் மீது எறிந்து, ‘‘பப்பி ஷேம்...’’ என்று கூச்சலிட்டு விரட்டத் தொடங்கினார்கள்.

‘டேய், எவனும் அசையக் கூடாது. உங்களை செக் பண்ணாமல் இங்கிருந்து விடமாட்டேன். அதோ, அந்தப் பெரியவரின் கையில் இருப்பது என் செல்தான். இல்லை, இந்த யுவதி என் செல்லைத் திருடிவிட்டாள். அட, எல்லோரது கரங்களிலும் என் செல்போன் இருப்பது எப்படி? புரிந்துவிட்டது. இந்த சர்வர் சென்ற முறை வர்ஷாவின் இடுப்பை ரசித்துக் கொண்டிருந்தான். இவன்தான்... டேய், யார் காலில் வேண்டுமென்றாலும் விழுகிறேன். கொடுத்திருங்கடா!’இவனது தவிப்பைப் பார்த்த ஒருவர் அவரது செல்லைக் கொடுத்து, ‘‘உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிப் பாருங்க’’ என்றார். லிங்க் ஆர்வமுடன் முயன்றதில் ரிங் ஒலித்துக்கொண்டே இருந்தது. பதில் இல்லை.
பரிமாறிய சர்வர், ‘‘நல்லா நினைவிருக்கா சார், இங்க கொண்டு வந்தீங்களா?’’ என்றான். ‘‘கொண்டு வந்தேனே, மேஜை மேலே வச்ச ஞாபகம் இருக்குதே...’’ என்றான் லிங்க். சர்வர் திரும்பத் திரும்பக் கேட்டதும் அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது. சாயங்காலம் அலுவலக மீட்டிங்கில் செல்லை சைலன்ட் மோடில் வைத்திருந்தேன். அப்புறம் நரேனிடம் பேசினேன், வர்ஷாவிடம் பேசினேன். ஆனால், அமைதி நிலையிலிருந்த என் செல்போனை மட்டும் சப்த நிலைக்கு மாற்றவில்லை. ஒருவேளை, பைக்கில் வரும்போது விழுந்திருக்குமோ? இல்லை, சாப்பிடுமுன் மேஜை மீது வைத்தேனே... கடவுளே, ஒருகண மறதி என்னை இப்படிப் புலம்ப வைத்துவிட்டதே...
லிங்க் நிலைகுலைந்து போனான். எந்தக் கடவுளிடம் சென்று தன் துயரை முறையிட என்று தெரியவில்லை. மடையா, இது உனக்குத் தேவையாடா? கையில் கொஞ்சம் பணமும், கேட்க ஆளில்லாத சூழ்நிலையும் கிடைத்துவிட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா? நூறாவது நாள் கொண்டாடவில்லை என்று இப்போது எவன் அழுதான்?

திரும்பவும் அந்த செல் காட்சி மனதுள் ஓடியது. காலையில் பலமுறை ரகசியமாகக் கிளுகிளுப்பையும் சந்தோஷத்தையும் தந்த அந்தக் காட்சிகள் இப்போது அருவருப்பாக இருந்தன. காலையிலிருந்து எதையோ சாதித்துவிட்டு, மற்றவர்களைவிட வேறுபட்டு இருந்த ஒரு மனிதன், இப்போது பரம முட்டாளாகக் காட்சியளித்தான். வர்ஷாவை நினைத்தும் கோபமாக வந்தது. ஏன் நான் சொன்னதும் ஒப்புக் கொண்டாள்? செல் தொலைந்த செய்தி தெரிந்தால் எப்படி நடந்து கொள்வாளோ?அவனுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. புலன்களின் நடுக்கத்தில் வியர்வையும் ரத்தமும் வெளியேறுவது போலிருந்தது. இதயம் நின்று விடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடலின் சக்தி அத்தனையும் இழந்தவனாக தடுமாற்றத்துடன், செல் கிடைத்தால் தகவல் சொல்லும்படி தன்னுடைய இன்னொரு போன் நம்பரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். அவனது உலகம் துயருற்றிருந்தது. அல்லது, உலகிலேயே மிகவும் துயரம் கொண்டவனாகத் தன்னை அவன் உணர்ந்தான்.பைக் ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. ஓரமாக விட்டுவிட்டு பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தான். செல் பேசிச் செல்பவர்களைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. ஏதாவது சுனாமி, பூகம்பம் ஏற்பட்டு எல்லாம் மறைந்து போனால் நல்லது. குறைந்தபட்சம் செல் தொழில்நுட்பமாவது ஸ்தம்பித்துப் போக வாய்ப்பிருக்கிறதா...

கடவுளே, கடவுளே, உன்னால் கூட என்னைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால், ஆபாசக் காட்சிகள் செல்விட்டு செல் தாவும் வேகத்தை நீ அறியமாட்டாய். நான்கு சுவருக்குள், இரண்டு நபருக்குள் இருக்க வேண்டியதை மூன்றாவது நபரான மிஸ்டர் செல்லுக்கும் தெரியப்படுத்தினால், பின் அவரிடமிருந்து மீள்வது கடினம். எப்படி எங்களின் ஆடையற்ற உடல்களை அவரிடமிருந்து மீட்டெடுக்கப் போகிறேன்?இப்போது எந்த விழிகளின் முன்னால் நானும் வர்ஷாவும் புரண்டு கொண்டிருக்கிறோமோ..? எந்த வக்கிர மனதின் முன்னால் விருந்து படைத்துக் கொண்டிருக்கிறோமோ..? வர்ஷா, என் கண்ணே, எந்த ஆடைகளாலும் காப்பாற்ற முடியாத நிர்வாணத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பது உனக்குத் தெரியுமா?இந்த மெய்ஞானப் புலம்பலில் ‘வக்கிரம்’ என்ற வார்த்தையை உச்சரித்ததும், லிங்க் தர்மசங்கடத்துடன் தலைகுனிந்து கொண்டான். வக்கிர மனசுக்காரர்களின் பட்டியலில் முதலில் இருப்பது தன் பெயரன்றி வேறென்ன..?
ஒருவேளை இந்தக் காட்சிகள் வெளியே வந்துவிட்டால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ‘டூப்’ என்று அறிக்கை விடலாமா? யாரோ எங்களை மாதிரி ஆட்களை நடிக்க வைத்து, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மார்பிங் உதவியுடன் இந்த படுபாதகச் செயல்களைப் புரிந்திருக்கிறார்கள் என்று சமாளிக்கலாமா? ஆமாம், நாம் உலகப் புகழ்பெற்ற ஜோடி... எவன் நம்பப் போகிறான்? உற்சாகமாகப் பார்த்துவிட்டு, அடுத்தவனுக்கு ஃபார்வர்ட் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கப்போகிறான்...

இந்த இடத்தில் லிங்க் சில நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். இனி அவன் ஆபாசக் காட்சிகளைப் பரப்பும் வைரஸ்களில் ஒன்றாக இருக்க மாட்டான். போனை ஆயுள் முழுவதும் கையாலும் தீண்ட மாட்டான். அவசியம் ஏற்பட்டால் ‘ட்ரங்க் கால்’ போட்டுப் பேசுவான். ஆமாம், அந்தத் தொழில்நுட்பம் இப்போதும் இருக்கிறதா என்ன... ஆனால், புறாக்கள் இருக்கவே இருக்கின்றன.
லிங்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். கதறிக்கதறி அழ வேண்டும் போலிருந்தது. ஃப்ளாட்டில் வர்ஷா காத்துக் கொண்டிருப்பாள். ஒருவேளை, போன் செய்து ஏமாந்தும் போயிருப்பாள். அவன் எழுந்து அருகிலுள்ள காய்ன் பாக்ஸில் நாணயத்தைப் போட்டு தன் எண்ணுக்கு டயல் செய்தான். ரிங் போய்க் கொண்டிருந்தது. நான்கைந்து தடவை வெறும் ஒலிகளை உருவாக்கி விட்டு, களைப்புற்று பைக் அருகில் வந்தான். பெருமூச்சு விட்டான்.

ஒரு அரைமணி நேரத்திற்குள் இப்படி எல்லாமே மாறிப் போகும் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா, அம்மாவுக்கு எல்லாம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? அதிகபட்சம் இரண்டாம் வகுப்புக்கு மேல் நிர்வாணமாக வீட்டு ஹாலில் கூட குடும்பம் அனுமதித்ததில்லை. பிறந்த நான்கைந்து மாதத்தில் ஆடையின்றித் தவழும் போட்டோ ஒன்று இருக்கிறது. வர்ஷா வீட்டினர் மட்டும் என்ன, ‘நேக்கட் க்ளப்’பில் உறுப்பினர்களாக இருக்கப் போவதில்லை...லிங்க் மனதார கடவுளை நினைத்துக் கொண்டான். இந்தத் தவறு இனி நடக்காது என்ற வரத்துக்காக அவன் எதையும் செய்யத் தயாராக இருந்தான். இந்தப் பேராபத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் அவன், செக்ஸ் என்றால் என்னவெனக் கேட்பான். அந்த அனுபவம் நடந்தாலும்கூட, கும்மிருட்டிலும் ஆடை அவிழ்ப்பின்றியும் நிகழும். அல்லது புலனடக்கம் கைகூடிய ரிஷி போல அவன் வாழத் தொடங்குவான்.ஏதாவது ரிஷிகளின் கையில் என் செல்போன் சிக்கி, என்னைத் தொடர்புகொண்டு, ‘இரண்டு சதைப்பிண்டங்களின் கட்டற்ற காமக் கொண்டாட்டத்தைக் கண்டோம். பேதைகள்!’ என்று திட்டி போனைத் தந்துவிட்டுப் போகமாட்டார்களா?‘‘குத்தாலிங்கம்!’’ என்றொரு குரல் கேட்டது.

பொதுவாக இப்படி யாராவது கூப்பிட்டால், காது கேட்காத மாதிரி இருந்துவிடுவான். ‘லிங்க்’ என்று நாகரிகமாக அழைப்பவர்களே அவனது நண்பர்கள். ஆனால், இப்போது அழைத்தவன் ‘லிங்க்’ என்றாலும்கூட அவனைத் தன் நண்பனாக ஏற்க முடியாது. ஏனென்றால், அழைத்தவன் கௌதம். அவன் வர்ஷாவைக் காதலிப்பது ‘லிங்க்’கிற்குத் தெரியும்.
‘‘....................’’
‘‘என்ன குத்தாலிங்கம், இங்க நின்னுட்டு இருக்கற? வீட்டுக்குப் போகலை?’’
‘‘போகணும்...’’
‘‘உடம்பு சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்கற...’’
‘‘....................’’
‘‘ஏதாவது ப்ராப்ளமா?’’
‘‘என்னது?’’
‘‘இல்ல, பெட்ரோல் தீந்துபோச்சான்னு கேட்டேன்...’’
‘‘....................’’
‘‘உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான கேக்கறேன். அதுக்கு ஏன் முறைக்கற, குத்தாலிங்கம்?’’
லிங்க் பதில் சொல்லாமல் பைக்கை உதைத்தான். கௌதத்தின் சிரிப்பு அவனுக்குப் பிடிக்கவே இல்லை.
தயங்கித் தயங்கி ஃப்ளாட்டினுள் நுழைந்தபோது வர்ஷா தூங்கிக் கொண்டிருந்தாள். ‘‘வந்துட்டியா?’’ என்று முனகிவிட்டு, திரும்பவும் படுத்துக்கொண்டாள்.தனது வீடு, படுக்கை எல்லாம் அந்நியமாகி விட்டது போலிருந்தது. பாத்ரூமுக்குச் சென்று அழ விரும்பினான். ஆனால், அழுகை வரவில்லை. வர்ஷாவைப் பார்க்கப் பயமாக இருந்தது. அவள் ஏதாவது பேச வேண்டும் என்றும், பேசக் கூடாது என்றும் எண்ணங்கள் ஏற்பட்டன.மேஜையிலிருந்த தனது இன்னொரு செல்போனை எடுத்து, தொலைந்துபோன செல்லைத் தொடர்பு கொண்டான். ரிங் போய்க¢கொண்டே இருந்தது. என் செல், அந்த மெமரிகார்ட் எல்லாம் இந்தச் சென்னையில்தான் இருக்கின்றதா, எல்லை தாண்டி விட்டதா?ஜன்னல் வழியே பார்த்தான். திருவல்லிக்கேணியின் இதர பகுதிகள் இரவு நேர அழகில் இருந்தன. தூக்கம் வருவதுபோல இருந்தது. ஆனால், பெருந்துயரம் காரணமாக படுக்கையில் வீழ்ந்ததும் தூக்கம் சிதறிவிட்டது. வெறி பிடித்தது போல தொலைபேசி எண்களை அழுத்திக் களைத்தான். விடிந்து வரும்போது அவனையறியாமல் தூங்கினான். கண் விழித்த போது ஒரு கணம் & சரியாக ஒரே ஒரு கணம் உற்சாகமாக உணர்ந்தவனை நேற்றைய தினம் கைப்பற்றிக் கொண்டது.வர்ஷா ஒரு பாடலை முணுமுணுத்தவாறே, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘லிங்க்...’’
‘‘....................’’
‘‘டேய் குத்தாலிங்கம்...’’
‘‘....................’’
‘‘எழுந்திருடா... நேரமாகலியா?’’
‘‘....................’’
‘‘ஆமா, நேத்து உனக்கு நாலஞ்சு தடவை கால் பண்ணேன், ஏன் எடுக்கலை?’’
‘‘அது வந்து...’’
லிங்க் பதில் சொல்லுமுன் அவள் போய்விட்டாள். அரைமணி நேரத்துக்குப் பிறகு இருவரும் மௌனமாகச் சாப்பிட்டார்கள். லிங்க் தன் கால் சென்டருக்குக் கிளம்பும்போது வர்ஷா, ‘‘ஒரு நிமிஷம்...’’ என்றாள். ‘‘லிங்க், இன்னிக்கு நான் லீவ். வேற ஒரு வேலையும் இல்ல. உன்னோட செல்லைக் கொடுத்துட்டுப் போ... நாம சந்தோஷமா இருந்ததை அன்னிக்கு நான் சரியா பாக்கலை...’’

(அதிர்ச்சி தொடரும்!)