பெண் நிபுணர்களை ஏன் வாடிக்கையாளர்கள் நம்புவதில்லை?!



ஃபேஷன் அழகுக்கலை ஹோட்டல்

எப்பொழுதாவது இதை யோசித்திருக்கிறீர்களா?

உணவு, அழகுக்கலை, ஃபேஷன் போன்ற துறைகள் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பத்திற்கு மிக நெருக்கமானவை. என்றாலும், இந்தத் துறைகளில் இன்னமும் பெண்களை விட, ஆண்களே திறமைசாலிகளாகவும், பெண்களும் ஆண்களையே அதிகம் நம்பும் மனநிலையும் நீடிப்பதன் பின்னணி என்ன?

குறிப்பாக ஹேர்கட், தையல்... இவற்றில் பெண் நிபுணர்கள் குறைவே அல்லது இல்லவே இல்லை. இதற்கு முக்கியக் காரணங்கள் என்ன?

ஆதிக்க வடிவமைப்புபொதுவாகவே மற்ற தொழில் போலவே, இந்தத் துறைகளும் ஆரம்பத்திலிருந்தே ஆண்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் முதலீட்டாளர்கள், நிறுவனர்கள், தலைமை நிர்வாகிகள் ஆகிய நிலைகளில் இருந்ததால், முடிவெடுக்கும் அதிகாரம் அவர்கள் வசமே உள்ளன.

காலம் காலமாக எப்படி தொழில் துறை ஆண்களுக்கானதோ அப்படி கனவு காண்பதும், ஆசைப்படுவதும் கூட ஆண்களுக்கானது என்கிற வரலாறு வடிவமைப்பு இதற்கொரு காரணம்.
திறன் மேம்பாட்டில் பாலின பாகுபாடுபெண்கள் மட்டும்தான் அழகு மற்றும் ஃபேஷனை உணரும் திறனில் சிறந்தவர்கள்... அதேபோல், அதை செய்வதற்கான திறமை, சர்வதேச தரத்தில் செயலாற்றுதல் போன்றவற்றிலும் ஆண்களே சிறந்தவர்கள்... இப்படியொரு நம்பிக்கை நம்மிடம் நிலவுகிறது.

ஆனால், இது போலி நம்பிக்கை. உதாரணத்திற்கு லிப்ஸ்டிக்கில் இத்தனை நிற ஷேட்கள் இருப்பது பெண்களுக்கு மட்டுமே புரியும் என்கிற மாயை. அதேபோல், அதே லிப்ஸ்டிக்கை உருவாக்குவதில் ஆண்களே வல்லவர்கள் என்பது இன்னொரு அபத்த நம்பிக்கை. இப்படிப்பட்ட மாயையும் போலி நம்பிக்கையும் நிலவுவதால் ஓர் ஆண் ஒரு தொழிலில் 10 வருடங்கள் வளர்ந்து அனுபவசாலியாக நிற்கும் போதுதான் ஒரு பெண் அந்தத் திறமையைக் கற்றுக்கொள்ளவே துவங்குகிறாள்.  

பொருளாதார அதிகாரம்

ஆணுக்கு நிகராக பெண்கள் திறமையானவர்கள் என்றாலும் முதலீடு செய்யும் எண்ணிக்கையும், பெரிய தொழில்முனைவோராக இருப்பதற்கான வாய்ப்புகளும் ஆண்களுக்கே அதிகமாக இருப்பதால், அவர்கள் தொடங்கும் நிறுவனங்களிலும் அதிகம் ஆண்களே இடம் பெறுகின்றனர்.

பிரதிநிதித்துவ இடைவெளி

பெரும்பாலான பிரபல ஃபேஷன் டிசைனர்கள், செஃப், மேக்கப் ஆர்டிஸ்ட்கள், என முன்னிலையைக் கண்டவர்கள் ஆண்களாக இருப்பதுடன் அவர்கள்தான் ரோல் மாடல்களாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.  

சீரான கணிப்பின்மை

உண்மையில் இந்தக் குறிப்பிட்ட துறைகளில் பெண்கள் பலர் வேலை செய்கிறார்கள். ஆனால், முக்கியமான மேடைகளில் நிற்க மார்க்கெட் நிலவர கணிப்பு அவசியம்.

சுதந்திரமாக செயலாற்றும் தைரியம், வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து அதற்கேற்ப தொழில் விருத்தி, திறன் மேம்பாட்டு முன்னேற்றம் அவசியம். இவை எல்லாம் உயர கள ஆய்வு முக்கியம். அதற்கு பயணிக்க வேண்டும். ஆனால், இப்பயணத்தை மேற்கொள்ள பெண்கள் அதிகம் தயங்குகிறார்கள்.

இவை எல்லாம் சர்வதேச அளவில் அடுக்கப்படும் காரணங்கள். எனில், இது மட்டும்தான் பெண்களை ஆண் வாடிக்கையாளர்கள் விரும்பாததற்கு காரணமா?

‘‘இல்லை. இன்னும் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக தனக்குப் பின்னால் நிற்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதும், ஆண்களுக்குப் பின்னால் நிற்பதை விரும்பும் பெண்களால்தான் இந்த நிலை இன்னமும் நீடிக்கிறது...’’ என்கிறார் தொழில் ஆலோசகர் தாமோதரன் என்.

‘‘அவசரத் தேவைதான் சமூகக் கட்டமைப்பையே வடிவமைக்கும். ஆணுக்கு அவன் கணவனானாலும் சரி, தொழிலானாலும் சரி இரண்டுமே எதாவது ஒரு கட்டத்தில் வருமானம் கொடுக்க வேண்டும். அவனுக்கான பொறுப்புகள், கடமைகள், அவசரம் என அந்தத் தேவையை எளிதில் உருவாக்கி விடும். 

ஓர் ஆண் சம்பாதித்தால் மட்டுமே அவனுக்கென ஒரு குடும்பத்தையே இந்த சமூகம் கொடுக்கும் என்கிற நிலை இருப்பதாலேயே ஆண்கள் விரைந்து பணம் ஈட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காகவே வேகத்துடன் திறமையையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என நம்புகிறார்கள்.

ஆனால், பெண்களின் கனவு, வருமானம் இரண்டுமே இன்னமும் குடும்பத்துக்கானதாக மாறவில்லை அல்லது மாற வேண்டிய அவசியம் உண்டாக்கப்படவில்லை.
குறிப்பிட்ட வயது வந்தாலே பெண்ணுக்கான குடும்பம் ரெடிமேட் ஆக கொடுக்கப்பட்டு விடும். இதன் காரணம் திறன் மேம்பாட்டில் ஆண்களை விட பெண்கள் மெதுவாகவே செயல்படுகிறார்கள்.

என்றைக்கு இந்த குடும்ப வருமானம் 50 - 50 என ஆண்களும் பெண்களுமாக சமவிகிதத்தில் வருகிறதோ அன்றுதான் எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிப்பார்கள்.
அதிலும் இந்த அழகுக்கலை, தையல்... இதெல்லாம் இன்னமும் சில இடங்களில் சாதிய கட்டமைப்பிலும் பார்க்கப்படுவது மற்றுமொரு பிரச்னை. இந்த சாதிக்குதான் இந்த வேலை எனப் பிரிக்கும்போது ஆண் முன்னின்று அந்த சாதிய அடையாளத்தை எடுத்துக் கொள்கிறான்.

அதேபோல் மேற்கத்திய நாடுகளில் ஒரு சலூன் அல்லது பார்லர் எனில் கணவன் - மனைவி இருவருமே ஒன்றாக இணைந்தே அந்தத் தொழிலை நடத்துவர். இருவருமே ஒன்றாக வீட்டுப் பராமரிப்பிலும் ஆதரவாக இருப்பர். சரியாகச் சொன்னால், குடும்பமாக காலையில் ஒன்றாகக் கிளம்பி, குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு வருவர்.

ஆனால், இங்கே சலூனில் அல்லது பார்லரில் ஏன் என் மனைவி அமர்ந்து வருவோருக்கு பதில் சொல்ல வேண்டும், ஏன் மற்ற ஆண்களிடம் அவர் பேச வேண்டும் என்கிற மனநிலை இருக்கும்.
குறிப்பாக அழகுக்கலை, ஃபேஷன் இரண்டிலும் கஸ்டமர்களை மகிழ வைத்து அனுப்ப வேண்டும். 

அதற்கு அவர்கள் அழகாக இருக்கிறார்கள், இந்த உடை எவ்வளவு கச்சிதமாக இருக்கிறது, ஃபிட் செக்கப் என்பன போன்ற சேவைகளை மனைவி முன் கணவனோ அல்லது கணவன் முன் மனைவியோ செய்ய முடியாது.

இதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்னமும் இந்தியர்களிடம் பக்குவம் இல்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் சர்வசாதாரணமாக இருவருமே ஒரு கஸ்டமரை எவ்வளவு மூளைச் சலவை செய்ய இயலுமோ செய்வர்...’’ என்று சொல்லும் தாமோதரன் இதற்கு பின்னணியில் பாலின ஆதரவும் இருப்பதாகச் சொல்கிறார். ‘‘உத்யோகம் புருஷலட்சணம், குடும்பம் பொண்டாட்டி லட்சணம் என்கிற பழமைக்கு பின்னால் ஓடும் மனநிலை வேரூன்றி இருக்கிறது.

தவிர ஒரு பெண் ஒரு தொழிலில் இருக்கும் மற்றொரு பெண்ணை அவ்வளவு சுலபமாக பாராட்ட மாட்டார். அதாவது குடும்பப் பொறுப்பை விட்டுவிட்டு ஒரு பெண் பார்லர் வந்து அழகு படுத்திக் கொள்வதையும், அதன் மூலம் அப்பெண் தன்னை அழகுபடுத்தி அலுவலகம், சமூகம் என உயர்ந்து நிற்பதை இன்னொரு பெண் விரும்புவதில்லை. 

போலவே தன்னால் இன்னொரு பெண் பார்லர், ஃபேஷன் என தொழிலில் உயர்ந்து மேலே செல்வதை ஒரு பெண் ஏற்பதில்லை. பெண்ணுக்கு குடும்பப் பொறுப்பு முக்கியம் என்கிற போக்கு பெண்கள் மத்தியிலேயே நிலவுகிறது.

அனைத்துக்கும் சிகரமாக ஓர் ஆண் மிகச் சுலபமாக ஒரு பெண்ணின் அழகுக்கு அங்கீகாரம் கொடுக்கத் தயங்குவதில்லை. நான் என் குடும்பத்துக்காகவும், ஆண் என்கிற அங்கீகாரத்துக்கும் ஓடுகிறேன்... அதே போல் ஓடும் தனது சக ஆணுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்... என ஆணின் மனம் அழுத்தமாக இதை பதிய வைத்திருக்கிறது.அடுத்து பெண்களின் வருமானம். இது தனிநபர் வருமானமாகவும், ஆணின் வருமானம் குடும்பத்துக்கானதாகவும் இருப்பது இதற்கு அடிப்படையாக விளங்குகிறது.

எனவேதான் பெண்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ளும் கால அவகாசம அதிகமாக இருக்கிறது...’’ என்ற தாமோதரன், நிறுவனங்களின் சம்பள விகிதமும் இதில் அடக்கம் என்கிறார்.

‘‘ஓர் ஆண் ஹேர் ஸ்டைலிஸ்ட் அல்லது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது பாலின வேறுபாடின்றி ஆண் பெண் என அனைத்து கஸ்டமர்களையும் கவனிப்பார்கள்.

ஆனால், பெண் ஸ்டைலிஸ்ட் அல்லது பெண் மேக்கப் ஆர்டிஸ்ட்கள் பெரும்பாலும் பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் ஸ்டைலிங் செய்வர். இதனாலேயே பார்லர் நிறுவனங்கள் பெண்தான் வேண்டும் எனக் கேட்கும் மிகச் சில பெண் கஸ்டமர்களுக்காக ஒன்று அல்லது இரண்டு பெண் பணியாளர்களை குறைந்த செலவில் பணியில் அமர்த்துகின்றனர்.

ஒரு பெண் ஓர் ஆணுக்கு ஹேர் ஸ்டைலிங், உடை டிசைனிங் செய்வது மிக அரிது. உணவுத் தொழிலில் உடல் வலிமை அவசியம் என்கிற மனநிலை இருக்கிறது. பெரிய பாத்திரங்கள், 100 பேருக்கு சமையல்... இதெல்லாம் பெண்களுக்கானது அல்ல என்கிற போக்கு இதற்குக் காரணம். யோசித்துப் பாருங்கள்... கேட்டரிங் படிப்பில் சேரும் பெண்கள் மேனேஜ்மெண்ட் பணிக்குத்தானே ஆர்வம் காட்டுகிறார்கள்? செஃப், கிச்சன் ஆகியவற்றுக்கு தயக்கமே காட்டுகிறார்கள்.

இதில் நேரப் பிரச்னையும் இருக்கிறது. பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் பெண்களை நைட் ஷிஃப்ட் வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதேபோல் திருமணம், குழந்தை எனில் பணியில் இடைவேளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயங்குவதில்லை. எக்ஸ்பீரியன்ஸான பெண் தொழிலாளர்கள் இப்படிச் செய்வது நிறுவனங்களுக்கு இழப்புதானே?
இதனாலேயே கஸ்டமர்கள் பெண் நிபுணர்கள் மேல் நம்பிக்கை வைப்பதில்லை. இதில் நகரமயமாக்கல் லெவல் 1, லெவல் 2 என பல கட்டங்கள் உள்ளன.

அதில் கடைசி லெவல் பெண்களுக்கு அடிப்படைக் கல்வியே சிக்கலில் இருக்கும் என சுட்டிக்காட்டுகிறது. எனில் திறன் மேம்பாடு எல்லாம் என்னவென்றே அவர்களுக்குப் புரியாது.
கல்வி மேம்பாடும், திறன் மேம்பாடும் ஆண்களுக்கு அளித்துள்ள வாய்ப்பு போல் பெண்களுக்கு அமைவதில்லை. 

இவை அரங்கேறும்போது இந்த நிலை மாறும். நம் இந்திய கிராமப் புறங்களில் இருந்து இந்த மாற்றம் நிகழ்ந்தால் இந்தியக் குடும்ப வருமானமும் உயரும். பெண் நிபுணர்களை கஸ்டமர்களும் விரும்பத் தொடங்குவார்கள்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் தாமோதரன்.  

ஷாலினி நியூட்டன்