என்கவுன்டர் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல!
வித்தியாசமான கதைக்களம் என்றாலே நடிகர் வெற்றியின் நினைவு வரும். ‘8 தோட்டாக்கள்’, ‘ஜிவி’ தொடங்கி இவருடைய பயணம் எப்போதுமே தனித்துவம்தான். இதோ தற்போது ‘என்கவுன்டர்’ படம் மூலம் மற்றுமொரு வித்தியாசமான போலீஸ் கதைக் களத்துடன் தயாராக இருக்கிறார்.‘‘என்கவுன்டர் செய்யும் காவல்துறையினரை பெரும்பாலும் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.  அவர்களை கொடூர மனிதர்களாகத்தான் காவல்துறையே சித்தரிக்கும். அப்படிப்பட்ட ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டை சுற்றி நிகழும் கதையும், அதனால் அவர் அனுபவிக்கும் சமூக இடையூறுகளும்தான் கதைக்களம்...’’ என உற்சாகமாக பேசத் துவங்கினார் இயக்குநர் ஹாரூன்.
‘‘நட்டி சார் கூட ‘வெப்’, சோனியா அகர்வால் மேடம் கூட ‘7ஜி’ படங்களைத் தொடர்ந்து இப்ப இந்த ‘என்கவுன்டர்’ படம். சினிமா ஆசை... ஆனால், எப்படி, எங்கே ஆரம்பிக்கணும்னு தெரியாம வந்தவன் இப்ப மூணாவது படம் செய்கிறேன்.  சந்தோஷமா இருக்கு.வெற்றியைப் பொருத்தவரை அவருக்கு கதைதான் ஹீரோ. நல்ல கதை என்றால் உடனே ஓகே சொல்வார். அவரைத் தொடர்ந்து சாந்தினி தமிழரசன் ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர் செய்திருக்காங்க. ரொம்பவே நல்ல நடிகை. ஆனாலும் அவங்களுக்கான பெரிய இடம் இன்னும் கிடைக்கலைனுதான் சொல்லுவேன். அக்ஷிதா இந்தப் படம் மூலம் அறிமுகமாகறாங்க. தெலுங்கில் இரண்டு படங்கள் செய்து இருக்காங்க...’’ என்னும் ஹாரூன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்திற்குள் வந்தது குறித்து விவரமாக பேசினார்.‘‘மற்றவர்களை விட எனக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் இந்த கதைக்கு ஓகே சொன்னதுதான் டபுள் சந்தோஷம். கதை நல்லா இருக்கிறதா சொன்னார். கதையில் அவருக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்.
சிங்கம்புலி சாரை ‘மகாராஜா’ திரைப்படத்தில் ரொம்ப வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் பார்த்திருப்பீங்க. இந்தப் படத்திலும் அதே மாதிரியான இன்னொரு தனித்துவமான கேரக்டர்ல அவரைப் பார்ப்பீங்க.படம் முழுக்க கொடைக்கானல், ஏற்காடு, சேலம், கேரள காடுகளில்தான் எடுத்திருக்கோம். அதற்கு கே.வி.கிரணின் விஷுவல் ரொம்பவே ஹெல்ப் செய்தது. இவர் இயக்குநர் நெல்சனின் அசிஸ்டென்ட்.
அப்புறம் ஜான் ராபின்ஸ் மியூசிக் நல்லா வந்திருக்கு...’’ என்ற ஹாரூன், போலீஸ் கதைகளில் இது வித்தியாசமானது என்கிறார். ‘‘‘வேட்டையன்’ பார்க்கும்பொழுது உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு உண்டானதோ அதே உணர்வு இந்தப் படத்தில் இன்னும் அதிகமா உண்டாகும். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினி சார் அந்தப் படத்தில் கெத்தாக இருந்தாலும் உள்ளுக்குள் எப்போதும் அவருக்குள் ஒரு சோகம் இருக்கும்.
அப்படி என்கவுன்டர் செய்யும் அத்தனை போலீஸ் அதிகாரிகளும் மிகப்பெரிய நெருக்கடிக்கு இடையில்தான் வாழறாங்க.அதிலும் தன்னைச் சார்ந்து வாழும் குடும்பம், குழந்தை, உறவினர்கள் என அத்தனை பேரின் உயிரும் கூட ஆபத்தில் இருப்பது அவங்களுக்குத்தான் தெரியும்.
இந்தப் பிரச்னையை மையமா வச்சுதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கோம். இதற்கிடையிலும் ஒரு க்ரைம் திரில்லர் கதை உங்களை சுவாரசியமாக்கும். ஒருசில உண்மையான போலீஸ் அதிகாரிகள்கிட்ட கூட இதற்காக டிஸ்கஷன் செய்திருக்கேன்.
நிச்சயம் குற்றவாளிகளை தண்டிக்கும் ஒவ்வொரு காவல்துறையினர் மீதும் இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு நல்ல அபிப்ராயம் வரும். அதேசமயம் எதையும் தீர விசாரித்துதான் முடிவு செய்ய வேண்டும் என்கிற கருத்தும் ஆழமா இந்தப் படத்தில் இருக்கும். தற்சமயம் இந்தப் படத்திற்கு ‘என்கவுன்டர்’னு பெயர் வைச்சிருக்கோம். இந்தப் பெயர் கிடைக்க காத்திருக்கோம். வெற்றியும் இதற்கு முன்பு காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். அந்தப் படங்களிலிருந்து இந்தப் படம் நிச்சயம் வித்தியாசப்படும்...’’ தீர்க்கமாகச் சொல்கிறார் இயக்குநர் ஹாரூன்.
ஷாலினி நியூட்டன்
|