சூரியின் கதை... Family Background... கமர்ஷியல் ட்ரீட்மென்ட்!
காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் சூரி. இவருடைய காமெடி தனித்துவமானது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’யில் ஹீரோவாக உருவெடுக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என ஹிட் படங்களைக் கொடுத்து கோலிவுட் ஹீரோ ரேஸில் தன்னையும் இணைத்துக்கொண்டார். இப்போது ‘மாமன்’ ரிலீஸுக்கு ரெடி.  இதன் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் ‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்கியவர். இறுதிக் கட்ட வேலையில் பிசியாக இருந்தவரிடம் பேசினோம். ‘விலங்கு’ வெப் சீரிஸ் பெரியளவில் பேசப்படும்னு எதிர்பார்த்தீர்களா?
‘புரூஸ்லீ’ என்னுடைய முதல் படம். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. சினிமாவில் ஓடும் குதிரைக்குதான் மவுசு, மார்க்கெட் எல்லாமே. முதல் படம் ஓடாத காரணத்தால் அடுத்த படத்தை வெற்றிப் படமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் எழுதப்பட்ட கதை ‘விலங்கு’.எஸ்.கே.புரொடக்ஷன் மதன் சாரிடம் லைன் சொன்னேன்.  அதே சமயம் தனியார் தொலைக்காட்சியிலும் கதை கேட்டார்கள். அப்போது வெப் சீரிஸுக்கான வரவேற்வு மிகக் குறைவாகவே இருந்ததால் தனியார் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு வெப் சீரிஸ் தயாரிக்கும் ஐடியா இல்லை.  கடைசியாக ஒருமுறை டிரை பண்ணிப் பார்க்கலாம்னு சினிமாவுக்காக நான் சொன்ன கதையை வெப் சீரிஸாக பண்ணமுடியுமா என்று கேட்டார்கள்.அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த நான் எந்த தளத்தில் படம் பண்ணினாலும் ஓகே என்ற முடிவில் பண்ணியதுதான் ‘விலங்கு’. எதிர்பார்த்ததைவிட அந்த வெப் சீரிஸுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ‘விலங்கு’ வெற்றி சினிமாவுக்கான வாய்ப்புகளை சுலபமாக்கியது.
 ‘மாமன்’..?
நான் பாண்டியராஜ் சார் மாணவன் என்பதால் சூரி அண்ணன், தயாரிப்பாளர் குமார் அண்ணன் இருவரிடமும் நல்ல பழக்கம் இருந்துச்சு. குமார் சார் சூரி அண்ணனுக்காக கதை கேட்டபோது ஒரு லைன் சொன்னேன். அவர் சூரி சாரிடம் அழைத்துச் சென்றார்.சூரி அண்ணன் ‘உனக்கு எந்த மாதிரி கதை பண்ணணும்னு ஆசையா இருக்கு’னு கேட்டார். ‘‘விலங்கு’ மாதிரி இல்லாமல் மாறுபட்ட ஃபேமிலி டிராமா பண்ணலாம்னு இருக்கிறேன்’னு சொன்னேன்.
அப்போது சூரி அண்ணன் ஒரு கதை சொல்லி என்னுடைய விருப்பத்தை கேட்டார். ‘நல்லாயிருக்கு’னு சொன்னதும் ‘இந்தக் கதையைப் பண்ணலாமா’ன்னு கேட்டார். எந்த ஜானர்ல படம் பண்ணலாம் என்ற யோசனையிலிருந்த எனக்கு சூரி அண்ணன் சொன்ன கதை பிடிச்சதால அதையே பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். தாய்மாமன் கதைகளில் புதுசா என்ன சொல்லப்போறீங்க?
இது தாய்மாமன் கதையாக மட்டுமே இருக்காது. ஒட்டுமொத்த குடும்பத்துக்கான கதையாகவும் இருக்கும். அக்கா - தம்பி பாசம், தாய்மாமன் உறவு, மூத்த தம்பதியின் காதல், கணவன் - மனைவி காதல் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும்.
தனியே வாழ்ந்த காலம் போய் இப்போது தனித் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை பெரும் குற்றம் போல் பார்க்கிறார்கள். சுதந்திரம் என்ற பெயரில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு சொந்த ஊர் திருச்சி. சினிமாவில் இயங்கினாலும் இன்னும் நான் திருச்சி பையனாகவே என்னைப் பார்க்கிறேன். உறவுகள், கூட்டம், திருவிழா என அதுல கிடைக்கும் சந்தோஷம் பெரியது. அந்த சந்தோஷம் நகரத்தில் வாழ்பவர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனால், அந்த வாழ்க்கையை விட்டு விலகி வாழ்வதை மாடர்ன் லைஃபாக பார்க்கிறார்கள்.
முன்பு தனியாக இருக்கும்போது அதிசயமாக பார்த்தார்கள். இப்போது கூட்டுக் குடும்பமாக இருந்தால் அதிசயமாகப் பார்க்கிறார்கள். அது நம் அடையாளம் இல்லை என்று சொல்லவருவதுதான் ‘மாமன்’.
இது மாமன் - மருமகன் பற்றிய கதை. 6 வயது சிறுவனை மையமாக வெச்சு குடும்பத்தில் பிரச்னை உருவாகிறது. உறவுகளுக்கிடையே ஏற்பட்ட சிக்கல் எப்படி சரி செய்யப்படுகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளோம். குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் வரும். அதற்காக பிரிந்து வாழமுடியுமா? அது அல்ல வாழ்க்கை. தனித் தனியாக வாழ்வதற்கு எதற்கு வாழ்க்கை? சேர்ந்து வாழ்வோம் என்பதை பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியுள்ளோம்.
டிரைலரில் சூரி மிரட்டியுள்ளாரே?
இது டிரைலர்தான். முழுப் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். வேற லெவலில் இருக்கும். ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என சூரி அண்ணன் பெரிய படங்கள் செய்தபிறகு அவருடன் இணைந்திருப்பது பெரிய சவால்.
ஏனெனில் அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது காமெடி ஆர்ட்டிஸ்ட் என்ற அடையாளத்தை உடைச்சு இப்போது நம்பிக்கைக்குரிய ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இது சூரி அண்ணனின் கரியர்ல முக்கியமான காலக்கட்டம். இந்தச் சூழ் நிலையில் என்மீது நம்பிக்கை வெச்சு இந்தப் படத்தை கொடுத்துள்ளார்.
சூரி அண்ணனுடன் வேலை செய்வது இனிமையான அனுபவம். அவர் பல ஜானர்ல படங்கள் பண்ணியவர். காமெடி ஏரியாவை சுலபமாக ஹேண்டில் பண்ணியவர். சினிமாவின் இன், அவுட் தெரிஞ்சவர். வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் லைட், கேமரா கோணங்கள் என டெக்னிக்கலாகவும் நாலெட்ஜ் உள்ளவர்.
இது அவருடைய கதை என்பதால் இதன் அவுட்புட் எப்படி வரும்னு அவருக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய வேலையை மிகவும் சுலபமாக்கினார். நான் என்ன சொன்னாலும் அதை சுலபமாக செய்து கொடுத்தார். வழக்கமாக ஹீரோவுக்காக சில பில்டப் சீன்கள் இடம்பெறும். அதுமாதிரி நான் எதாவது பண்ணினாலும் ‘தம்பி வேண்டாம், இது கதையை மீறிப்போகும்’னு தடுத்துவிடுவார். ஆரம்பத்துல இரண்டு சண்டைக் காட்சி இருந்தது. எடிட் பண்ணும்போது ஒரு சண்டை எடுக்க வேண்டிய சூழ்நிலை. அவரிடம் சொன்னதும் அவரும் நீக்கச் சொல்லிவிட்டார். மொத்த கோடம்பாக்கத்தையும் டிரைலரில் பார்க்க முடியுதே?
இந்தக் கதைக்கு, கோபம் வரும்போதும் முகத்தில் கோபம் காண்பிக்காத கதாநாயகி முகம் தேவைப்பட்டது. அப்படி என் மனசுல வந்து நின்றது ஐஸ்வர்யா லஷ்மி. அவருடைய ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, மலையாளப் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்துக்கு முன்பே அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஜூம் காலில் கதை சொன்னேன். கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்தார். கதைக்கு என்ன வேணும் என்பதை புரிஞ்சு பண்ணினார்.
ராஜ்கிரண், ‘லப்பர் பந்து’ சுவாசிகா, பாலசரவணன், பாபா பாஸ்கர், பிரகீத் சிவன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம் என எல்லோருக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள். இசை ஹேஷாம் அப்துல் வஹாப். மலையாளம், தெலுங்கு என பிசியாக இருப்பவர். ‘இருதயம்’, ‘ஹாய் நானா’ என பல ஹிட் கொடுத்தவர். தமிழில் இது முதல் படம். தமிழ் மீது காதல் கொண்டவர் என்பதால் ஆர்வத்தோடு பண்ணியிருக்கிறார்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு. நாங்கள் இருவரும் உதவியாளர்களாக இருந்ததிலிருந்து நண்பர்கள். ‘விலங்கு’, ‘லப்பர் பந்து’, ‘மகாராஜா’, ‘லவ் டுடே’ என தொடர்ச்சியாக ஹிட் படங்களில் வேலை பார்த்தவர்.
நட்புக்காக என்றில்லாமல் கதைக்காக வேலை செய்துள்ளார். அழகியலாக மட்டும் இல்லாமல் கேமரா ஒர்க் கதைக்கு எப்படி சப்போர்ட் பண்ணும்ன்னு பார்த்து பார்த்து செய்துள்ளார். எடிட்டர் கணேஷ். நான் யோசிச்ச விஷயத்தை அப்படியே கட் பண்ணி காண்பிக்கக்கூடிய திறமைசாலி. தயாரிப்பாளர் குமார் அண்ணன் சொன்ன தேதியில் ஆரம்பிச்சு சொன்ன தேதியில் ரிலீஸ் பண்ணக்கூடியவர். என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்.
எஸ்.ராஜா
|