ஸ்கினிமலிசம்னா அது சிவாத்மிகாதான்!
கண்களில் காஜல் கூட போடாமல் ஈர்க்கும் கண்ணழகி, இயல்பான அழகு, மென் புன்னகை... என தனித்துவமான பாதையில் பயணிக்கிறார் சிவாத்மிகா ராஜசேகர். கிராமத்துப் பாவாடை தாவணி கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்றாலும் பொருந்திப் போகிறார். நகரத்து சல்வார் நெக்ஸ்ட் டோர் என்றாலும் கச்சிதமாக அடாப்ட் ஆகிறார். இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள ரொமான்டிக் ரீல்ஸ் என பட்டியலிட்டால் நிச்சயம் அதில் சிவாத்மிகா ராஜசேகர் பாடல்களும் காட்சிகளும் தனி அந்தஸ்து பெறும். ‘பாம்’ படத்தைத் தொடர்ந்து ‘ஆரோமலே’ என 2025 லக்கி வருடமாகவும் அவருக்கு மாறி இருக்கிறது.  அடடே... அடிக்கடி சந்திக்கிறோம்?
வாரா வாரம் பட ரிலீஸ் வழியா சந்திக்கணும்னு ஆசைப்படறேன். இன்னும் நிறைய கதைகள்ல நடிக்கணும். கரியர் கொஞ்சம் வேகமா நகர ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. 2022ல்தான் தமிழில் எனக்கு ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானது. அப்புறம் இப்பதான் ‘பாம்’ படமும், ‘ஆரோமலே’ படமும் நடிச்சிருக்கேன். இடையில் தெலுங்கில் படங்கள் செய்தேன். ஆனா, மூணு வருஷங்களுக்கு முந்தைய ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் பாட்டு இப்ப வரை ட்ரெண்டிங்ல இருக்கு. வேற காதல் பாடல்கள் ஹிட்டானாலும் அதில் நானும், அசோக் செல்வனும் நடிச்ச சீன்களை சேர்த்து ரீல்ஸ் வருது! ‘ஆரோமலே’..?
சாரங் தியாகு டைரக்ஷன்ல கிஷன் தாஸ் ஜோடியா நடிச்சிருக்கேன். ரெண்டு பேருமே யங் டேலண்ட்ஸ். இந்தப் படமும் அப்படித்தான் இருந்துச்சு. ஷூட்டிங் முழுக்க ஜாலியா, ஃப்ரெண்ட்லியா, காலேஜ் அல்லது ஆபீஸ் கேங் கூட சுத்திட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. கதையும் லைட் வெயிட்டா, ஜாலியா இருக்கும். நல்ல விமர்சனங்கள் வந்திருக்கு. அஞ்சலினு படத்துல பேரு. கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர்தான். ஆனா, போல்டான பொண்ணு. ரொம்ப சேலஞ்ச் கொடுக்கற ஒரு கேர்ள். கதை முழுக்கவே என்னைச் சுற்றிதான் நடக்கும்.
அப்பா டாக்டர் ராஜசேகர் இப்போ என்ன சொல்கிறார்?
அப்பவும் சரி இப்பவும் சரி அப்பாவுக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும். அப்பா, அம்மா (நடிகை ஜீவிதா) வழியிலேயே நானும் அக்கா சிவானி ராஜசேகரும் ஆரோக்கியமான சினிமா கரியர்ல இருக்கோம். அதனால் ஹாப்பியா இருக்காங்க. அக்கா ஒரு பக்கம் மருத்துவரா பயிற்சி செய்துகிட்டே நடிச்சுட்டு இருக்காங்க.
ஸ்கினிமலிசம் கதாநாயகிகள் என பட்டியலிட்டால் நிச்சயம் நீங்களும் அதில் ஒருவர்... தானாகவே அப்படியான கதாபாத்திரங்கள் அமைகிறதா?
‘நித்தம் ஒரு வானம்’ல இருந்தே எனக்கு அதீத இயல்பான கதாபாத்திரமாதான் அமையுது. அதிக மேக்கப், கிராண்ட் லுக் இதெல்லாம் தேவைப்படலை. மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் மனநிலைக்கு ஏற்ப மாறிக்கிட்டே இருக்கும். திடீர்னு நல்லா டிரஸ் பண்ணுவேன். அதீத மேக்கப், பிரைட் லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு போகணும்னு தோணும். ஒரு சில நாட்கள் பாந்தமா ஒரு சேலை, லிப் கிளாஸ் போதும்னு தோணும். ஆனா, திரையில் மினிமம் மேக்கப்பில் காட்டலாம் என முடிவெடுப்பது இயக்குநர்கள்தான்.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
‘விசா’ வெப் தொடர் மூலமா ஓடிடி மார்க்கெட்டில் கால் பதிக்கப் போறேன். என் கூட ராகுல் விஜய், ஸ்ரீ கௌரிப்ரியா நடிச்சிருக்காங்க. இது ஒரு ஃபாரின் அடிப்படையிலான ரொமான்டிக் வெப் சீரிஸ். இது இல்லாம தெலுங்கில் ரெண்டு ப்ராஜெக்ட்ஸ் ஷூட் போகுது. தமிழில் ஒருசில ப்ராஜெக்ட்ஸ் பேசிட்டு இருக்காங்க.
ஷாலினி நியூட்டன்
|