போலீஸா அர்ஜுன் நிறைய நடிச்சிருந்தாலும் இது ஃபிரஷ்ஷா தெரியும்!



‘‘எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். படிச்சது டிப்ளமோ. ஆனால், சினிமாதான் வாழ்க்கை என்று வளந்தவன் நான். குறும்படங்கள், விளம்பர படங்கள்தான் படம் இயக்கும் தைரியத்தை கொடுத்துச்சு. இண்டிபெண்டன்ட் ஃபிலிம் மேக்கர்களுக்கு முதல் பட வாய்ப்பு என்பது பெரும் போராட்டம். 
பதினைந்து வருட போராட்டத்துக்குப் பிறகுதான் இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. 
தயாரிப்பாளருக்கும் எனக்கும் ஒரே ஊர் என்பதால் அந்தபந்தம் சினிமா செய்ய உதவியாக இருந்துச்சு. குழந்தைகள் இல்லாத வீடு இல்லை. அப்படி குழந்தை, குடும்பம் என்று வாழும் மக்களுக்கு ‘தீயவர் குலை நடுங்க’ முக்கியமான படமாக இருக்கும். 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க வருகிறவர்களுக்கு இந்தப் படம் தொடக்கத்திலிருந்தே திருப்தியைக் கொடுக்கும்...’’ நம்பிக்கையுடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன்.

டைட்டிலில் தமிழ் கொஞ்சுகிறதே?

நன்றி. அனல் பறக்கும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமா இருந்துச்சு. அதிகம் விவரித்து சொல்ல முடியாத கதை இது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இரண்டுவிதமான குணம் இருக்கும். பல நேரங்களில் நல்லவன் மட்டுமே வெளியே தெரிவான். உள்ளே இருக்கும் கெட்டவன் வெளியே தெரியமாட்டான். உள்ளே இருக்கும் அந்த கெட்டவன், நல்லவன் என்ற போர்வையில் என்னவெல்லாம் பண்றான் என்பதைத்தான் இதில் சொல்ல வர்றோம். 

அடிப்படையில் இது க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர். ஒரு வகையில் பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். நார்மல் போலீஸ் அதிகாரி தன்னுடைய காவல் வட்டத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கிறார். மிகைப்படுத்துதல் இல்லாமல் நடக்கும் அந்த விசாரணையில் அவர் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதை  விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

என்ன சொல்கிறார் அர்ஜுன்?

போலீஸ் கேரக்டர் என்றால் அர்ஜுன் சார் மைண்ட்ல வந்து நிற்குமளவுக்கு ஏராளமான படங்களில் போலீஸாக பின்னியெடுத்தவர். அதிலிருந்து தனித்துவமாக இதுல அர்ஜுன் சார் தெரிவார்.

இரண்டாவது பாதியில் அழுத்தமான ஒரு விஷயத்தை சொல்லியுள்ளோம். அதை தாங்குவதற்கு ஆளுமைமிக்க ஹீரோ தேவைப்பட்டார். அதற்கு அர்ஜுன் சார் நூறு சதவீதம் பொருத்தமாக இருந்தார். 

அர்ஜுன் சாரிடம் கதை சொல்லும்போது இருந்த அதே சப்போர்ட் ரிலீஸ் வரை தொடர்கிறது. மகுடபதி என்ற கேரக்டரில் வரும் அவருக்கு ஆர்ட்டிஸ்ட்டாக மகுடம் சூட்டும் காட்சிகள் ஏராளமாக உள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய ஒர்க்கிங் ஸ்டைல் நெக்ஸ்ட் லெவல். அவருடைய அனுபவத்துக்கு நான் குழந்தை மாதிரி என்று சொல்லலாம். கேரக்டரை அவர் அப்ரோச் பண்ணும்விதம் பெரும் வியப்பைக் கொடுக்கும். 

இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை இருநூறு மடங்காக ஸ்கிரீனில் கொண்டு வந்துவிடுவார். கதை எழுதியவர்கள் கூட அப்படி யோசித்து இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு கேரக்டரை மெருகேற்றுவார்.அர்ஜுன், நடிகர் மட்டுமல்ல, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அவருடன் வேலை செய்யும்போது அழுத்தம் இருந்ததா?

அர்ஜுன் சாரைப் பொறுத்தவரை பல  மொழிகளில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியவர். அவரை எப்படி வேலை வாங்கப்போகிறோம் என்ற பிரஷர் ஆரம்பத்தில் இருந்துச்சு. சில நாட்களில் அர்ஜுன் சார் எளிமையாகப் பழகி எனக்குள் இருந்த தயக்கத்தை உடைத்துவிட்டார்.

தினமும் படப்பிடிப்புக்கு முன் ஷாட்டை எப்படி எடுக்கப்போகிறோம் என்பதை துல்லியமாக புரிஞ்சு வெச்சிருப்பார். அவருடைய ஆர்வம் எப்படியிருந்துச்சுன்னா சினிமாவுக்கு புதுசாக வருபவர்கள் காண்பிக்கும் இன்வால்வ்மென்ட் மாதிரி உற்சாகமாக இருந்துச்சு.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்ன கேரக்டர்?

ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது எந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்று ஆடியன்ஸ் வரை தெரியும்.

இதுல ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் டீச்சராக வர்றார். கேரக்டருக்காக எப்போதும் கவனம் செலுத்தக் கூடியவர். அதுபோல் ஸ்பெஷல் டீச்சர் கேரக்டர் என்பதால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பல மாதங்கள் பழகி அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டார்.

சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகளை மிக அழகாக கடத்தி மீரா என்ற கேரக்டருக்கு பெருமை சேர்த்தார்.முக்கிய வேடங்களில் வேல.ராமமூர்த்தி, ராம்குமார், லோகு, தங்கதுரை, பிரவீன்ராஜா, அஜய் ரத்னம், ஓ.ஏ.கே.சுந்தர், அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜி.கே.ரெட்டி, பேபி அனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

சரவணன் அபுமன்யு  ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ போன்ற படங்கள் செய்தவர். பெரும்பாலான காட்சிகளை லைவ்வாக எடுத்தோம். எந்த இடத்துல கேமரா வெச்சிருப்பாங்கனு யோசிப்பீங்க. 

அப்படி விஷுவல் பிரம்மாண்டமாக இருக்கும்.பரத் ஆசிவகன் இசையில் மூன்று பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அபாரமான இசை ஞானம் உள்ளவர். பாடல், பின்னணி இசை பேசப்படுமளவுக்கு புதுவிதமாக இருக்கும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர். தயாரிப்பு ‘ஜி.எஸ்.ஆர்ட்ஸ்’ ஜி.அருள்குமார்.
 
படத்துல வேறென்ன ஹைலைட் இருக்கிறது? 

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்ற முன்னெடுப்பு இந்தப் படம் பார்த்த பிறகு அதிகமாகும். சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிஞ்சு பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள். 

பயமுறுத்துற வேலை இருக்காது. ஃபேமிலியா வர்றவங்க என்ஜாய் பண்ணுவாங்க. மற்றபடி, இது ரசிகர்கள் மேல் அதிக பாரத்தையும் வைக்காத, அதே சமயம் லைட்வெயிட்டும் இல்லாத சமூக அக்கறையுள்ள படமாக இருக்கும்.

எஸ்.ராஜா