நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர்!



சமூக வலைத்தளப் பக்கங்களைத் திறந்தாலே முதலில் அடிபடும் ஒரு பெயர், ஜொஹ்ரான் மம்தானி. உலகின் மிகுந்த செல்வாக்கான, முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க்கின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஜொஹ்ரான். 
கடந்த 1665லிருந்து 110 மேயர்கள் நியூயார்க்கை நிர்வகித்து வந்திருக்கின்றனர். வருகிற புது வருடத்தின் முதல் நாளில், 111வது மேயராகப் பதவியில் அமரப்போகிறார் ஜொஹ்ரான். 
இவ்வளவு வருடங்களில் ஒரு இஸ்லாமியர் கூட நியூயார்க்கின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர் என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார் மம்தானி. மட்டுமல்ல, நியூயார்க்கின் முதல் தெற்கு ஆசிய மேயர், நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயர் மற்றும் முதல் இளம் வயது மேயரும் இவரே. 

ஆம்; ஜொஹ்ரானின் வயது 34தான். ஜனநாயக கட்சியின் உறுப்பினரான ஜொஹ்ரான், அமெரிக்காவின் முக்கியமான அரசியல் அமைப்பான ‘டெமாக்ரடிக் சோஷியலிஸ்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’விலும் உறுப்பினராக உள்ளார். 

யார் இந்த ஜொஹ்ரான் மம்தானி? 

உகாண்டாவில் உள்ள கம்பாலாவில் பிறந்தவர், ஜொஹ்ரான் குவாமே மம்தானி. கானாவின் முதல் பிரதமரும், முதல் அதிபருமான குவாமேவின் பெயரைக் கௌரவிக்கும் விதமாக மம்தானிக்கு இப்பெயரை வைத்தனர் அவரது பெற்றோர். 

மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி மும்பையில் பிறந்த குஜராத்தி இஸ்லாமியர்; உகாண்டாவில் வளர்ந்தவர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மீரா நாயர்தான் மம்தானியின் அம்மா. ரூர்கேலாவில் பிறந்து புவனேஸ்வரில் வளர்ந்தவர், மீரா நாயர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐந்து வயது வரை கம்பாலாவில் வளர்ந்தார், மம்தானி. கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் மஹ்மூத் மம்தானி நியமிக்கப்பட்டார். அதனால் மம்தானியின் குடும்பம் கேப்டவுனுக்கு நகர்ந்தது. அடுத்த இரண்டு வருடங்களிலேயே மம்தானியின் குடும்பம் நியூயார்க்கில் குடியேறியது. 

அப்போது மம்தானிக்கு வயது 7. மம்தானியின் குழந்தைப் பருவம் அம்மா படப்பிடிப்பு நடத்தும் இடங்களில்தான் அதிகமாக கழிந்தது. அம்மாவின் படங்களில் நடிப்பவர்களுக்குச் செல்லப்பிள்ளையாக மம்தானி இருந்தார். 

பள்ளியில் படிக்கும்போதே மாணவர்கள் மத்தியில் தேர்தலை நடத்தியிருக்கிறார் மம்தானி. ‘‘எல்லோருக்குமே சம உரிமை, போருக்கான எதிர்ப்பு, இராணுவத்துக்குச் செலவிடுவதைவிட, கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்குவது...’’ என்று அப்போதே அவரது கொள்கைகள் எல்லோரையும் கவர்ந்தது. மட்டுமல்ல, அவர் படித்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் மத்தியில் கால்பந்து விளையாட்டுதான் பிரபலம். ஆனால், மம்தானிக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். 

பள்ளிக்கூடத்தில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கினார். அதே நேரத்தில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவதையும் அவர் தவிர்க்கவில்லை. 

இப்படி சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புடன் இருந்தார் மம்தானி. கல்லூரி காலத்தில் ஒரு பத்திரிகையாளராக வலம் வந்தார், மம்தானி. கல்லூரியிலிருந்து வெளியான ஒரு நாளிதழில் அரசியல், கலாசாரம், விளையாட்டு சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதினார். இதுபோக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான செயல்பாடுகளிலும் ஈடுபட்டார். 

மட்டுமல்ல, இசையிலும் பெரும் ஆர்வமுடையவர் மம்தானி. ஹிப்-ஹாப் இசையின் தீவிர ரசிகர் இவர். ராப் இசைக்கலைஞர்களுடன் இணைந்து சில ஆல்பங்களைத் தயாரித்தும் இருக்கிறார். 

கடந்த 2019ல் தனது பாட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘நானி’ என்ற தனிப்பாடலையும் வெளியிட்டிருக்கிறார். இதுபோக அம்மாவின் படங்களிலும் வேலை செய்திருக்கிறார். இளம் வயதில் அவர் தொடாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பன்முக ஆளுமையாக வலம் வந்திருக்கிறார் மம்தானி. 

கடந்த 2015ல் அரசியலுக்குள் நுழைந்த மம்தானி, 2017ல் நியூயார்க் நகரின் ‘டெமாக்ரடிக் சோஷியலிஸ்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’வின் உறுப்பினராகி, இன்று நியூயார்க்குக்கே மேயராகிவிட்டார். 

இவரைத் தோற்கடிப்பதற்காக பல கார்ப்பரேட் முதலாளிகள் பில்லியன் கணக்கில் செலவழித்திருக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் வரியை உயர்த்துவது, மக்களின் குறைந்தபட்ச கூலியை உயர்த்துவது குறித்து வாக்குறுதி தந்திருந்தார். 

டிரம்ப் மற்றும் அமெரிக்க பில்லினியர்கள் நேரடியாகவே மம்தானிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையெல்லாம் மீறி  10,36,051 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார் மம்தானி. பதிவான மொத்த வாக்குகளில் 50.4 சதவீதம் இது. மம்தானியை எதிர்த்துப் போட்டியிட்ட  ஆண்ட்ரூ க்யூமோ 8,54,995 வாக்குகளையும், கர்டிஸ் சில்வா 1,46,137 வாக்குகளையும் மட்டுமே பெற்றிருந்தனர். 

ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிக முறை நியூயார்க்கின் மேயராக இருந்து வருகிறார்கள். அதனால் கட்சியின் செல்வாக்கால் மம்தானி வென்றுவிட்டார் என்ற பார்வையும் இருக்கிறது.

த.சக்திவேல்