ஆசியாவை மிரளவைத்த நெல்லை மகளின் கால்கள்!
சமீபத்தில் பஹ்ரைன் நாட்டில் நடந்த மூன்றாவறாது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் திருநெல்வேலியைச் சேர்ந்த எட்வினா ஜேசன்.18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் முதலில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர், தொடர்ந்து மெட்லி ரிலே போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் ஜெயித்தார்.
 இந்த மெட்லி ரிலே போட்டியில் ஒரு வீராங்கனை நூறு மீட்டரும், இன்னொரு வீராங்கனை இருநூறு மீட்டரும், மூன்றாவது வீராங்கனை 300 மீட்டரும், நான்காவது வீராங்கனை 400 மீட்டரும் தொடர் ஓட்டத்தில் ஓடவேண்டும். இதில் நான்காவதாக 400 மீட்டர் ஓடிய எட்வினா இந்திய அணியை இரண்டாம் இடம் பிடிக்கச் செய்து வெள்ளிப் பதக்கம் பெற வைத்தார். இந்நிலையில் கடந்த வாரம் எட்வினாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்.
 ‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கு. பலகட்ட பயிற்சிகளுக்குப் பிறகு இந்த வெற்றியைப் பெற்றிருக்கேன்...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசும் எட்வினா, தற்போது திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.‘‘அப்பா ஜேசனுக்குச் சொந்த ஊர் நாசரேத். அம்மா சிந்தி பிரின்ஸ். அண்ணன் ரயன் எஞ்சினியரிங் படிக்கிறார். இப்போ, பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வசிக்கிறோம். அப்பா கருப்பட்டி ஹவுஸ்னு காஃபி கடை வைத்து நடத்துறார்.
 நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தடகளத்தில் இருக்கேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது அப்பா டென்னிஸ்ல சேர்த்துவிட்டாங்க. பிறகு என்னுடைய பயிற்சியாளர் ஷிப்ட்டாகி போயிட்டார். அப்போ, என் அண்ணன் ரயன்தான் வேறு ஏதாவது ஸ்போர்ட்ஸ் ட்ரை பண்ணலாம்னு சொன்னார். அப்பாவும் மைதானத்துல கொண்டு போய்விடுறேன். உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதில் சேர்ந்துக்கோனு சொன்னாங்க.
 அப்படியாக அண்ணன் தடகளப் போட்டிக்குப் பயிற்சி செய்தார். நான் போகல. பிறகு அவரைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்து அவர்கூட போக ஆரம்பிச்சேன். முதல்ல மாவட்ட அளவில் அண்டர் 12 பிரிவு போட்டிகளில் கலந்துக்கிட்டேன். அதில் வெள்ளி, வெண்கலம்னு வாங்கினேன். அப்புறம் தங்கப் பதக்கம் வென்றேன். அதே அண்டர் 12 பிரிவில் 600 மீட்டரும் உண்டு. அதிலும் மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் வாங்கினேன்.
அங்கிருந்து தேர்வாகி அண்டர் 14ல் மாநில அளவுக்குப் போனேன். ஆனா, மாநில அளவில் பதக்கம் வாங்கமுடியல. ஐந்தாவது, ஆறாவதுதான் வரமுடிஞ்சது.
இரண்டு ஆண்டுகள் இப்படியே மாவட்ட அளவில் தங்கப்பதக்கம் வாங்கறதும், மாநில அளவில் தோற்பதுமாக இருந்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது. பிறகு, நாராணம்மாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்தேன். அங்கே மூர்த்தி சாரும், மகேஷ் சாரும் எனக்கு பயிற்சி அளிச்சாங்க.
இவங்க இரண்டு பேரும் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அவங்க எப்படி என்னை மேலே கொண்டு வரலாம்னு யோசிச்சு நிறைய ஊக்கப்படுத்தினாங்க. அவங்களுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி ஈரோடுல அண்டர் 16 பிரிவில் நடந்த மாநில அளவிலான 600 மீட்டர் போட்டியில் முதல்முறையாக தங்கப்பதக்கம் வாங்கி ரெக்கார்டும் செய்தேன். அப்புறம், தேசிய அளவில் அண்டர் 16 பிரிவில் கலந்துக்கிட்டேன். அங்கே 600 மீட்டர்ல தங்கப் பதக்கம் ஜெயிச்சேன். ஒரு நிமிடம் 33 விநாடியில் வந்து சாதனையும் படைச்சேன். இதனால் என்னுடைய பெர்ஃபாமன்ஸை வச்சு இந்தாண்டு சர்வதேச அளவில் சவுதி அரேபியாவில் நடந்த ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சது. இது ஏப்ரல் மாசம் நடந்தது. ஆனா, அங்கே பதற்றத்துல ஐந்தாவது இடம்தான் வந்தேன்.
அப்புறம், கொஞ்ச நாட்கள்ல கேலோ இந்தியா நடந்தது. இதில் அண்டர் 18 பிரிவில் 400 மற்றும் 800 மீட்டரில் தங்கப்பதக்கம் வென்றேன். பிறகு, 4X400 மீட்டர் ரிலேயில் வெள்ளிப் பதக்கம் கிடைச்சது.அப்புறம் ஜூனியர் நேஷனல் வந்தது. அதிலும் 400 மீட்டர், ரிலே போட்டியில் தங்கப் பதக்கம் ஜெயிச்சேன். இதனால், என்னுடைய பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருக்குனு மீண்டும் இன்னொரு சான்ஸ் கிடைச்சது. அதுதான் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டி.
இதில் பதட்டமும், பயமும் இல்லாமல் நம்பிக்கையுடன் கலந்துக்கிட்டேன். இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது சந்தோஷமாக இருக்கு...’’ என அவர் மகிழ்ச்சியுடன் நிறுத்த, பயிற்சியாளர் மகேஷ் தொடர்ந்தார். ‘‘ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் எட்வினா நாரணம்மாள்புரம் கிளப்புக்கு வந்தாங்க. நாரணம்மாள்புரம் ஒரு சின்ன கிராமம். இப்போ, இங்குள்ள இந்தக் கிளப்பிலிருந்து நான்காவது சர்வதேச விருது பெற்றவராக எட்வினா வந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
நான் நீளம் தாண்டுதலில நேஷனல் மெடலிஸ்ட். காலில் அடிபட்டதால் பயிற்சியாளர் கோர்ஸ் முடிச்சிட்டு இங்கே கிளப்ல பயிற்சி அளிக்கிறேன். இங்க எங்களுக்கு எல்லாமே பயிற்சியாளர் மூர்த்தி சார்தான். அப்புறம், இங்க ஃபிராங்க் பால் ஜெயசீலன்னு ஒரு கோச் இருக்காங்க. அவங்க முன்னாள் இந்திய தடகள அணி பயிற்சியாளராக இருந்தவங்க. அவங்க நிறைய ஆலோசனைகளும், பயிற்சி நுணுக்கங்களும்சொல்லிக்கொடுப்பாங்க.
எட்வினா எங்க கிளப்புக்கு வரும்போது எந்த லெவல்ல இருக்காங்கனு நாங்க ஒரு தேர்வு வச்சோம். அப்புறம் நான், மூர்த்தி சார், ஃப்ராங்க் பால் ஜெயசீலன் சார் மூணு பேரும் பேசி இந்த ஈவென்ட்டுக்குத் தயார்படுத்தலாம்னு முடிவெடுத்தோம். அப்படியாக அவரை 600 மீட்டருக்குத் தயார்படுத்தினோம். மாநில அளவுலயும், தேசிய அளவுலயும் ஜெயிச்சாங்க. பிறகு, 400 மீட்டருக்குத் தயார்படுத்தி போட்டிக்கு அனுப்பினோம். இப்போ சாதிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
இதில் எட்வினாவின் பெற்றோரின் பங்களிப்பு ரொம்ப அதிகம். அவங்கதான் எட்வினாவை தொடர்ந்து ஊக்கப்படுத்திட்டே வர்றாங்க...’’ எனப் பயிற்சியாளர் மகேஷ் சொல்ல, புன்னகையுடன் எட்வினா தொடர்ந்தார். ‘‘அடுத்த ஆண்டு யூத் ஒலிம்பிக் வருது. அதில் தங்கப்பதக்கம் வாங்கணும்னு இலக்கு வச்சு இப்ப பயிற்சி செய்திட்டு இருக்கேன். நிச்சயம் வெல்வேன்னு நம்பிக்கை இருக்கு. என்னுடைய எதிர்கால லட்சியம் ஒலிம்பிக்ல பதக்கம் வெல்லணும் என்பதுதான்...’’ என நம்பிக்கைபொங்கச் சொல்கிறார் எட்வினா ஜேசன்.l
பேராச்சி கண்ணன்
|