கண் திருஷ்டி





வீட்டுக்குக் கலர் வாஷ் கொடுத்து அதைப் பளபளவென்று வண்ணமயமாக்கிய பெயின்டர் மணி, வீட்டு உரிமையாளர் மகாதேவனிடம் சொன்னான்.

‘‘பிரமாதமா இருக்கு சார்! இந்த ஏரியாவுலயே இப்ப உங்க வீடுதான் அழகாத் தெரியுது. ஒரு திருஷ்டிப் பூசணி வாங்கிக் கொடுங்க... வாசல்ல கட்டிடறேன்!’’
கேட்டுச் சிரித்தார் மகாதேவன்.

‘‘இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை... வேண்டாம்பா! எந்தக் கண் திருஷ்டியும் என்னை எதுவும் செய்துடாது...’’ என்றார்.
வீட்டுக்குப் போன மணி, அதன்பின் பாக்கி பணம் வாங்க வரவில்லை. அவன் மனைவியிடமிருந்து போன்தான் வந்தது.
‘‘அவரால இன்னும் நாலு நாளைக்கு வர முடியாது சார்! பெரிய பெரிய ஏணியெல்லாம் ஏறிச் சுலபமா பெயின்ட் அடிக்கிறவருக்கு ஒரு சின்ன ஸ்டூல்ல ஏறி கீழே விழுந்து கால்ல சுளுக்கு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘எல்லாம் கண் திருஷ்டி சார். உங்க வீட்டு வேலையைப் பார்த்துட்டு, ‘மணி அண்ணனோட வேலையைப் பார்த்தியா’ன்னு ஏரியால ஒரே பேச்சா போய், இவர் மேல திருஷ்டி விழுந்திடுச்சி...’’
போனை வைத்த மகாதேவன், சிந்தித்தார்.
‘நம்முடைய தன்னம்பிக்கையைத் தாண்டி, அடுத்தவர்களின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும் அல்லவா?’
அடுத்த நிமிடமே திருஷ்டிப் பூசணி வாங்க ஆளனுப்பினார்.