ரஜினியின் தாடி ரகசியம்!





‘‘ரஜினி, ஸ்ரீவித்யாவுக்கு இயக்குனர் சிகரம் பாலசந்தர் காட்சியை விளக்கும் இந்தப் படம் ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பில் எடுத்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்தது ஈ.வி.கே.நாயர்’’ என்னும் போட்டோ ஞானம், நாயர் பற்றியும், ரஜினி படங்களுக்கு மேக்கப்மேனாக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்...

‘‘ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, ‘மூன்று முடிச்சு’, ‘தப்புத்தாளங்கள்’ உள்ளிட்ட படங்களை கலாகேந்திரா நிறுவனம் சார்பில் தயாரித்தவர் ராம.அரங்கண்ணல். கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த அவர்தான், நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாலசந்தரின் பல படங்களைத் தயாரித்தார். ‘அவள் ஒரு தொடர்கதை’ தெலுங்கு ரீமேக்கையும் அவர்தான் தயாரித்தார். ‘அந்துலேநி கதா’ என்ற பெயரில் வெளியான அந்தப் படத்தில், தமிழில் சுஜாதா நடித்த வேடத்தில் ஜெயப்ரதாவும், ஜெய்கணேஷ் நடித்த குடிகாரத் தம்பி கேரக்டரில் ரஜினியும் நடித்தனர்.

கலாகேந்திரா, கவிதாலயா நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு ஈ.வி.கே.நாயர்தான் ஸ்டில் ஃபோட்டோகிராபர். ‘ரெட்டைவால் குருவி’ படம் தயாரிப்பில் இருந்த சமயம், படத்தின் ஸ்டில்களை வாங்குவதற்காக நான் லேபிற்கு சென்றபோது நாயரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரிடம் ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பில் எடுத்த புகைப் படங்களைக் கேட்டேன். அதற்கு அவர், ‘‘ரஜினிக்கு அது முதல் படம். அவர் இந்த அளவிற்கு வருவார்னு எனக்குத் தெரியாது. அதனால் ரஜினி இருப்பதுபோல 7 ஸ்டில்கள்தான் எடுத்தேன்’’ என்று சொன்னார்.

ரஜினியின் முதல் மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி. ரஜினியின் முதல் படத்துக்கும் அவர்தான் மேக்கப் மேன். நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வுக்கும் அவர்தான் மேக்கப் மேன். தமிழ் சினிமா மேக்கப் மேன்களில் தாடி ஒட்டுவதற்கு பெயர் போனவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர், இயக்குனர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம்; இன்னொருவர் சுந்தரமூர்த்தி. எம்.ஜி.ஆருக்கு பீதாம்பரம் ஃபேமஸ் என்றால், ரஜினிக்கு சுந்தரமூர்த்திதான். இந்த இருவரின் கைப் பக்குவத்தில் ஹீரோக்களுக்கு தாடி ஒட்டினால் ஒரிஜினலாகவே தெரியும். ஒட்டு தாடி என அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது. ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தில் ராகவேந்திரா உருவத்திற்கு ரஜினியை மாற்றியதில் பெரும் பங்கு சுந்தரமூர்த்திக்கு உள்ளது.

ரஜினியே விருப்பப்பட்டு சுந்தரமூர்த்தியை அழைத்து வரச்சொல்லி ‘ஸ்ரீராகவேந்திரா’ தாடியை உருவாக்கச் சொன்னாராம். இன்றும் ராகவேந்திரா என்றதும் நம் நினைவுக்கு வருவது நரை கூடிய அந்த அடர்ந்த தாடிதான். ‘நெற்றிக்கண்’, ‘முத்து’, ‘படையப்பா’ படங்களில் ரஜினி தாடி வைத்த கெட்டப்புகள் சுந்தரமூர்த்தியின் கைவண்ணம்தான்.
- அமலன்
படம் உதவி: ஞானம்