கவிதைக்காரர் வீதி





தூரத்தில் கேட்கிற
புகைவண்டி ஒலி...
அருகில் தெரியும்
கோயில் கோபுரம்...
இவையெதுவும்
உன்னை நினைவுபடுத்தாத
காலைப் பொழுதொன்று
இன்னும் விடியவேயில்லை
எனக்கு!

விண்மீன்களை விட்டுவிட்டு
நிலாவைப் பார்க்கிறேன் நான்
நிலாவை விட்டுவிட்டு
விண்மீன்களைப் பார்ப்பாய் நீ...
உன்னையே நீ
பார்த்துக் கொள்வது
உனக்குப் பிடிக்காதுதானே?

சிகரத்தின் மீதுள்ள
சிம்மாசனத்தில் அமர்ந்த
கர்வத்தில்
மீண்டுமொரு முறை
பூத்து விடுகின்றன
உன் கூந்தலேறிய பூக்கள்.

உன்னைச் செதுக்கப்
பயன்பட்ட உளி நான்,
சமயங்களில்
கோபிக்கிறபோது
என்னை விடவும்
கூர்மையாக இருக்கிறாய்!

நீ உன் வீட்டில்
நான் என் அறையில்
நாம் நனைய
நினைத்த மழையில்
நனைந்து
கொண்டிருக்கிறது
இந்த இரவு!

உன்னிடமிருக்கும்
இறகுப்பந்து நான்...
எவ்வளவு முறை
தூக்கியெறிந்தாலும்
உன்னைச் சுற்றியே
வந்து விழுவேன்
ஒடிந்த இறகைக்
கையிலேந்தியபடி!