நியூஸ்வே





சாமை வெள்ளம் மூழ்கடித்தபோது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால், மாநில முதல்வர் தருண் கோகோய் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு திரும்பியதும் இதற்குக் கூலாக பதில் சொன்னார் தருண்... ‘‘அறிவைப் பெருக்கிக் கொள்ளவே நான் வெளிநாடு சென்றேன். ஒரு சின்ன இடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால், அறிவு வளராது!’’

ந்தியாவில் விலைவாசி ஏறினால் நல்லது’’ என பேட்டி கொடுத்து மத்திய அரசை வம்பில் மாட்டிவிட்டவர் மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியிலிருந்து காங்கிரஸுக்குத் தாவி வந்தவர் இவர். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முலாயம் சிங்கை மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யும் குணம் கொண்ட இவர், சமீபகாலமாக முலாயமை பாராட்டித் தள்ளுகிறார். காரணம் கேட்டால் வெளிப்படையாகச் சொல்கிறார். ‘‘என்ன செய்வது? பிரதமர், சோனியா, ராகுல் என எல்லோரும் முலாயமைப் புகழ்கிறார்கள். நான் புகழாவிட்டால் தப்பாகப் போய்விடுமே!’’

ந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாற்றப்படுவதாக சமீபத்தில் இரண்டு ஆங்கில செய்தி சேனல்கள், தங்களது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டன. புதிய முதல்வர் என அவர்கள் சொன்னது, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை! ‘‘இது வெறும் வதந்தி’’ என சொல்லிச் சொல்லி அலுத்துப் போன முதல்வர், இப்போது ஏதாவது ஒரு தெலுங்கு சேனலை வாங்கி, அதை காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சேனலாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்.

ரம் இழந்து, வறண்ட இந்தியாவின் தானியக் களஞ்சியமான பஞ்சாப், சீக்கிரமே ஆலிவ் விவசாயத்துக்கு மாறப் போகிறது. ஆலிவ் எண்ணெய்க்கு உலக அளவில் கிராக்கி இருப்பதால், பஞ்சாப் விவசாயிகளை ஆலிவ் மரங்களை நடச் சொல்கிறார் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். ‘வறட்சியான வளைகுடா நாடுகளிலேயே ஆலிவ் செழிப்பாக வளரும்போது, பஞ்சாப்பில் வளராதா?’ என்பது அவரது கேள்வி. வறட்சியான ராஜஸ்தானில் நான்கு மாவட்டங்களில் ஒரு நிறுவனம் 5 ஆயிரம் ஹெக்டேரில் வெற்றிகரமாக ஆலிவ் சாகுபடி செய்வதைக் கேள்விப்பட்டு பாதல் இப்படி மாறிவிட்டார்.

ணர்ச்சிவசப்பட்டு விலகும் வரை, திரிணாமூல் காங்கிரஸ் வசம் ரயில்வே அமைச்சர் பொறுப்பு இருந்தது. அப்போது மேற்கு வங்காளத்துக்கு என ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இப்போது அவற்றை செயலிழக்கச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல். இதனால் டென்ஷன் ஆகியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் கட்சி எம்.பி.க்களை போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். அதோடு பல்வேறு மாநிலத் தலைவர்களை அவரே சென்று சந்தித்து நியாயம் கேட்கவும் போகிறாராம்.

ழல் வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியை சிறையில் போட்டுவிட்டு, அவரது அப்பா ராஜசேகர ரெட்டியின் புகழ்பாடி, அவரை தங்களது அடையாளமாக மாற்றிக் கொள்ளப் பார்க்கிறது ஆந்திர காங்கிரஸ். ராஜசேகர ரெட்டியின் உதவியாளராக இருந்த ராமச்சந்திர ராவ் எழுதிய புத்தகத்தை டெல்லியில் வெளியிட்டனர். குலாம் நபி ஆசாத், வயலார் ரவி என சீனியர் காங்கிரஸ் தலைவர்களோடு, நடிகர் சிரஞ்சீவியும், ஆந்திர அமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். ஆனால் ராஜசேகர ரெட்டி குடும்பமே விழாவைப் புறக்கணித்து விட்டது.