மனிதாபிமானம்





புறவழிச்சாலை...
பைக்கில் விரைந்து கொண்டிருந்த ராகேஷின் வண்டியை, ஒரு பதினெட்டு வயது யுவதி லிஃப்ட் கேட்டு மறித்தாள். ராகேஷ் நிறுத்தாமல் வேகமாகக் கடந்து சென்றான். நூறு மீட்டரைக் கடந்திருப்பான்... ஒரு முதியவர் வண்டியை மறித்து லிஃப்ட் கேட்டார். உடனே பிரேக் போட்டு அவரைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டான் ராகேஷ்.

‘‘பெரியவரே... எங்கே போகணும்?’’
‘‘அதிருக்கட்டும் தம்பி, எனக்கு முன்னாடி ஒரு சின்னப் பொண்ணு உன் வண்டியை மறிச்சு லிஃப்ட் கேட்டாளா?’’
‘‘ஆமாம்... அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’’
‘‘அதை அப்புறம் சொல்றேன்... அந்த அழகான பொண்ணுக்கு லிஃப்ட் குடுக்காம எனக்கு ஏம்பா குடுத்தே?’’
‘‘ஐயா... அழகான அந்தப் பொண்ணுக்கு ஆயிரம் பேர் லிஃப்ட் குடுப்பாங்க. எனக்கு அவசரம்... அதனால நிறுத்தல. ஆனா, வயசான நீங்க லிஃப்ட் கேட்கும்போது என்னால நிறுத்தாம போக முடியல.’’

‘‘தம்பி... இது எல்லாமே ஒரு செட்டப்தான். எங்க டி.வி சேனல் நடத்துற ‘சிறந்த மனிதாபிமானி’ங்கிற நிகழ்ச்சிக்காகத்தான் இப்படி லிஃப்ட் கேக்குற மாதிரி நடிச்சோம். நீங்க எங்க நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு பத்தாயிரம் ரூபா பரிசு வாங்கிட்டுப் போகணும்’’ என்றபடி ராகேஷை தட்டிக் கொடுத்தார் பெரியவர்.