திருப்புமுனை





‘‘இதயம் தொடர்பான எந்தப் பரிசோதனைக்கும் அடிப்படை இ.சி.ஜி. நம் இதயத் துடிப்பின் அதிர்வுகளை மேலும் கீழுமாக ஒரு கிராஃப் போல அது காட்டும். அதிர்வலைகளின் படம் மேலேயும் கீழேயும் அலை பாயாமல், ஒரு நேர்க்கோட்டில் சமமாக இருந்தால், நம்மைவிட்டு உயிர் பிரிந்துவிட்டது என்று அர்த்தம். எல்லாருடைய வாழ்விற்கும் இது பொருந்தும். ஏற்றமும் இறக்கமும், மகிழ்ச்சியும் துன்பமும் நம்மை மேலும் கீழுமாக சுழற்றிக் கொண்டே இருக்கிறது. ஏற்றத்தில் மயங்கி விடாமலும், இறக்கத்தில் தேங்கி விடாமலும் இருக்கிறவரை நம்முடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது’’ என்கிற டாக்டர் பழனிவேலு, ‘லேப்ராஸ்கோப்பி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்கிற வல்லுநர்களில் இந்திய அளவில் முக்கியமானவர். உலகம் முழுவதும் அங்கீகாரங்களை, கௌரவங்களை அள்ளிக் குவித்தாலும், தன்னை வளர்த்தெடுத்த கொங்கு மண்டலத்தின் பிள்ளையாகவே இன்னும் இருக்கிறார். சிரிப்பிலும் பேச்சிலும் அதே கொங்கு வாசம். 

‘‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்கிற பகவத்கீதை வரிகள், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது சமாதானம் செய்து கொள்ள உதவியா இருக்கும். ஆனால், எதிர்காலம் தேடிப் போராடுகிறவர்களுக்கு, வேண்டியதை நடத்திக் காட்டும் போர்க்குணம் இருக்கணும். என்னுடைய பலமாகவும் அதைத்தான் சொல்வேன். எதெல்லாம் நடக்கக் கூடாதோ, அதெல்லாம் என் வாழ்வில் நடந்திருக்கு. எதையெல்லாம் நான் நடத்த விரும்பினேனோ, அதையெல்லாம் போராடி நடத்தியிருக்கேன். தோல்வியை முன்தேதியிட்டு ஒப்புக்கொள்வதில் எனக்கு சம்மதம் இல்லை. கடைசிவரை முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தால், அதை ஏற்றுக் கொள்வதிலும் எனக்கு வெட்கம் இல்லை.

நாமக்கல் பக்கத்தில் மேல்சாத்தம்பூர் என்கிற சின்ன கிராமம் அப்பாவுக்குப் பூர்வீகம். 1950களில் தமிழகத்தில் நிலவிய கடும்பஞ்சம், பல ஏழைக் குடும்பங்களை ஊரைவிட்டு மட்டுமின்றி, நாட்டைவிட்டும் துரத்தியது. எங்கள் குடும்பம் மலேசியாவில் தஞ்சம் புகுந்தது. எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கை, பாறையை தலையால் மோதி உடைப்பதைப் போல கடினமானது. ரப்பர் மரத்தில் பால் எடுக்கிற தொழிலாளியின் மகனாக என் சின்னச் சின்ன ஆசைகளும் நிறைவேறியதில்லை. நினைத்த எதுவும் எளிதில் நடக்காது. ஒருவேளை சுடுசோறு சாப்பிட, தினம் மணிக்கணக்கில் உழைக்க வேண்டி இருக்கும். அங்கிருந்துதான் போராடும் குணம் என்னிடம் ஒட்டிக்கொண்டதா என்று தெரியவில்லை. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடத்திலிருந்து குடிபெயர்ந்து, அறிமுகம் இல்லாத வேறொரு இடத்தில் பிழைப்பு நடத்துவது என்பது விவரிக்க முடியாத துயரம். சொந்தபந்தங்கள் யாரும் இல்லை என்கிற உணர்வோடு தனிமையை உணர்ந்த கணங்கள், பாதுகாப்பு இல்லாத மனநிலையைத் தரும்.



பஞ்சம் பிழைக்கப் போன இடத்தில், முறையான கல்வி வாய்ப்பும் இல்லை. எனக்கோ படித்துவிட வேண்டும் என்கிற வேட்கை அணையாத நெருப்பைப் போல மனசுக்குள் கனன்று கொண்டிருந்தது. அப்பா, அம்மா இருவருமே படிக்காதவர்கள். படித்திருந்தால் சொந்த நாட்டில் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். படிப்பு இல்லாததால்தான் இப்படி பஞ்சம் பிழைக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்கிற எண்ணம் எனக்குள் ஆழமாக இருந்தது. யாரும் சொல்லாமலேயே புரிந்த உண்மை இது. அனுபவத்தால் இது என் அப்பாவுக்கும் புரிந்திருந்தது. ‘படிப்பில்லாமல் என் வாழ்க்கைதான் இப்படியாகிவிட்டது. பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்’ என்று நினைக்கிற கோடிக்கணக்கான ஏழைத் தகப்பன்களில் ஒருவராக என் அப்பாவும் இருந்தார்.

படித்த சிலருக்கு அந்த எஸ்டேட்டில் மரியாதையான வாழ்க்கை இருந்தது. அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வானதாகவும் இருந்தது. கஷ்டங்கள் இருந்தாலும், பிள்ளை படித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தால், அங்கிருக்கும் பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டனர். என் வயதுள்ள சிறுவர்கள் வேலைக்குப் போகும்போது, நான் பள்ளிக்குப்போனேன். கல்வி அரிதான விஷயம் என்பதும், அவசியமான வாழ்வியல் ஆதாரம் என்பதும், நான் பள்ளிக்கூடம் போனதில் கற்ற முதல் பாடம். என் கண் முன்னால் குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குப் போன சக வயதுக் குழந்தைகள் என்றும் மறையாத கருப்பு வெள்ளை ஓவியமாக நெஞ்சில் நிழலாடி, படிப்பில் என் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அப்போது இந்தியா-சீனா போர் மூண்டது. மலேசியாவில் சீனர்கள் அதிகம். பஞ்சம் பிழைக்கப் போன இந்தியர்களைவிட அவர்கள் வசதியாக வாழ்ந்தனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கும். 13 வயதில் பள்ளி மாணவனாக நானும் சீன மாணவர்களுடன் இப்படி சண்டை போட்டிருக்கிறேன். அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பள்ளிகள் சரிவர இயங்காமல் இருந்தன. இந்தியர்களைவிட அதிக எண்ணிக்கையில் இருந்த சீனர்களால் எங்களுக்கு அச்சுறுத்தலும் இருந்தது. ‘எப்படியாவது இந்தியாவுக்குத் திரும்பி, தமிழ்நாட்டில் கல்வியைத் தொடரவேண்டும்’ என்கிற லட்சியம் வந்தது. திரும்பி வருவதற்கு அதிக பணம் தேவைப்பட்டது. அதனால் நான் படிப்பை நிறுத்திவிட்டு, மலேசியாவில் மூன்றாண்டுகளுக்குமேல் கள்ளுக்கடையில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தேன். ஒரு சின்னப்பையன் கள்ளுக்கடைக்கு தினமும் போய் வந்தால், போதையில் தத்தளிக்கவே வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்களைப் போல அந்நிய தேசத்தில் கஷ்டப்படாமல் வாழ, எப்படியாவது நன்றாகப் படித்துவிட வேண்டும் என்று நினைத்ததால் பாதை தவறாமல் இருக்க முடிந்தது.

கள்ளுக்கடை வேலையில் சம்பளம் போதாமல், பகுதி நேரமாக பூச்சிமருந்து விற்றேன். ‘பலூன் விற்கும் பையனுக்கும், பலூன் வாங்கும் வயதே’ என்று ஒரு கவிதை உண்டு. படிப்பதற்காக, படிக்கும் காலத்தில் வேலைகள் செய்தேன். எதுவும் சுமையாக இருந்தது இல்லை. வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் படிப்பில் கவனம் குறைந்துவிடும் என்பார்கள். எனக்கு நாளுக்கு நாள் படிப்பில் ஆர்வம் அதிகமானது. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராகவே இருந்தேன்.



தமிழகத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தபோது எனக்கு 17 வயதாகிவிட்டது. தமிழகம் வந்து படிக்க வேண்டும் என்கிற கனவு 13 வயதில் வந்தது. அங்கு எட்டாம் வகுப்பு வரை படித்ததற்கான எந்த சான்றிதழும் என்னிடம் இல்லை. 17 வயதில் பள்ளிப்படிப்பு முடிந்து இங்கு கல்லூரியில் சேர்ந்து விடுவார்கள். இந்த நடைமுறை சிக்கலில் என்னை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள். ‘எண்ணெயைத் தடவி மண்ணுல புரண்டாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும்’ என்பார்கள். எனக்கு நியாயமாக ஒட்ட வேண்டிய மண்ணே ஒட்டாமல் போவது பற்றிக் கவலையாக இருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை. ‘படிக்க வேண்டும்’ என்கிற கனவோடு பள்ளிக்கு நடையாய் நடக்கிற என்னைப் பார்த்து, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு இரக்கம் பிறந்தது.

என்னுடைய ஆர்வத்திற்கு, வையாபுரி நாயுடு என்கிற அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவருடைய வேலையைப் பணயமாக வைத்து ஒரு காரியம் செய்தார். எந்தச் சான்றிதழும் இல்லாவிட்டாலும் பள்ளிக்கு வந்துபோக அனுமதித்தார். தவறுதான் என்றாலும், ‘படிக்க நினைக்கிற ஒரு மாணவனை, வேண்டாம் என்று எப்படி ஒரு நல்ல ஆசிரியரால் சொல்ல முடியும்?’ என்கிற எண்ணத்தில் எனக்காக பெரிய ரிஸ்க் எடுத்தார் வையாபுரி. வாழ்வின் மறக்கமுடியாத திருப்புமுனையை அவர்தான் என் வாழ்வில் ஏற்படுத்தினார்.

என்னைப் பள்ளியில் சேர்க்க அவர் மறுத்திருந்தால், கூலி விவசாயியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்திருக்கும். இத்தனைக்கும் நான் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்படிக் கேட்டிருந்திருந்தாலும் என்னால் கொடுத்திருக்க முடியாது. ‘ஒரு மாணவன் படிக்க வேண்டும்’ என்கிற ஒரு தலைமையாசிரியரின் நல்லெண்ணம் என்னைக் கரை சேர்த்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக அவர், தன்னுடைய வேலைக்கு உலை வைக்கிற காரியத்தில் எப்படி ஈடுபட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை! உலகப் புகழ்பெற்ற எடின்பரோ பல்கலைக்கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தபோது, வையாபுரி அவர்களைத் தேடிச்சென்று நன்றி சொன்னேன். நான் எவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவரால் உணர முடியாமல் போனாலும், தன்னுடைய மாணவன் பெரிய கௌரவத்தை அடைந்திருக்கிறான் என்கிற சந்தோஷத்தை அவர் முகத்தில் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.

ஒரு வருடம் இப்படிப் படித்தவனுக்கு, திடீர் சோதனை வந்தது. வையாபுரி அவர்களுக்குப் பதிலாக புது தலைமையாசிரியர் வந்தார். ‘நான் பள்ளிக்கு வந்து படிப்பது விதிமுறைகள்படி தவறு’ என்று சொல்லி தகுதிநீக்கம் செய்தது பள்ளிக்கல்வித்துறை. ‘மலேசியாவிலிருந்து வந்ததால் சான்றிதழ்கள் எதுவும் இல்லை’ என்று விளக்கிச் சொல்ல, கோவை மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார் என் அப்பா. செருப்பு அணியாத ஒரு தகப்பனின் கால்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்காக எந்த வாசலையும் ஏறி இறங்கத் தயாராக இருந்தன. எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டு என்னை மீண்டும் பள்ளியில் சேர்க்கப் போராடினார் அப்பா. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. கைக்கு எட்டியதை யாரோ தட்டிப் பறித்ததுபோல ஏமாற்றம் எனக்குள் சூழ்ந்தது.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்:புதூர் சரவணன்