நிழல்கள் நடந்த பாதை



எமக்குத் தொழில் பேச்சு

எல்லா கலாசாரத்திலும் அந்தந்த துறை சார்ந்த பேச்சாளர்கள் இருப்பார்கள். அரசியல், தத்துவம், வரலாறு, தொழில்நுட்பம், இலக்கியம் என எந்தத் துறையில் வல்லுனர்களாக இருக்கிறார்களோ, அந்தத்துறை குறித்துத்தான் அவர்கள் பேசுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில்தான் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசக்கூடிய பொதுவான பேச்சாளர்களும், அவர்கள் எதைப் பேசினாலும் கேட்கக்கூடிய பார்வையாளர்களும் இருக்கிறார்கள். பேச்சு என்பது தமிழ்நாட்டில் நாடகம், நாட்டியம் போல ஒரு நிகழ்த்துக்கலையாக மாறி எவ்வளவோ காலம் ஆகிறது. தமிழர்கள் சினிமா, தொலைக்காட்சி பார்ப்பதற்கு அடுத்து கூடுகிற மிகப்பெரிய இடம் கூட்டங்கள்தான்.

‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டதன் விளைவோ என்னவோ, வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் படிக்காதவர்கள்கூட, வண்டிவண்டியாகக் கருத்துகள் கொட்டப்படும் பட்டி மன்றங்களிலும் அரட்டை அரங்கங்களிலும் குடும்பம் குடும்பமாக உட்கார்ந்திருப்பதைக் காணலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்று பேச்சு என்பது மிகவும் மையமான இடத்திற்கு வந்துவிட்டது. அதில் பேசப்படாத விவகாரங்களே இல்லை. தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு கருத்துகள் தேவைப்படுகின்றன என்று எனக்குத் திகைப்பாக இருக்கிறது. தங்களைப் பற்றி சிந்திக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது எவ்வளவு சுலபமானது!

தமிழ்நாட்டில் திறமையான பேச்சாளர்கள் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர்கள். அரசியல் இயக்கங்கள் சார்ந்த பேச்சாளர்களை நான் சொல்லவில்லை. அவர்கள் வேறு இனம். தொழில்முறை பேச்சாளர்களின் ரேட் பத்தாயிரம் ரூபாயில் தொடங்கி, ஒரு லட்சம் ரூபாய் வரை போகிறது. டிவி, சினிமா புகழுக்கு ஏற்ப ரேட் ஏறி, இறங்கும். மாதம் குறைந்தது 10-15 கூட்டமாவது பேசுகிறார்கள். ஊதியம், விமானப் பயணம், உயர்ரக தங்கும் விடுதி என ஒரு பிரபல பேச்சாளரை அழைப்பது யானையைக் கட்டி தீனி போடுகிற விஷயம்.

கொஞ்சம் சங்கப் பாட்டு, கொஞ்சம் சினிமா பாட்டு, கொஞ்சம் குட்டிக்கதைகள், கொஞ்சம் பழமொழிகள் - பொன்மொழிகள், கொஞ்சம் ஜோக்குகள், கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் சமூக அக்கறை, கொஞ்சம் டைமிங்... இதெல்லாம் சேர்ந்தால் ஒரு வெற்றிகரமான பேச்சாளர் உருவாகிறார். இந்த மிக்ஸரை என்ன விகிதாசாரத்தில் கலக்கிறார் என்பதில்தான் அவரது தனித்துவம் உருவாகிறது.
உச்சஸ்தாயியில், உணர்ச்சிப்பெருக்குடன் ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டு சட்டென மௌனம் காப்பார். அப்படி என்னதான் சொன்னார் என்று யாரும் யோசிக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட மதபோதகர்கள் பயன்படுத்தும் அதே டெக்னிக். இப்படி அழுகை, சிரிப்பு, கோபம், மௌனம், அதிர்ச்சி என நவரச உணர்வுகளையும் மாற்றி மாற்றிப் போட்டு பார்வையாளர்களைப் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒரு ‘ஜிம்’முக்குப் போய்விட்டு வந்த எஃபெக்ட் கண்டிப்பாக இருக்கும்.

நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் விற்பன்னராக இருந்து, இதுபோன்ற ஒரு பேச்சாளர் இருக்கும் கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டால், அதை நாகரிகமாக தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால், தனது நாவன்மையால் அவர் உங்களை பஸ்பமாக்கி, உங்கள் கையிலேயே பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனுப்பி விடுவார். நீங்கள் ஒரு விஷயம் குறித்து எவ்வளவு ஆழமாகப் பேசினாலும், இழவு வீட்டில் இருப்பதுபோல இருக்கும். பார்வையாளர்கள் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டிக்கொண்டே இருப்பார்கள். உங்கள் ஈகோ வெந்து சுண்ணாம்பாகிவிடும். உங்கள் வாடிய முகத்தைக் கண்டு அவரே உங்கள் மேல் இரக்கப்பட்டு, ‘நண்பர் சொன்னதுபோல’ என்று ஓரிரு முறை சொல்லி, உங்கள் பெயரை ரெஃபர் செய்வார்.

தொழில்முறை பேச்சாளர்களின் ரேட் கன்னாபின்னாவென்று ஏறிவிட்டதாலும், அடுத்த தலைமுறை பேச்சாளர்கள் போதுமான அளவு உருவாகி வராததாலும், என்னைப் போன்ற சில எழுத்தாளர்களுக்கும் பொதுவான கூட்டங்களில் பேச அவ்வப்போது அழைப்பு வருகிறது. ஆனால் தொழில்முறை பேச்சாளர்களுக்குக் கிடைக்கும் எந்த வசதியும் எங்களுக்குக் கிடையாது. கிட்டத்தட்ட சினிமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல! போக வர 1000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஒரு கூட்டம் பேசப்போனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கையில் 2000 ரூபாய் கொடுத்தனுப்புவார்கள். எல்லா ஊரிலும் எழுத்தாளனுக்கு நண்பர்கள் உண்டு என்பதால், யாராவது சாப்பிட கூப்பிட்டுப் போய்விடுவார்கள். கல்லூரி விழாக்களுக்குப் போய் 500 ரூபாய்கூட வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். நம்மைத்தான் இப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்று என்னைவிட பிரபலமான சக எழுத்தாள நண்பர்களைக் கேட்டால், ‘நிறைய நேரம் அதுவே கிடைக்காது’ என்றார்கள் கமுக்கமாக.

பணம் தராதது அல்ல பிரச்னை. நான் ‘உயிர்மை’ சார்பாக நடத்தும் கூட்டங்களில் பேசுகிறவர்களுக்கு பணம் தந்ததில்லை; தர முடியாது. அதற்கான பணபலம் எதுவும் எந்த சிறுபத்திரிகைக்கும் கிடையாது. எழுத்தாளர்களும் அதைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் பெரிய நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், ஊடக வெளிச்சம் இருக்கும் ஒரு நபருக்குச் செய்யும் மரியாதையில் ஒரு சிறு பங்கைக்கூட எழுத்தாளனுக்குச் செய்யத் தயாராக இல்லை என்பது பெரும் அவமானம். தமிழின் முதன்மையான எழுத்தாளன் ஒருவனுக்கு மூவாயிரம் ரூபாயும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பா ளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் சன்மானமாகத் தரும் ஒரு கலாசாரத்தில் நாம் யாருக்காகப் பேசுகிறோம்?

பல நிகழ்ச்சிகளில் அவர்கள் அழைத்த பிரபலங்களைவிட பல மடங்கு அதிகமான தாக்கத்தையும் பங்களிப்பையும் உருவாக்கியிருக்கிறேன். இதை அவர்களே வாய்விட்டுச் சொல்லவும் செய்திருக்கிறார்கள். இருந்தும் ஏன் இந்தப் பாகுபாடு என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சில சமயம் எனக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள், என்னுடன் தொடர்பில் இருக்கும் யாராவது ஒரு பிரபலத்தை பெரிய தொகைக்கு ஃபிக்ஸ் செய்து தரும்படி என்னிடமே கேட்பார்கள்.

தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் இதே கதைதான். அங்கு போய்விட்டு வந்த நவீன தமிழ் எழுத்தாளர்களின் அவமானகரமான கதைகளை தனியே எழுத வேண்டும்.
ஒரு நண்பரிடம், ‘‘நானும் டெய்லி டிவியில் பேசுகிறேன்... என்னோட ரேட் மட்டும் ஏன் ஏற மாட்டேங்குது..?’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘நீ எழுதுறத நிறுத்திட்டு, எழுத்தாளன் என்ற கெட்ட பெயரை தொடச்சிட்டு பேச ஆரம்பி... அப்புறம் உனக்கு யோகம்தான்’’ என்றார். எமக்குத் தொழில் கவிதையல்ல, இனி பேச்சுதான்!

நிற்க நிழல் இல்லை



சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 31 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இந்த மரங்கள் இன்று நேற்று உருவானவையல்ல; சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றி வந்தது இந்த மரங்கள்தான். இந்த மரங்களின் அழிவால் சென்னையில் இந்த வருடம் கடும் குளிர் வாட்டி எடுக்கப்போகிறது என்கிறார்கள்.

தமிழகம் முழுக்க தங்க நாற்கர சாலைகள் அமைப்பதற்காக பல்லாயிரம் மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். பதிலுக்கு மரம் வளர்க்கப்போகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். அரளிச் செடிகளைத் தவிர புல், பூண்டுகூட முளைக்கவில்லை. வளர்ச்சியின் வன்முறைக்கு ஒரு எல்லையே இல்லையா? ஆலோசனையின் ஆபத்து தமிழகத்தில் குடும்ப நீதிமன்றங்களில் செயல்படும் கவுன்சிலர்கள் பற்றி ஒரு செய்தி படித்தேன். அதில் ஒருவர் ரிட்டயர்டு பேங்க் மேனேஜர். இன்னொருவர் பிளஸ் 2 மட்டுமே படித்தவர். ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியர். விவாகரத்து கேட்டு வரும் பெண்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக கோர்ட் இவர்களை நியமித்திருக்கிறது.

எனக்குத் தலை சுற்றியது. விவாகரத்து கேட்டு வந்த ஒரு பெண்ணின் குழந்தைகளிடம் ஒரு கவுன்சிலர் கூறியிருக்கிறார்... ‘‘உங்கம்மா உங்களை விட்டு ஓடப் பார்க்கிறா... ஜாக்கிரதை!’’ என்று.
நம் நாட்டில் முறையாக மருத்துவம் படித்த மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதிலேயே பல சிக்கல்கள் இருக்கின்றன. இதில் போலி உளவியலாளர்கள் வேறு. இவர்களிடம் கோர்ட்டே மக்களை அனுப்புவது துரதிர்ஷ்டத்திலும் துரதிர்ஷ்டம். நீதிமன்றம் தரும் ஊதியம் போதுமானதாக இல்லை என்று உளவியல் படித்தவர்கள் யாரும் வருவதில்லையாம். அதற்காக வேலை வெட்டி இல்லாதவர்கள் எல்லாம் உளவியல் ஆலோசனை வழங்கினால், ஏற்கனவே பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருப்பவர்களின் கதி என்னாவது?
கவுன்சிலிங் என்பது சமூக அறிவும் உளவியல் அறிவும் கொண்ட ஒரு விஞ்ஞானம். வேலை தேடுபவர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் போன்ற பல வேலைகள் இருக்கின்றன. மனித இதயம் போன்ற ஆபத்தான இடங்களுக்குள் தகுதியற்றவர்கள் நுழைவது மிகவும் ஆபத்தானது.
(இன்னும் நடக்கலாம்...)