நயம் படபேசு





82 டன் எடை கொண்ட சென்னை அண்ணா வளைவை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு அதை உடைக்க முயற்சி பண்ணிட்டு, இப்போ மறுபடியும் நெடுஞ்சாலை துறைகிட்ட சொல்லி சீரமைச்சுகிட்டு இருக்காங்க. மக்களே, இதுல மேட்டர் என்னன்னா இடிக்கிறத விட சீரமைக்கிற செலவு ஜாஸ்தி. இப்படி வேலை வெட்டி இல்லாம, வெட்டி வேலை செய்யற மாநகராட்சிக்கு இன்னமும் பல வகையில் வெட்டி செலவு ஐடியாக்கள்...

*  மக்கள் மெரீனா பீச்ச அசுத்தப்படுத்தறாங்க. கடலுக்குள்ள குப்பைய போடுறாங்க. கடற்கரையில கடலையப் போடுறாங்க. அதனால மாநகராட்சி ஏன் ஒரு பெரிய பெட்ஷீட்டா வாங்கி மொத்த மெரீனா பீச்சையும் மூடிடக் கூடாது? அப்புறம் பத்து நாள் கழிச்சு பெட்ஷீட் மேல குப்பை விழாம இருக்க, அது மேல இன்னொரு பெட்ஷீட் போர்த்தலாம்.

*  போற போக்க பார்த்தா சென்னையிலும் பயங்கற மின்வெட்டு வரலாம். அதனால கடற்கரை லைட் ஹவுஸ் சைஸ்ல மெழுகுவர்த்திய செஞ்சு ஏரியாவுக்கு ரெண்டு நட்டு வைக்கலாம். கரன்ட்டு போனா பத்த வைக்கலாம்.

*  வெயில் காலங்களில் வெந்நீர் குடிச்சும் வெறி ஏறலைன்னா, கன்னிமாரா லைப்ரரில இருக்கிற எல்லா புத்தகத்து அட்டைகளையும் கிழிச்சு வைக்கலாம். அப்புறம் ஒரு வாரம் கழிச்சு பசை போட்டு ஒட்டி வைக்கலாம்.

*  சன்னமா மழை பெய்தாலே சின்னாபின்னமா ஆயிடுது சென்னை. அதனால, அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடர்ல மொத்த சென்னைக்கும் ஒரு ரெயின் கோட்டு மாட்டிவிட தீர்மானம் நிறைவேத்தலாம்.

*  கூவக் கரையோர குப்பங்கள் பக்கமும், குடிசைகள் பக்கமும் கொசுத் தொல்லை ஜாஸ்தி. ஸோ, ஒரு பெரிய சைஸ் கொசுவலை வாங்கி மொத்த மெட்ராஸையும் சேர்த்து மூடலாம். அதுவும் சரி வராட்டி ஹெலிகாப்டர் வாடகைக்கு வாங்கி, கொசு மருந்து அடிக்கலாம். அப்பவும் பொழுது போகலைன்னா, மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தினம் கொசு புடிச்சுட்டு வந்து காமிச்சாதான் சம்பளம்னு சொல்லிடலாம்.

*  எப்பவும் டிராபிக் நெரிசல்ல சிக்கித் திணறி முக்கித் தவிக்குது அண்ணா சாலை. பேசாம அண்ணா சாலையில் இருக்கிற பில்டிங் எல்லாத்தையும் ஈ.சி.ஆர் ரோட்டுல பிடுங்கி நட்டுட்டா, அந்தப் பக்கமா எல்லாரும் போக ஆரம்பிச்சுடுவாங்க. இங்க டிராபிக் குறைஞ்சிடும்ல.

*  சென்னைவாசிகள் அதிகமா குப்பை போடுறாங்க. அதனால, வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் மாதிரி, முதுகுல ஒரு மெகா கூடையை மாநகராட்சியே தன் சொந்த செலவுல வாங்கி மாட்டி விட்டுட்டா அவங்கவங்க குப்பைய அவங்களே சுமந்துக்கலாம்.

*  பீச்சோரம் இருக்கும் கண்ணகி எப்பவுமே ஒரே சிலம்போட சிலையா நிக்கிறாங்க. அவங்க கையில மாசம் ஒரு புது டிசைன் வளையல் கொடுத்து கௌரவிக்கலாம்.
(பேசுவோம்)

கிச்சு கீச்சு


மம்மி ஏதோ நெனப்புல, ‘‘யாரய்யா முதல் ‘அமைச்சரு’? அந்த அமைச்சர் பதவியும் பறி’’ன்னு சொல்லப்போறாங்க:(மம்தா, சரத்பவார், முலாயமுக்கு... தயவுசெய்து மத்திய அரசை அடுத்த ஐ.பி.எல் முடிந்து கலைக்கவும். பிரசாரம் ஒரே தொந்தரவா இருக்கும்!