மொட்டை





சலூன் கண்ணாடியைத் திருப்தியுடன் பார்த்துக்கொண்டே பூக்கடை சந்தானம் பர்சில் கையை விட்டார்.
‘‘வேண்டாங்க! புதுசா ஆரம்பிச்சிருக்கற சலூன். கொஞ்ச நாளைக்கு வாடிக்கையா உங்களை மாதிரி ஆட்கள் சேர்ற வரைக்கும் நான் பணம் வாங்கப் போறதில்ல...’’ என்றார் ராமலிங்கம்.

அவரை ஆச்சரியத்துடன் பார்த்தபடி சந்தானம் நகர்ந்தார். மறுநாள் ராமலிங்கம் சலூனைத் திறந்தபோது வாசலில் சந்தானத்தின் நன்றி அட்டையுடன், சாமி படத்துக்குப் போட மாலையும் இருந்தது.

அன்றும் ராமலிங்கம் யாரிடமும் பணம் வாங்கவில்லை. கான்ஸ்டபிள் கந்தசாமிக்கும் ஆச்சரியம்.
‘‘என்னங்க, நான் போலீஸ்னு வாங்கலயா?’’
ராமலிங்கம் சிரித்தபடியே மறுத்தார். மறுநாள் டீக்கடையிலிருந்து ஒரு பாக்கெட் பிஸ்கெட்டும் டீயும் வந்தது. கந்தசாமி பணம் கொடுத்திருந்தாராம்.
அன்று நல்ல கூட்டம். அரசியல்வாதி குழந்தைவேலு மொட்டை போட வந்திருந்தார்.

‘‘கோயிலுக்குப் போக முடியல... மொட்டை போட்டு உள்ளூர்ல பூஜை...’’ - விவரம் சொன்னவர் எவ்வளவு வற்புறுத்தியும் ராமலிங்கம் பணம் வாங்கவில்லை.
மறுநாள் சலூனைத் திறக்கச் சென்ற ராமலிங்கத்திற்கு அதிர்ச்சி!

‘‘அண்ணன் மொட்டை போட்டா நாங்க சும்மா இருக்க முடியுங்களா..?’’ என்றபடி கட்சி ஆட்கள் பலரும் இலவச மொட்டைக்கு கியூவில் நின்றுகொண்டிருந்தார்கள்.