அப்படி ஒண்ணும் நல்லா இல்லை... ஆப்பிள் ஐபோன் 5!





ஒபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா, உங்ககிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா!’ என்று உலகமே அதிருப்தியில் இருக்கிறது ஆப்பிள் நிறுவனத்திடம். ஆம், ஸ்மார்ட் போன் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்நிறுவனத்தின் ‘ஐபோன் 5’, கடந்த செப்டம்பர் 28 அன்று முழுமையாக வெளியிடப்பட்டது. சூப்பர் மேன் பில்டப்போடு விற்கப்பட்ட அந்த போன், இப்போது மக்கு மாணவன் போல வாடிக்கையாளர்களிடம் குட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘‘குட்டு என்றால், வழக்கமான விமர்சனம்தானே’’ என்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘‘எல்லாம் எங்க தப்புதாங்க. தயவுசெஞ்சு மன்னிச்சுக்கோங்க’’ என்று வரலாற்றில் முதன்முறையாக ‘ஆப்பிள் இன்கார்ப்பரேட்’ என்ற ஜாம்பவானை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கும் அளவுக்கு மேட்டர் சீரியஸ்!

‘கம்ப்யூட்டர்களின் பிதாமகன்’, ‘ஸ்மார்ட் போன்களின் பிரம்மா’ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் போய்ச் சேர்ந்துவிட்டார். ‘இனி ஆப்பிளின் கதி அதோ கதிதான்’ என்ற விமர்சனம் அவரது இறுதி ஊர்வலத்தின்போதே கிளம்பி விட்டது. ஆனால், ‘இனிதான் அசுர வேகத்தோடு ஆப்பிள் சாதிக்கப்போகிறது’ என்றார்கள் அதன் நிர்வாகத்தினர். ஸ்டீவ் ஜாப்ஸின் ஸ்டைலிலேயே ஆச்சரியப்படத்தக்க ப்ராஜெக்ட் அறிவிப்புகளையும் வெளியிட்டு அசத்தினார்கள்.
காலம் காலமாக ஆப்பிள் ஐபோன்களில் இடம்பெறும் கூகுள் மேப்ஸுக்கு பதில், ஆப்பிள் மேப்ஸ் என்ற சொந்த அப்ளிகேஷனை தயாரிப்பதும் அதில் ஒன்று. தலைக்கு மேல் விமானத்தைப் பறக்கவிட்டு துல்லியமாக மேப் தயாரிக்கப்போவதாக அதற்கு பில்டப் வேறு. இன்று ஐபோன் 5ல் சந்தி சிரித்திருக்கும் முதல் விஷயம், இந்த மேப்ஸ்தான்! இன்னும் முழுமை பெறாத இந்த ஆப்ஸில், பல குளறுபடிகள்.

‘‘பக்கத்து பில்டிங்கில் இருக்கும் காபி ஷாப், 1000 கி.மீ தூரத்தில் இருப்பதாகக் காட்டுகிறது...’’, ‘‘செடிகள் விற்கும் நர்சரியை விமான நிலையம் என்கிறது’’ என்று இணைய ஃபோரம்களில் கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் கஷ்டப்பட்ட கஸ்டமர்கள். இந்த மேப்ஸ் பிரச்னைக்குத்தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்.
ஆனால், பிரச்னை இதோடு முடியவில்லை. தொடர்ந்து ஐபோன் 5 பயன்படுத்திப் பார்த்தவர்கள், ‘நீ இப்ப ரொம்பவே மாறிட்ட’ என்று கல்யாணத்துக்குப் பிறகு கோவித்துக் கொள்ளும் காதலி போல, ஆப்பிள் மீது ஆதங்கம் அள்ளி வீசுகிறார்கள். அவற்றில் முக்கியமானவை இங்கே...

*  வாய்மொழி உத்தரவுகளை ஏற்று இயங்கும் ‘சிரி’ என்ற தொழில்நுட்பம் ஆப்பிள் போன்களின் தனிப்பட்ட சிறப்பு. கடந்த ஐ போன் பதிப்பான ‘4 எஸ்’ஸில் கூட சரியாக வேலை செய்த ‘சிரி’, இந்தப் பதிப்பில் அழுது வடிகிறது. காது வளர்த்த அப்பத்தா போல, நாம் ‘சென்னை’ என்று சொன்னால் அது ‘வெண்ணெய்’ என்று தப்புத் தப்பாகப் புரிந்துகொள்கிறதாம். தரம் குறைந்த மைக், ஸ்பீக்கர் போன்றவையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.



*  புதிய ‘ஐபோன் 5’ பற்றிய அறிவிப்புகளில் முக்கியமாக சொல்லப்பட்ட பில்டப், ‘இதன் பேட்டரி நீடித்து இயங்கும்’ என்பதுதான். ஆனால், முழு சார்ஜ் ஏற்றிய ஒரு மணிநேரத்தில் இதன் பேட்டரி 40 சதவீத சார்ஜை இழந்துவிடுவதாக வாங்கியவர்கள் குமுறுகின்றனர். பேட்டரியை உறிஞ்சி எடுக்கும் தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குவதும், அதற்காக ஆப்பிள் ஸ்டோர்கள் தேடி அலைவதும் இந்தப் பிரச்னையின் இலவச இணைப்பு.

*  உயர்தர ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை, அதன் ஸ்கிரீன் மட்டும்தான் ஒளிர வேண்டும். போன் ஓரங்களிலோ பக்கவாட்டிலோ வெளிச்சம் தெரிந்தால், அதை ‘லைட் லீக்’ என்பார்கள். ஐபோன் 5-ல் மேற்புற பட்டன் வழியே ‘லைட் லீக்’ ஆவது இருட்டில் வைத்துப் பார்த்தால் தெள்ளத் தெளிவாகிறது.

*  பொதுவாக உறுதியான உலோகங்களால் வடிவமைக்கப்படும் ஆப்பிள் தயாரிப்புகள் காலத்துக்கும் உழைக்கக் கூடியவை. ஆனால், அந்தப் பாரம்பரியத்தை மீறி இது, அலுமினியம் சேஸிஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சேஸிஸ் மேல் பூசப்பட்டுள்ள பெயின்ட், ஒரே நாளில் உதிரத் துவங்கிவிடுகிறது. குழந்தைகள் சற்று கடினமாகக் கையாண்டால் கூட போன் வளைந்து விடுகிறது என்று வீடியோ ஆதாரத்தோடு புலம்பித் தள்ளுகிறார்கள்.

*  இந்தப் புகார் உண்மையிலேயே அவமானகரமானது. ‘ஐபோன் 5’ வாங்கிச் சென்றவர்களில் பலருக்கு போனுக்குள்ளே ஏதோ ஒன்று கடகடவென ஆடும் சத்தம் வந்திருக்கிறது. தெருமுக்கு டாக்டர் போல் ‘அதெல்லாம் நார்மல்தான்’ என்று ஆரம்பத்தில் சொல்லி வந்தது ஆப்பிள். தொடர்ந்த புகார்களுக்குப் பின்புதான், ‘ஆப்பிள் ஸ்டோருக்கு வாருங்கள்... சரி செய்து தருகிறோம்’ என்றிருக்கிறது.

*  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... நம்மூர் கொரியன் செட் போல, சில ஐபோன் 5 செட்களில் சிம் கார்டு பொருத்தப்பட்ட பின்பும், ‘ழிஷீ sவீனீ நீணீக்ஷீபீ வீஸீstணீறீறீமீபீ’ என்ற செய்தியே வந்திருக்கிறது. இதையும் ஆப்பிள் ஸ்டோர்கள் சரி செய்து கொடுத்திருக்கின்றன.

இத்தனை குறைபாடுகள் இருந்தால் என்ன... கெட்ட வார்த்தையில் கம்பெனிக்காரனைத் திட்டினாலும்தான் என்ன... ‘இந்த சனியனைப் பிடிக்கல... ஆனாலும் இவன்தான் எனக்கு எல்லாமே’ என்று சொல்லும் பைத்தியக் காதல் போல, ஆப்பிள் பொருட்களோடு ஒன்றிக் கிடக்கிறது ஒரு கூட்டம். நம்மூரில் கூட இந்த போனுக்காக ஒரு மாதம் முன்பே ரூ.54,000 கட்டி, புக்கிங் செய்து, காத்திருந்து வாங்கி, ‘பரவசப்பட் டிருக்கும்’ கூட்டம் உண்டு. ‘‘எத்தனை ஃப்ளாப் கொடுத்தாலும் தல அஜித்துக்கு இருக்கிற ஓபனிங் மாதிரிதான் சார் ஆப்பிளுக்கும்’’ என்கிறார் அந்தக் கூட்டத்தில் ஒருவர்.
உண்மைதான்... இரண்டே வாரங்களில் 50 லட்சம் போன்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்றால், அந்த ஓபனிங்தானே காரணம்!   
- கோகுலவாச நவநீதன்