வடகிழக்கு வசந்தம்






மிசோரமின் தனித்தன்மையே அதன் தட்பவெப்பம்தான். அதிகாலைக் குளிர், இளமாலை வெயில், உறுத்தாத பனி.. எல்லாக் காலங்களிலும் இப்படி இதமான சூழல் நிலவுவது, இயற்கை அளித்த வரம். ஆனாலும் இது நான்கு திசைகளிலும் மலைகள் மூடிய தனிக் கோட்டை. போக்குவரத்து வசதிகள் குறைவு. அதனால்தான் வெளிநாட்டுப் பயணிகள் மிசோரமை விரும்புவதில்லை. ஆனால், இந்தத் தனிமையே மிசோரமின் தனித்தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. மனித அடர்த்தியற்ற காடு மலைகளில், சுதந்திரமாக சுற்றித் திரிகிற சுகத்துக்கு வேறென்ன ஈடு இருக்கிறது..?

ஹாங்காங், பாங்காக் என்று லொகேஷன் தேடியலையும் சினிமா இயக்குனர்கள் அருகில் இருக்கிற மிசோரமை ஒரு தரம் எட்டிப்பார்க்கலாம். இதுவரை மனிதப்பாதம் படாத
ஏராளமான இடங்கள் இங்கு ஒளிந்திருக்கின்றன. போதாக்குறைக்கு, ‘‘திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்யத் தயாராக இருக்கிறோம்’’ என்று கூறுகிறார் அம்மாநிலத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெட்ரி டிப்பேர். அள்ளக்குறையாத பசுமை, வான் தொட்டு வீழும் நீர்வீழ்ச்சிகள், அமானுஷ்யம் அப்பிக் கிடக்கும் ஏரிகள், அடிவயிற்றை பிசையச் செய்யும் அதல பாதாளங்கள், பெருமலைகள் என ஈரமான ஓவியமாக விரிந்து கிடக்கிறது மிசோரம்.

மிசோரமின் பண்பாடு, கலை, வாழ்க்கை முறை, கைவினைத்திறம் ஆகியவற்றை ஒருசேர ரசிக்க விரும்புபவர்கள் செப்டம்பரில் நடக்கும் ‘அந்தூரியம் ஃபெஸ்டிவலு’க்குச் செல்ல வேண்டும். தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ரியாக் என்ற கிராமத்தில் நடக்கும் இந்த திருவிழாவில், உலகம் முழுதுமிருந்து ஆய்வாளர்கள், கலைஞர்கள் வந்து குவிகிறார்கள். அடர்த்தியான தம்ப் நதியைக் கடந்து, ஏற்ற இறக்கமான அடர்ந்த வனப்பாதையில் இரண்டரை மணி நேரம் பயணித்தால் ரியாக்கை அடையலாம். மரங்களில் இருந்து சொட்டும் ஈரம் வாகனம் கடந்து உள்ளுக்குள் இறங்கி ஜில்லிடுகிறது. இடையிடையே நீர்க்கோடாக பூமியைத் தொட்டு தவழும் அருவிகள். வழியெங்கும் ரெட் ஒயின் கடைகள் கவனத்தை ஈர்க்கின்றன.



இங்கு உடையில் தொடங்கி உணவு வரை மக்களுடைய வாழ்க்கையில் மேலைநாட்டுக் கலாசாரம் இரண்டறக் கலந்திருக்கிறது. குடும்பத் தலைவிகள் கூட பனியனும், ஸ்கர்ட்டுமாக உலா வருகிறார்கள். கடைத்தெருக்களில் அதிகாலை 10 மணிக்கு தொடங்கும் பரபரப்பு மாலை 5 மணிக்கு முடிந்துவிடுகிறது. திருமணம், பண்டிகைகளில் தங்கள் பாரம்பரிய ‘பௌன்சூய்’ உடை அலங்காரத்தோடு ஜொலிக்கிறார்கள் பெண்கள். ஆண்களின் பாரம்பரிய உடைக்குப் பெயர், ‘பக்ரி’. சிவப்பு, கறுப்பு, வெள்ளை, பச்சை, நீலம் இழைந்த மிசோரமியர்களின் உடை, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. பாரம்பரிய உடைகள் இன்றளவும் கைத்தறியில் நெய்யப்படுகின்றன. விலைதான் சற்று தலை சுற்றவைக்கிறது. ஒரு பக்ரி சட்டை 1300 ரூபாயாம். பல வண்ணங்களைக் கோர்த்து, இயற்கையான பொருட்களைக் கொண்டு அவர்கள் செய்யும் நெசவு, நவீன தொழில்நுட்பத்துக்கு சவால் விடுகிறது.

மிசோரமின் அடையாளங்களில் அந்தூரியமும் ஒன்று. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இம்மலர்கள் தங்கள் இதழ்களால் மலைகளை மூடிக்கொள்கின்றன. கண்படும் இடமெல்லாம் பூத்துக் குலுங்கும் இம்மலர், மிசோரமுக்கு பல கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. இதில் 800 வகைகள் உண்டாம். 400க்கும் மேற்பட்ட வகைகள் மிசோரமில் மலர்கின்றன. 30 செ.மீ நீளமுள்ள தண்டுகளின் நுனியில் வெற்றிலையைப் போல விரிந்து மலர்கின்றன பூக்கள். இலையும் பூக்களைப் போலவே இருக்கிறது. எண்ணிலடங்கா வண்ணங்கள். சில அபூர்வ ரகங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மலர்த்தோரணம், மலர் கோபுரம், மலர் வாகனம் என எல்லா திசைகளிலும் அந்தூரியம் குலுங்குகிறது. அதற்கு இணையாக மலர்ந்திருக்கும் மிசோரம் மங்கைகளும் ஈர்க்கிறார்கள்.    


 அந்தூரியம் திருவிழாவை ‘காதலர் திருவிழா’ எனலாம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல், சுதந்திரமாகக் கைகோர்த்துத் திரிகிறார்கள் காதலர்கள். விழா அரங்கத்துக்கு வெளியே, எல்லைப் பாதுகாப்புப் படையின் ரைபிள் பிரிவு நடத்தும் துப்பாக்கி சுடும் போட்டி கவனத்தைக் கவர்கிறது. காவல்துறை மீது இளைஞர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இதை நடத்துவதாகச் சொல்கிறார் போட்டியை ஒருங்கிணைத்த சீனியர் ஆபீசர் ஸீயா.

3 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில், மிசோ பழங்குடிகளின் மூங்கில் நடனம் அதி அற்புதமான அனுபவத்தைத் தருகிறது. 8 ஆண்கள், 6 பெண்கள் பங்கேற்கும் நடனத்தில், ஆண்கள் கையில் இரண்டு மூங்கில் கம்புகள் வைத்திருக்கிறார்கள். கம்புகளை கீழே பரப்பி, ஒன்றோடு ஒன்று தட்டி இசையெழுப்பியபடி அங்குமிங்குமாக மாற்ற, பெண்கள், அந்த இசைக்கேற்றபடி கம்புகளின் இடைவெளியில் அழகுமிளிர ‘அடவு’ செய்கிறார்கள். அலட்சிய முகபாவத்தோடு சிறு பிசகும் இல்லாமல் அப்பெண்கள் கால்களை மாற்றி நடனமாடுவது அதிசயிக்க வைக்கிறது. மென்மையாகத் தொடங்கி, அதிவேகத்தில் தடதடக்கும் இந்த மூங்கில் நடனம், தாய்லாந்திலிருந்து இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.

அந்தூரியம் ஃபெஸ்டிவலில் ஆங்காங்கே தமிழும் ஒலிக்கிறது. எல்லை பாதுகாப்புப் படையில் ஏராளமான தமிழர்கள் பணிபுரிகிறார்கள். குடும்பத்தோடு அவர்களும் இங்கு சங்கமிக்கிறார்கள். அந்தூரியம் ஃபெஸ்டிவலைப் போலவே நவம்பரில் நடக்கும் தல்ஃபவாங் கட் ஃபெஸ்டிவலும் சாப்ஷர்கட் ஃபெஸ்டிவலும் மிசோரமைக் கொண்டாட்டக் களமாக மாற்றுகின்றன. வாழ்வின் உன்னதத்தை அனுபவிக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக இந்த புண்ணிய பூமிக்கு வர வேண்டும்.
அடுத்த வாரம் அருணாசலப் பிரதேசத்துக்குப் பயணிப்போம்...