வீட்டிலேயே இருக்கு டெங்கு மருந்து!





மழை, புயல் என எதற்கும் அடங்காமல் களமாடிக் கொண்டிருக்கிறது டெங்கு. மருத்துவமனைகள் ஹவுஸ்ஃபுல். உயிரிழப்புகள் தொடர்வதால், டெங்கு என்ற வார்த்தையைக் கேட்டாலே பீதி அலையடிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் செலவு எகிறுவதால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வைத்திய முறைகளை அள்ளிவிடுகிறார்கள். கழுதைப்பால், பப்பாளி இலை, ஆடாதொடை இலை என கிராமப்புற மக்கள் இறங்கிவிட்டார்கள்.  உண்மையில் நாட்டு மருந்துகளால் டெங்குவை கட்டுப்படுத்த முடியுமா..?

‘‘சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இயற்கை மருத்துவங்களில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல், மிகக்குறைந்த செலவில் டெங்குவை முழுமையாகக் குணப்படுத்தலாம்’’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

‘‘டெங்குவை விட அதனால் ஏற்படும் பயமே உயிரிழப்புகளுக்குக் காரணம். உடல்நலம் மட்டுமல்ல... மனநலமும் முக்கியம். நோய்க் கிருமி உடலுக்குள் சென்றதும், அதை அழிப்பதற்காக உடம்பில் ஒரு புரோட்டின் சுரக்கும். அதற்காகவே உடம்பு சூடாகிறது. அதைத்தான் காய்ச்சல் என்கிறோம். டெங்குவை உருவாக்கும் ஆர்போ வைரஸ் உடலுக்குள் சென்றதும் ‘இன்டர்பெரான்’ என்ற புரோட்டின் சுரக்கிறது. இது தொடக்கத்திலேயே கிருமியை அழிக்கப் போராடுகிறது. எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது இயல்பாக நடந்துமுடிந்து விடும். மற்றவர்கள் உடலில் கிருமிகள் கலந்துவிடும். அங்கும் போராட்டம் தொடர்கிறது. அதுவும் ஜுரமாக வெளிப்படுகிறது. எனவே காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பதை விட எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான எனர்ஜிதான் உடம்புக்குத் தேவை. மனிதனின் உடம்பில் மொத்தம் 60 அக்கு புள்ளிகள் உள்ளன. அப்புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். எவ்வித மருந்தும் இல்லாமல், அக்குபஞ்சர் மூலம் எனர்ஜியை அளித்து ஓரிரு நாட்களில் டெங்குவை குணப் படுத்தலாம்’’ என்கிறார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அக்குபஞ்சர் விரிவுரையாளர் ஹீலர் அ.உமர்பரூக்.

‘‘சித்த மருத்துவத்தில் எந்த பின்விளைவுகளும் இல்லாத மருந்து டெங்குவுக்கு இருக்கிறது. டெங்கு உள்பட எல்லா காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் அற்புதமான மருந்து’’ என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் சிவராமன். ‘‘நிலவேம்புச் செடி கிராமங்களில் அடர்ந்த புதர்களில் வளர்ந்திருக்கும். அதிக கசப்புத் தன்மை கொண்டது. தற்போது, கஷாயம், பவுடர் வடிவில் அரசு மருத்துவமனைகளில் இதை வழங்குகிறார்கள். காய்ச்சலின் தன்மை தீவிரமானவர்கள், இதோடு சேர்த்து ஆடாதொடை இலையை சட்னி போல அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம். ஆடாதொடைக்கு ரத்தத்தட்டணுக்களை அதிகப்படுத்தும் சக்தியுண்டு. நிலவேம்பை முன்னெச்சரிக்கையாகவும் உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடைக்குத் தகுந்தவாறு 60 முதல் 120 மி.லி. அளவில் 5 நாட்கள் சாப்பிட வேண்டும்’’ என்கிறார் சிவராமன்.



‘‘சிலர் கழுதைப்பால், பப்பாளி இலைச்சாறு சாப்பிடுகிறார்கள். சித்த மருத்துவ நூல்கள், கழுதைப்பாலை மிகச்சிறந்த மருந்து என்கின்றன. ஆனால் இப்போது கழுதைகளின் உணவுகள் மாறிவிட்டன. அதன் மூலம் வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் கழுதைப்பாலை தவிர்க்க வேண்டும். பப்பாளி இலைச்சாறை தாராளமாக சாப்பிடலாம். மலேசியாவில் டெங்கு பாதிப்பு வந்தபோது, பப்பாளி இலைதான் பல நூறு பேரின் உயிரைக் காப்பாற்றியது’’ என்கிறார் சிவராமன்.

ஆயுர்வேதமும் டெங்குவை எதிர்ப்பு சக்தி குறைவதன் விளைவாகவே பார்க்கிறது. ‘‘ஆயுர்வேதத்தில் ஒவ்வொருவரின் உடல்நிலைக்குத் தகுந்த மாதிரி தனித்தனி மருந்துகள் தரப்படும். அமுர்த சர்க்கரை, சுதர்சன சூர்ணம், மதுயஷ்டி சூர்ணம், மதுஸ்முகி சூர்ணம் என டெங்குவுக்கு ஆயுர்வேதத்தில் ஏராளமான மருந்துகள் உண்டு. ஆயுர்வேதத்தில் உடனடி தீர்வு கிடைக்காது என்று மக்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. உடனடி தீர்வு மட்டுமல்ல... நிரந்தரத் தீர்வே ஆயுர்வேதத்தின் அடிப்படை. டெங்கு பாதித்த பலருக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ராதாகிருஷ்ணா.

‘‘டெங்கு மட்டுமின்றி எல்லா உடல் உபாதைகளுக்கும் கிருமி மட்டுமே காரணம் அல்ல... அதற்கு இடம்கொடுக்கும் உடம்பின் பலவீனமும் காரணம்’’ என்கிறார் சேலம் ஹோமியோபதி மருத்துவர் கைலாசம். ‘‘3 நாள் சிகிச்சையில் டெங்குவை முழுமையாக குணப்படுத்தலாம். ஒவ்வொருவருடைய உடல்நிலைக்குத் தகுந்தவாறு மருந்துகள் வேறுபடும். ‘ஹெமரேட்டிவ் டெங்கு’ எனப்படும் ரத்தக்கசிவு நிலையில்கூட ஹோமியோபதியால் குணப்படுத்தலாம். டெங்குவுக்கு ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் தொடங்க இருக்கிறோம்’’ என்கிறார் கைலாசம்.

‘‘அறுசுவை மிகுவதும், குறைவதுமே நோய். டெங்குவை உருவாக்கும் கிருமி உடம்பில் புகுந்ததும் புளிப்பு குறைந்து உப்பு அதிகரிக்கிறது. உப்பைக் குறைக்க கசப்பே மருந்து. டெங்கு நோயாளிகளுக்கு நிலவேம்புக்கசப்பு, வேப்பம்பட்டை கசப்பு, ஆடாதொடைக் கசப்பு, விஷ்ணுகந்தி கசப்பு ஆகியவற்றை வழங்குகிறோம். நிலவேம்பு, வேப்பம்பட்டை, திரிகடுகம், திரிபலை, பற்படாகம், கோரைக் கிழங்கு, மிளகு, சீரகம்... இந்த எட்டையும் கஷாயமாக்கிக் குடித்தால், டெங்கு உட்பட எல்லா காய்ச்சலும் ஓடிவிடும். எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். உப்புச்சத்து மிகுந்த பால், பேக்கரி பண்டங்கள், மாவுப்பண் டங்களைத் தவிர்த்து, அரிசிக்கஞ்சி, அவல் கஞ்சியை சாப்பிட வேண்டும்’’ என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மரபுவழி இயற்கை மருத்துவர் புண்ணியமூர்த்தி.

‘‘தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் எல்லா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. டெங்குவுக்கு பக்க விளைவுகள் அற்ற அற்புதமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் எல்லா சிகிச்சைகளையும் உரிய மருத்துவ நிபுணர்களிடமே எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் ஓய்வுபெற்ற இணை இயக்குனர் டாக்டர் ஜி.கணபதி.
- வெ.நீலகண்டன்