எங்கே போச்சு அவில் மாத்திரை?





அலர்ஜி நோய்களுக்காகத் தரப்படும் அவில் மாத்திரைகள் இப்போதெல்லாம் மருந்துக் கடைகளில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக விலை அதிகமான மாத்திரைகளை வாங்கச் சொல்லி கடைக்காரர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். அது தூக்க மாத்திரையாக தவறாகப் பயன்படுத்தப்படுவதால், அதை விற்கக் கட்டுப்பாடுகள் உள்ளன, அதனால்தான் விற்பதில்லை என்று சொல்லப்படுகிறதே... உண்மையா?
- சிவக்குமார், சேலம்.

பதில் சொல்கிறார் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் இந்தியாவில் ஐம்பது வருடங்களாக அவில் மாத்திரை புழக்கத்தில் இருக்கிறது. அவில் என்பது ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயர். அந்த மருந்தின் பெயர் பெனிரமின் மேலியேட். பலவிதமான அலர்ஜி நோய்களுக்கும் இந்த மாத்திரை டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. பதினைந்து மாத்திரைகளைக் கொண்ட ஒரு அட்டையின் மொத்த விலையே ஐந்து ரூபாய்தான். ஒரு மாத்திரை சுமார் முப்பது காசு அடக்கமாகிறது.

கடைகளில் இந்த மாத்திரைகளுக்கு பதிலாக செட்ரிசின் போன்ற மாத்திரைகள் விற்கப்படுகின்றன. ஒரு செட்ரிசின் விலை, சுமார் 4 ரூபாய். அவிலை முப்பது காசுக்கு விற்று கிடைக்கும் லாபத்தைவிட செட்ரிசினை 4 ரூபாய்க்கு விற்று கிடைக்கும் லாபம் அதிகம். இதனால் கடைக்காரர்கள் அவில் விற்பதை நிறுத்தி யிருக்கலாம். கடைக்காரர்கள் விற்காததால், கம்பெனிகளும் அதன் உற்பத்தியைக் குறைத்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது சாதாரண மக்களை பாதிக்கக்கூடியது தான்.

மற்றபடி, அவிலை தூக்க மாத்திரையாக துஷ்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்றால் அரசின் மருந்துக் கட்டுப்பாடு துறைதான் கட்டுப்பாடுகளை மருந்துக்கடைகளுக்கு விதிக்கும். இப்படிப்பட்ட கட்டுப்பாடு சில மருந்துகளுக்கு மட்டுமே உண்டு. அவில் மாத்திரைக்கு அந்தக் கட்டுப்பாடெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, கட்டுப்பாடுகளால் அவில் கிடைக்காமல் போனதென்று சொல்ல முடியாது. லாப நோக்கமே அவிலை கிடைக்காமல் செய்கிறது எனலாம். இது நமது இந்திய நாட்டின் பொதுவான பொருளாதாரக் கொள்கையையே பிரதிபலிக்கிறது.

திருச்சி அருகே எனது அம்மா பெயரில் இருக்கும் நிலத்துக்கான மூலப்பத்திரம் தொலைந்து விட்டது. நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்த நிலையில், அம்மா
இறந்துவிட்டார். குத்தகைதாரர் நிலத்தைத் திருப்பித்தர மறுப்பதோடு, குத்தகைத் தொகையும் தருவதில்லை. அந்த நிலத்தின் டூப்ளிகேட் பத்திரம் வாங்கலாமா?
- கே.எஸ்.சுப்ரமணியம், நாசிக்.
பதில் சொல்கிறது பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், சென்னை.
முதலில் நிலம் அமைந்துள்ள பகுதியின் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு மனு கொடுத்து, நிலத்தை அவருக்கு அடையாளம் காட்டுங்கள். அவரிடம் கிராமத்தின் மொத்த நில எண்களும் அடங்கிய ‘அடங்கல்’ கணக்கு இருக்கும். அதைப் பார்த்து உங்கள் நிலத்தின் சர்வே எண்ணைக் குறித்துத் தருவார்.


அந்த சர்வே எண்ணை வைத்து, அப்பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள். இதற்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் தாங்கள் எத்தனை வருடங்களுக்குக் கேட்கிறீர்களோ அத்தனை வருடங்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் தருவார்கள். அதில் மேற்படி நிலம் யார் யாரிடமிருந்து எப்போது கைமாறியது என்கிற விபரங்கள் இருக்கும்.

வில்லங்கச் சான்றிதழ் நகலை ஆதாரமாக இணைத்து, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திலேயே மூலப் பத்திரத்தின் நகல் வாங்க விண்ணப்பிக்கலாம். நிலத்தை வாங்கிய உங்கள் தாயார் பெயர், பதிவு செய்யப்பட்ட வருடம் மற்றும் எழுதிக் கொடுத்தவர் பெயர், பத்திரம் தொலைந்தது உள்ளிட்ட விபரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொகைக்கு முத்திரைத்தாளும் இணைக்க வேண்டும். பின்னர், நான்கு நாட்களோ ஒரு வாரமோ அவர்களின் அலுவல்களைப் பொறுத்து தங்களுடைய மூலப்பத்திரத்தைத் தேடி எடுத்து, நகல் பத்திரம் தயாரித்து சார்பதிவாளர் கையொப்பமிட்டுத் தருவார்.

வில்லங்கச் சான்றிதழ், மூலப்பத்திரம் இரண்டும் தங்களுக்குச் சாதகமாக இருந்தும், குத்தகைதாரர் நிலத்தைத் தர மறுத்தால், அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்திலேயே நில மோசடிப் புகார் கொடுக்கலாம்.