ஆன்ட்ரியா ஸ்வீட் கிஸ்... நயன்தாரா மீட்டிங்... த்ரிஷா மேரேஜ்...





தொடர்ச்சியாக மூன்று நாட்கள் முயற்சி செய்தும் சிம்புவின் செல்போன் உயிர்பெறவில்லை. நிகிலிடம் கேட்டால், ‘‘அவருக்கு செய்தி போயிருச்சு. அழைப்பு வரும்’’ என்றார். ‘‘‘போடா போடி’ கடைசிக் கட்ட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்குக் கூட கான்டாக்ட் பண்ணலை..!’’ என அவரது வீட்டுத் தகவல்கள். திடீரென்று சிம்புவே லைனில் வந்தார். ‘‘இன்னிக்கு ராத்திரி 11 மணிக்குண்ணே. வீட்டுக்கு வாங்க... சுக்கு காப்பி குடிச்சிட்டு சூடா பேசலாம். ஒன் அவர் போதுமா?’’ என்றார்.

‘‘சார்லி சாப்ளின்தான் எனக்குப் பிடிச்ச மனுஷன் அண்ணே. அன்பு, காதல், வறுமை, கொடுமைன்னு அத்தனை விஷயங்களையும் காமெடியோடு பிசைந்து கொடுத்த மகா கலைஞன். வாழ்க்கையையே அப்படி நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டா எல்லாரும் தப்பிச்சிடலாம். காமெடி கண்ணாடியைப் போட்டுட்டுப் பார்த்தா, உலகமே அழகா இருக்கு. அதனால ஒரு வாழ்க்கையை, காதலை... சிரிக்கச் சிரிக்க ‘போடா போடி’யில் சொல்லியிருக்கோம். இப்போ நீங்க பார்க்கிற சிம்பிள் சிம்புவாகவே நடிக்கணும்னுதான் எனக்கு ரொம்ப நாளா ஆசை. யதார்த்தமா, நார்மலா நடிக்கிறது தான் கஷ்டமாவே இருக்கு.

என்னடா... இந்த வரலட்சுமி, சரத்குமார் சார் பொண்ணாச்சேன்னு ஆரம்பத்தில கொஞ்சம் ‘திக்’னு இருந்தது. அப்புறம் அவங்க நிஷா, நான் அர்ஜுனாவே மாறிட்டோம். இங்கே பெரிய பெரிய படங்களை பெரிசு பெரிசா விளம்பரம் பண்ணி இறக்கிறாங்க. எதிர்பார்ப்போட போற ரசிகர்கள், தியேட்டர்ல ஏமாந்திடுறாங்க. அப்படி எதுவும் இல்லாம இளமையா, புதுமையா இருக்கு ‘போடா போடி’. புது டைரக்டர் விக்னேஷ், புது ஹீரோயின்னு கதையை நம்பி எடுத்திருக்கோம். முழுசுமா காமெடியில் இறங்கியிருக்கோம். இந்திப்பட எஃபெக்ட்ல, லண்டன் பளபளன்னு துடைச்சுவிட்ட மாதிரி ஒளிப்பதிவில் மின்னும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பார்த்த பின்னாடி என்னைப் பிடிச்சதில்லையா... அப்படி இப்பவும் பிடிக்கும்! சிலுசிலுன்னு சிலிர்ப்பான காதல் கதை. திறந்த சட்டையோட காத்து வாங்கிட்டு அந்தக் காலத்தில் ஷாரூக்கான் வெளுத்துக் கட்டுவாரே... அப்படி ஒரு ரோல். காதல் நமக்கு என்னிக்கு கசந்தது?’’
‘‘உங்க ஃப்ரண்ட் த்ரிஷா - ராணா கல்யாணம்னு செய்தி அடிபட்டுக்கிட்டே இருக்கே...’’



‘‘ஸாரி... இப்ப அவங்க அப்பா இறந்துபோன துயரத்தில் இருக்காங்க. அருமையான பொண்ணு. ஸ்டிராங் லேடி. அந்த துயரத்திலிருந்து சீக்கிரமா வெளியே வந்திட அவங்களால் முடியும். அவங்க எனக்கு ஆரம்பத்திலிருந்தே பழக்கம். சினிமாவை சின்சியரா நினைக்கிற பொண்ணு. கல்யாணம் செய்துக்கிட்டா நல்லதுதான். பத்து வருஷத்திற்கு மேலே அவங்க சினிமால இருந்து நடிச்சதே அழகு. காதலிக்கிற ஒவ்வொருத்தரும் கைக்குழந்தைங்க மாதிரிதான். கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்த்துவோம்.’’

‘‘இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால நயன்தாராவை பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தீங்க. பேஸ்புக்கில் படங்களை வெளியிட்டு மகிழ்ந்தீங்க. என்ன, மறுபடியும் சரித்திரம் திரும்புதா?’’
‘‘ச்சும்மா. ஏன் முறைச்சிட்டே இருக்கணும். இப்ப எல்லாரையும் நண்பர்களாவே வச்சுக்க நினைக்கிறேன். மெச்சூரிட்டி வந்திருக்கு. வயசு ஏறியிருக்கு. கொஞ்சம் விடலைத்தனமா இருந்த சிம்பு விடைபெற்றுகிட்டே இருக்கான். பொதுவா நலம் விசாரிச்சு பேசினோம். என் படங்கள் பத்திக் கேட்டாங்க. அவங்க படங்களைப் பத்தி நானும் கேட்டேன். நல்ல சந்திப்பா அமைஞ்சது. அதுக்கும் மேலே நீங்க யூகிக்கிற மாதிரி எதுவும் இல்லை. அப்படி நீங்க நினைக்கிறதையும் தப்புன்னு சொல்ல மாட்டேன். என் காதல் ஊருக்கே தெரியும். ஆனா, இப்ப அப்படியில்லை. யார்கிட்டேயும் தள்ளி நின்னு பார்க்க வேண்டாம்னு நினைக்கிறேன். வேறு ஒண்ணும் நட்பில் புதுக்கிளை எல்லாம் கிடையாது.’’

‘‘நெக்குருகி உயிரோடு இணைந்த உங்க காதலுக்கு நான்தான் கண்ணால் கண்ட நேரடி சாட்சி. அதனால் கேட்டேன்...’’
‘‘உண்மைதான். பேசியது, பழகியது பொய்யில்லையே. பெண்கள் என்மேல ஏற்படுத்துற பாதிப்பு இருக்கே, அது ஆழமான ஈடுபாடு. சில குறிப்பிட்ட நினைவுகள் இருக்கு. நல்ல காதலுக்கு நினைவுதான் ஓவியம். பெண் மனசு நம்மை நினைக்கிறது, ராத்திரி அவங்க நிம்மதியாக தூங்கப்போற வரைக்கும். அதுவே ஆண் மனசு ஒரு பெண்ணை நினைக்கிறது சாகுற வரைக்கும். இப்ப எதுக்கு பிரிவு வந்த கதையெல்லாம்? எல்லாம் உள்ளே இருக்கும்... எங்கேயாவது பாடலா வரும். பேச்சில் தெறிக்கும். ஒரு பார்வையில் கரையும்... அண்ணே, பேச்சு ரொமாண்டிக்கா போகுது. ரூட்டை மாத்துங்க...’’



‘‘என்னை விடுங்க! உங்களை எங்கே பார்த்தாலும் பர்சனலான கேள்விகள் துரத்திக்கிட்டே இருக்கே..?’’
‘‘மத்தவங்க மாதிரி நான் கிடையாது. வெளிப்படையா இருப்பேன். எதையும் மறைக்கிறதில்ல. எங்க அப்பா, அம்மாவுக்குத் தெரியிறது ஊருக்கே தெரியும். கொஞ்சம் மறைக்கணும்னா சிரிச்சிட்டு போயிருப்பேன். ஆனால் பொய் சொல்ல மாட்டேன். எதுக்காகவும் நம்ம இயல்பை மாத்திக்க முடியாதே! வீட்ல கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்டி ரொம்ப நாளாச்சு. யாரையாவது கொண்டு வந்து நிறுத்தினா பையன் கல்யாணம் பண்ணிப்பான்னு அப்பா, அம்மாவுக்கு நம்பிக்கை கிடையாது போல! சிம்புன்னா கை கோர்த்து வர, சிநேகிதியா இருக்க, ஒருத்தர் கூடவா வரமாட்டாங்க? அப்படி ஒரு பொண்ணு இன்னும் வரலை. சிம்பு லவ் பண்ணினாதான் மருமகள் வரும்னு வீட்டுக்குத் தெரிஞ்சுபோச்சு. எனக்கும் அது தெரிஞ்சுபோச்சு. அதுதான் மேட்டர்!’’
‘‘உங்க வாழ்க்கையில பெண்களுக்கு எந்த அளவுக்கு இடம்?’’
‘‘அவங்களுக்குத்தாங்க இடம். பெண்களை வெறுத்து நின்னா அது இயற்கையே கிடையாது. குழந்தையை பத்து மாசம் வயித்துல வச்சிருந்து நமக்குக் கொடுக்கிறது எவ்வளவு பெரிய கருணை! எனக்கு தாயன்பு வேணும். பெண்களோட அரவணைப்பும், பொய்க்கோபமும், பாசக்கொஞ்சலும்தான் என்னை உயிரோட வச்சிருக்கு. என்னடா பொண்ணுகளைப் பத்தி கிண்டலா பாட்டு எழுதினான், வசனம் எழுதினான்னு பாக்கிறீங்களா! பிரியம் இருந்தால்தான் கோபம் வரும். அதெல்லாம் சினிமா!’’
‘‘நீங்களும் தனுஷும் செம ஃப்ரெண்டாயிட்டீங்க போல..?’’

‘‘ஆரம்பத்துல ஃப்ரெண்டாதான் இருந்தோம். நடுவில் சில பேர் கத்திரியைப் போட்டுட்டாங்க. இப்ப மறுபடியும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அடிக்கடி பேசிப்போம்... சந்திப்போம். ரெண்டு பேர் படத்தைப் பத்தியும் விரிவா பேசிப்போம். நட்பா இருந்தா மனசு நிம்மதியா இருக்குங்க. நாங்க ரெண்டு பேரும் எந்த இடத்தில் சேர்ந்தாலும் அந்த இடத்தில கலகலப்பு எகிறும்!’’
‘‘அனிருத் - ஆன்ட்ரியா முத்தக்காட்சிகள் இன்டர்நெட்ல அலை வீசியதே! உங்களுக்கு அனிருத் பெரிய போட்டியா வருவாரோ?’’

‘‘என்னவோ கொலை நடந்து, தலை தனியா கிடந்து பார்த்தது மாதிரி கேட்கிறீங்க. முத்தம் கொடுக்கிறது தப்பா? அப்படி என்னங்க அனிருத்தும், ஆன்ட்ரியாவும் மன்னிக்க முடியாத தப்பை பண்ணிட்டாங்க. முத்தத்தை கொடுத்துக்கிட்டே வாங்கறதுதானே அழகு. எத்தனையோ படங்கள் இன்டர்நெட்ல இது மாதிரி இருக்கு. நான் கூட நயன்தாராவை கிஸ் பண்ணி ‘வல்லவன்’ல நடிச்சேன். அதைப் பார்த்தாங்க. தனியா நயன்கூட இருந்தப்போ வெளியான படத்தை பெரிசுபடுத்திட்டாங்க. அனிருத் - ஆன்ட்ரியா முத்தத்தை அன்பின் வெளிப்பாடுன்னு சொல்லிப் பாருங்க, அழகா இருக்கும். ஆனாலும், இந்த ஆப்பிள் போனை கையில வச்சிருக்கிறது பூனையை மடியில் கட்டிக்கிட்டு திரியிற மாதிரி இருக்கு...
அப்பப்பா!’’
- நா.கதிர்வேலன்