நிழல்கள் நடந்த பாதை



மழையை ஏன் பிடிக்கிறது?

கவிதை ஏன் எப்போதும் காதலுடனும் மழையுடனும் இணைபிரியாமல் வந்துகொண்டிருக்கிறது என்று பலமுறை யோசித்திருக்கிறேன். கவிஞர்கள் இந்த உலகில் எதைப் பற்றியாவது அதிகம் எழுதியிருக்கிறார்கள் என்றால் அது இந்த இரண்டையும் பற்றித்தான். இரண்டுக்கும் உள்ள ஒரே பொதுவான அம்சம், அதன் நீர்மைதான். அது உங்கள் மேல் பட்டு உங்களைவிட்டு விலகிச் சென்றுவிடும். அதை உங்கள் உள்ளங்கையில் சேமிப்பதற்கான எல்லா பிரயத்தனங்களிலும் நீங்கள் தோல்வியடைந்துவிடுகிறீர்கள். அது ஒருகணம் அவ்வளவு முழுமையாக இருக்கிறது; மறுகணம் இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் போகிறது. மழை பெய்து முடிந்த மறுநாளின் வெறுமையான வீதிகளில், ஒரு காதலை இழந்த மறுதினம் சென்றதுபோலவே பலமுறை சென்றிருக்கிறேன்.

நகரவாசிகள் பெரும்பாலும் மழையை வெறுக்கிறார்கள். இது மனித சுபாவத்திற்கு முற்றிலும் மாறானது. மழை பெய்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது. சாலைகளில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுதான் இப்போதெல்லாம் மக்களுக்கு மழை பற்றிய நினைவுகள். இயற்கையின் ஒரு பேரனுபவத்தை நமது தவறுகளாலும் பொறுப்பின்மையாலும் எந்த அளவிற்கு அழிக்க முடியும் என்பதற்கு மழை ஒரு உதாரணம்.

என் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொரு மழைக்காலத்திற்காகவும் அப்படி ஏங்கிப் போயிருக்கிறேன். எத்தனையோ நாட்கள் என் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, மழை தன் பிரமாண்டமான ஆகிருதியோடு தெருவில் நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரம் மறந்துவிடும். ஆனால் மழையோடு வந்தவர்கள் எனக்கு மறக்கவில்லை. மழையோடு விட்டுப் பிரிந்தவர்கள் எனக்கு மறக்கவில்லை. மழைக்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் மறக்கவே முடியவில்லை. மழையோடு தரப்பட்ட ஒரு முத்தம்கூட எனக்கு மறக்கவே இல்லை. மழை தனது ஈரக் கைகளால் எல்லாவற்றையும் இதயத்தின் ஆழத்தில் ஒரு சித்திரமாக வரைகிறது. பிறகு அவற்றை ஒவ்வொரு மழைக்காலத்தின் ஈரத்தோடும் வாசனையோடும் பிணைத்துவிடுகிறது. அது நீர்மையின் முடிவற்ற ஞாபக வலை.

குழந்தையாக இருந்தபோது, பள்ளி முடிந்து ஒவ்வொரு நாளும் என் தந்தை என்னை சைக்கிளில் அழைத்துக்கொண்டுபோக வருவார். ஒரு நாள் பள்ளியைவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். நான் பள்ளித் திண்ணையிலேயே அமர்ந்திருக்கிறேன். மழை அப்படிக் கொட்டுகிறது. பள்ளி மைதானத்தின் மரங்கள் காற்றில் தலைவிரித்தாடுகின்றன. என் அப்பா வரவே இல்லை. எங்கும் அப்படி ஒரு இருள். அதுதான் நான் பயத்தையும் தனிமையையும் முதன்முதலில் முழுமையாக அறிந்த தினம். யாராவது வர மாட்டார்களா என, மழையின் நீர்த்திரையின் ஊடே நடுங்கும் கைகளுடன் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இருளில் கொஞ்சம் கொஞ்சமாக என் உள்ளங்கை மறைந்துகொண்டே வருகிறது. கண்ணீர் மழைநீரை மறைக்கிறது. பிறகு எப்போது என் தந்தை வந்து என்னை அழைத்துச் சென்றார் என்று எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு மழைக்காலம் தொடங்கும்போதும் இதயத்தின் ஆழத்தில் பெரும் புகைமூட்டமாக ஒரு ஆழ்ந்த துயரம் எழுவதை உணர்கிறேன். இந்த வாழ்க்கையினுடனான எனது எல்லாப் பிடிமானங்களும் தளர்ந்து, வீட்டுக்குப் போக முடியாத, கை விடப்பட்ட ஒரு சிறுவனாக என்னை உணர்கிறேன். ஒவ்வொரு மழைக்காலத் திலும் யாரையோ எதிர்பார்த்து, மழையையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மனிதர்கள் இயற்கையைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்கள். நீங்கள் திடீரென ஒருவரிடம், ‘நீ கடைசியாக ஒரு நதியை எப்போது பார்த்தாய்’ என்று கேட்டால் திகைத்துப் போவார். கடைசியாக ஒரு மலையை, ஒரு அருவியை, ஒரு கானகத்தை, ஒரு கிளியை, ஒரு மைனாவை எப்போது பார்த்தாய் என்று கேட்டால்கூட நிறைய பேருக்குத் தெளிவாகப் பதில் சொல்லத் தெரியாது. இவ்வளவு ஏன், ‘கடைசியாக நீ ஒரு சூரியோதயத்தை எப்போது பார்த்தாய்’ என்று கேட்டால்கூட பதில் சொல்வதில் பலருக்கும் சிரமம் இருக்கிறது. வேலைகளோடும் தொடர்பு சாதனங்களோடும் தங்களை முற்றாகப் புதைத்துக்கொண்ட மனிதர்களுக்கு இயந்திர வெளி என்ற ஒன்று இருக்கிறதே தவிர, இயற்கை வெளி என்ற ஒன்று இருப்பதே இல்லை.

ஆனால் ஒரு மனிதனிடம், ‘நீ கடைசியாக ஒரு மழையை எப்போது பார்த்தாய்’ என்று கேட்கவே வேண்டியதில்லை. ஏனென்றால் இயற்கையின் நடனம் நிகழும் எல்லா இடங்களுக்கும் மனிதன் அதைத் தேடிப்போக வேண்டும். ஆனால் மழையோ மனிதர்கள் இருக்கும் எல்லா இடங்களுக்கும் தானே வருகிறது. ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி உள்ளே நுழைகிறது. இயற்கைக்கு எதிராக முகத்தைத் திருப்பிக்கொண்ட மனிதன், மழையில் நனைந்துகொண்டே நடந்து போகிறான்.

மழை உண்மையில் நமது நினைவின் ஒழுங்குகளைக் குலைத்துவிடுகிறது. மழை அன்றாட வாழ்வின் உறுதியான திட்டங்களைக் கொஞ்சம் மாற்றிவிடுகிறது. நாம் உண்மையில் அதை உள்ளூர விரும்புகிறோம். நமது வாழ்வின் இரும்பு வேலிகள் இருண்ட மழைக்காலத்தில் கொஞ்சம் தளர்ந்துபோகின்றன. சோம்பலின் மயில் மெல்ல தோகை விரித்தாடுகிறது. வெறுப்பினால் நிறைந்திருக்கும் இதயங்கள் பலவீனமடைந்து விடுகின்றன. அவர்களது கசப்பின் அம்புமுனை முறிந்து போகிறது. அன்பினால் ததும்பும் இதயங்கள் கரை உடைத்துக்கொண்டு பொங்கிப் பிரவகிக்க தத்தளிக்கின்றன. அவர்களது நல்லுணர்ச்சியின் விதைகள் எங்கும் முளைவிட்டு துளிர்த்தெழுகின்றன.

மழையை ஒரு பருவத்தில் பார்த்ததுபோல இன்னொரு பருவத்தில் பார்க்கக் கிடைப்பது இல்லை. குழந்தைமையின் மழை, சாகசத்தையும் குதூகலத்தையும் கொண்டு வருகிறது. இளமையின் மழை, காமத்தையும் கற்பனைகளையும் பரவச் செய்கிறது. மத்திய வயதின் மழை மன நெருக்கடிகளையும் சஞ்சலங்களையும் பெருகச் செய்கிறது. முதுமையின் மழையில் எப்போதும் மரணத்தின் வாசனை கொஞ்சம் கலந்திருக்கிறது.

ஒரு இடத்தில் ஒருவிதமாகப் பெய்யும் மழை, இன்னொரு இடத்தில் இன்னொரு விதமாகப் பெய்கிறது. ஒண்டுக்குடித்தனங்கள் மேல் பெய்யும் மழை, தனி வீடுகளில் பெய்யும் மழை, அரண்மனைகளிலும் கோட்டைகளிலும் பெய்யும் மழை, கானகத்தில் பெய்யும் மழை, கடல் மேல் பெய்யும் மழை, மலைமேல் பெய்யும் மழை, ஒரு குடையில் இன்னொருவரின் கீழ் ஒதுங்கி நிற்கும்போது பெய்யும் மழை, குடையே இல்லாதவர்கள் தலையில் பெய்யும் மழை என மழையைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை விதங்கள் இருக்கின்றன. பார்வையற்ற ஒருத்தி மழையைத் தன் கைகளால் தொட்டுத்தொட்டு அறிந்துகொள்வதை ஒரு முறை கண்டேன்.

எவ்வளவு மழைக்காலங்கள் கடந்துபோய்விட்டன. ‘எட்டுத் திசையும் இடிய மழை எங்கனம் வந்ததடா தம்பி வீரா?’ என்று கேட்பதை மட்டும் ஒரு காலத்திலும் நிறுத்த முடியவில்லை.

வருந்தத்தக்க மாற்றம்
சமீபத்தில் மத்திய மந்திரிசபை மாற்றத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பதவி மாற்றங்களும், புதிய பதவிகளும், பதவிப் பறிப்புகளும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் ஒரே ஒருவரின் பொறுப்பு பறிக்கப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வசம் இருந்த குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகள் துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. பொது சுகாதாரத்தின் நிலையை உயர்த்த முக்கியமான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் வீட்டில் கழிப்பறை கட்டுவதற்கு 3500 ரூபாய் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. அவர் அதை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தினார். திட்டக்கமிஷன் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நிதி, இவரது காலத்திலேயே பெருமளவு அதிகரிக்கப்பட்டது.

‘‘பெண்கள் கழிப்பறையை விட, அலைபேசியை அத்தியாவசியத் தேவையாகக் கருதுகின்றனர்’’, ‘‘நாட்டில் கழிப்பறைகளை விட கோயில்கள் அதிகமாகவுள்ளன’’ என்பதுபோன்ற ஜெய்ராமின் கருத்துகளை வைத்து ஊடகங்கள் சர்ச்சையை உருவாக்கின. கழிப்பறைகள் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் முதல் அடையாளம் என்பதைப் புரிந்துகொண்டதாலேயே அவர் அவ்வளவு கடுமையாக சொன்னார். எப்போதோ ஒரு முறைதான் காங்கிரஸ் அமைச்சரைப் பாராட்ட சந்தர்ப்பம் வருகிறது. அதற்கும் உலை வைக்கிறார்கள்.

எதிரி...
கொள்ளை நோய்கள் தமிழகத்தில் மீண்டும் பரவத் தொடங்கி விட்டன. இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வீட்டில் யாருக்காவது லேசாக காய்ச்சல் வந்தால் கூட, அவருக்காக அனுதாபப்படுவது போய், அவரை நமக்கு அபாயத்தைக் கொண்டுவரப்போகும்
எதிரியாகப் பார்ப்பதுதான்.
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்

அப்துல் கலாமின் வல்லரசுக் கனவும்
இந்தியாவின் பசித்த வயிறுகளும்
- ரா.பி.சகேஷ் சந்தியா
இந்தியர்கள் பொதுவாக கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் மட்டுமல்ல, மனிதக் கடவுள்களையும் தீவிரமாக நம்பக்கூடியவர்கள். ஒரு உண்மையைப் பற்றிய பல கூற்றுகளை ஆராய்ந்து தெளிவதைவிட தங்கள் சார்பாக யாராவது ஒரு முடிவைக் கூறினால் அதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உள்ள விருப்பம் அலாதியானது. கூடங்குளம் விவகாரத்தில் கடுமையான எதிர்த் தரப்புகள் மோதிக்கொண்ட நிலையில் திடீரென ஒருநாள், ‘‘அப்துல் கலாமே சொல்லிவிட்டாரே... அப்புறம் என்ன?’’ என்று ஆரம்பித்தார்கள்.

இந்த நூல் அப்துல் கலாமின் அணு உலை ஆதரவு எவ்வளவு அர்த்தமற்றது என்பதைப் பல்வேறு விஞ்ஞான ஆதாரங்களுடன் விவரிக்கிறது. சர்வதேச உதாரணங்கள் பல முன்வைக்கப்படுகின்றன. நாட்டை பாதிக்கும் பல பிரச்னைகளுக்கு அறிவியல் ரீதியாக எந்தத் தீர்வும் சொல்லாத கலாம், இந்தப் பிரச்னையின்பால் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்கிற கேள்வியையும் ஆசிரியர் முன்வைக்கிறார். நம்பிக்கைக்கு அப்பால் நம் அறிவைக் கோரும் சிறுநூல்.
(விலை: ரூ.40/-, வெளியீடு: ரியோ பதிப்பகம், 107/1, 14வது குறுக்குத் தெரு, சவகர் தெரு, அரசு அலுவலர் ‘அ’ குடியிருப்பு, திருநெல்வேலி-627007.)

எனக்குப்பிடித்த கவிதை

உறங்கிக் கொண்டிருந்தது ஒரு பெண்

விடிய விடிய
உன் அருகில்
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு பெண்
தலைமுறை
சாபங்களினால்
அவள்
கல்லாய்
சமைந்திருந்தாள்
ஆனாலும் விடிய விடிய
உன் அருகில்
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு பெண்தான்
- மாதுமை

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்

விற்பனை இலக்கை எட்டாத டாஸ்மாக் துணை மேலாளர்கள் அதிரடி மாற்றம் - செய்தி குடிக்காதவனுங்களுக்கு அல்லது கம்மியா குடிக்கிறவனுங்களுக்கு மாட்டுக்கு மருந்து ஊத்துற மாதிரி கையைக் காலைக் கட்டி ஊத்தி விடலாம். இல்லைன்னா பழுக்கக் காய்ச்சின இரும்புக் கம்பில சூடு வைக்கலாம். வேற எப்படி விற்பனையை ஜாஸ்தி பண்றது?