இந்தக் கட்டில்ல படுத்தா கணவன்-மனைவி சண்டை வராதாம்!






ஜோசியர்: நீங்களும் உங்க மனைவியும் காலம் பூரா சண்டையே வராம ஒண்ணாவே இருப்பீங்க!
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லீங்களா?
- பல ஊர் சுற்றி எஸ்.எம்.எஸ்ஸில் நமக்கு வந்த ஃபார்வேர்டு ‘கடி’தான்... பட், இந்த விசேஷ கட்டிலைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இதை இன்ட்ரோவில் போடாமல் இருக்க முடியவில்லை. ஆம், இந்தக் கட்டிலில் படுத்தால் கணவன் - மனைவிக்கு இடையே கண்டிப்பாக சண்டையே வராதாம். அடித்துச் சொல்கிறார்கள் மார்க்கெட்டிங்
டை பார்ட்டிகள்! சண்டையை ஒரு கட்டில் எப்படித் தடுக்கிறது?

வழக்கம் போல, ‘அமேசான் காட்டின் அரிய வகை மூலிகை மரத்தை வெட்டிக் கடைந்து...’ என கதை சொல்வார்கள் என்று பார்த்தால்... வாஸ்து, மனோதத்துவம், தொழில்நுட்பம் என வேறுவிதமாக விளக்குகிறார்கள் இதை. ‘‘என்னதான் சார் மேட்டர்?’’ என்றபடி அந்தக் கட்டிலைத் தயாரித்த நீல்கமல் நிறுவனத்திடமே போய் நின்றோம்.
‘‘முதல்ல இந்தக் கட்டிலைப் பத்திக் கேள்விப்படுறவங்களுக்கு தமாஷாத்தான் இருக்கும். ஏதோ லேகியம் விக்கிறவன் பேச்சு மாதிரி கூட இருக்கலாம். ஆனா, இதுல அந்த மாதிரி வயாக்ரா சமாசாரம் எல்லாம் இல்லை. இது சுத்தமான சயின்ஸ்... அதுல நாங்க கொஞ்சமா வாஸ்து கலந்திருக்கோம்!’’ என்றார் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் ஜி.சிவராம்.
‘‘கட்டில்னா வெறும் கட்டில் இல்லை. அந்தக் கட்டிலுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஸ்பெஷல் மெத்தைதான் இங்க ஹைலைட். புதுசா கல்யாணமாகிற கணவனும் மனைவியும் அதுவரை தனித்தனிச் சூழல்ல படுத்துத் தூங்கியிருப்பாங்க. தம்பதியா ஆன பிறகு ஒரே கட்டில்ல தூங்கறப்ப, அது ரெண்டு பேருக்குமே கம்ஃபர்ட்டபிளான சூழலா இருக்கணும். அப்பதான் அவங்களுக்குள்ள இனிமை நீடிக்கும்.

ஆனா, பொதுவாவே ஆணுக்கு ஒரு விதமான படுக்கை பிடிக்கும். பெண்ணுக்கு வேற விதமான படுக்கை பிடிக்கும். ஸோ, ஒரே மெத்தை ரெண்டு பேரையும் சொகுசா வச்சிக்கறது கஷ்டம். அதனாலதான், இந்த மெத்தையை ஒரு பாதி ‘சாஃப்ட்’டாவும் மீதிப் பகுதி கொஞ்சம் உறுதியானதாவும் வடிவமைச்சிருக்கோம். பெண்கள் எப்பவுமே சாஃப்ட்டான மெத்தையை விரும்பறவங்க. உறுதியான பகுதி ஆண்களுக்கு. ‘வெரோனிகா’ன்னு அழைக்கப்படற இந்த மெத்தைகள், வாஸ்து அடிப்படையிலயும் தயாரிக்கப்பட்டிருக்கு. கட்டிலோட இரு பகுதிகளும் நூலளவு கூட வெளியில தெரியாதபடி பிணைக்கப்பட்டிருக்கும். இப்படியொரு மெத்தையை நாட்டிலேயே முதல்முறையா நாங்கதான் உருவாக்கியிருக்கோம்’’ என்று அவர் மேலும் விளக்க, ‘படுக்கை என்ற வஸ்துவில் வாஸ்துவெல்லாம் சாத்தியமா’ என்ற கேள்வியோடு வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை அணுகினோம்.

‘‘பெட்ரூம்ல கணவனும் மனைவியும் இணக்கமா இருக்கறதுலதான் வாழ்க்கையோட அர்த்தமே இருக்கு. அதனால பெட்ரூமுக்கு வாஸ்து இருக்கு. ஆனா, அதை ‘பெட்’னு சுருக்கிக்கறதுல வியாபாரத் தந்திரம் இருக்கலாம். கணவன் மனைவிக்கு பெட்ரூம் உறவு நல்லபடியா அமையணும்னா, வாஸ்துப்படி அந்த அறையோட வடகிழக்கு மூலையில ‘வெயிட்’ இருக்கக் கூடாது. தென்மேற்குல பீரோ இருக்கலாம். தரைத்தளத்தைப் போல ‘சீலிங்’கும் சமமா இருக்கணும். இதைத் தவிர்த்து அறைக்கு வடக்கு, கிழக்குப் பக்கமா ஜன்னல் இருந்தா அதைத் திறந்து வச்சுப் படுத்தா நல்ல தூக்கம் வரும்’’ என்றார் அவர்.



வெரோனிகாவை தாங்கும் கட்டில்கள் ‘கம்ப்ரஸ்டு உட்’ எனப்படும் மலேசிய இறக்குமதி அயிட்டம். அறிமுகமாகி நான்கே மாதம் ஆகும் நிலையில் புதுமணத் தம்பதிகள் மட்டுமில்லாது நான்கு குழந்தைகள் பெற்ற பெற்றோரும் (இவ்ளோ நாள் மல்லுக்கட்டிட்டுதான் இருந்தாங்களோ!) எழுபதாயிரம் ரூபாய் கொடுத்து கட்டிலை வாங்கிச் செல்கிறார்களாம்.
எல்லாம் ஓகே... கட்டில்ல எந்தப் பகுதியில யார் படுக்கிறதுன்னு பிரச்னை வந்தா..?
- அய்யனார் ராஜன்
படங்கள்: தமிழ்வாணன்

புரிதல் முக்கியம்!

ஒரு ‘டைப்’பான இந்தக் கட்டில் மெத்தை ‘சமாசாரத்தில்’ கருத்து கேட்க நடிகர் - இயக்குனர் பாக்யராஜைவிட பொருத்தமானவர் வேறு யார்? ‘‘முன்ன ‘காந்தப்படுக்கை’ன்னு ஏதோ சொன்னாங்களே... அந்த மாதிரி இல்லல்ல..?’’ என்று கேட்டுக் கொண்டவர், ‘‘கட்டின புருஷனோ, பொண்டாட்டியோ... ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தா எந்த சண்டையும் வராது. நல்ல புரிதல் இருந்துச்சுன்னு வச்சுக்கோங்க, பாய், தலையணை, மெத்தை, கட்டில்னு எதுவும் வேண்டாம். எல்லாம் கரெக்டா நடக்கும். மத்தபடி ரெண்டு பேரும் ரெண்டு துருவமா இருந்தாங்கன்னா, தங்கத்துலயே கட்டில் செஞ்சு படுத்தாலும் எப்படா பொழுது விடியும்னுதான் இருக்கும்!’’ என்றார்.