யாருக்கு வெற்றி?





நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாத முதல் செவ்வாயன்று நிகழும் அமெரிக்க அதிபர் தேர்தலை அமெரிக்காவின் நட்பு நாடுகளும் சரி, பகை நாடுகளும் சரி... நுட்பமாகக் கவனிக்கின்றன. இந்த நவம்பர் ஆறாம் தேதியின் அதிபர் தேர்தல் முன் எப்போதையும் விட அதிகமாகக் கவனிக்கப்படுகிறது. பிரசாரங்கள் ஓய்வதற்குமுன்பே மக்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் மிட் ராம்னியும் போட்டியிடுகிறார்கள். ஒபாமாவை அறிந்திருக்கும் அளவுக்கு ராம்னியை இந்தியாவில் பலரும் அறியச் சாத்தியம் இல்லை. 1947ம் வருடம் பிறந்த மிட் ராம்னி, ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். செல்வந்தர். தனது பெய்ன் முதலீட்டு நிறுவனம் மூலம், நலிந்த கம்பெனிகளில் முதலீடு செய்து அவற்றைச் சீர்திருத்தியோ விற்றோ கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். நலிந்து கிடந்த பனிக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை, மீண்டும் லாபகரமான இயக்கமாக மாற்றியவர். ஸ்டேன்பர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் பயின்றவர். ஹார்வர்டு வகுப்பில் முதல் ஐந்து மாணவர்களுள் ஒருவராக வந்தவர். பாஸ்டனைத் தலைநகராகக் கொண்ட மேசசூசட்ஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்தவர்.

ஆப்ரிக்க அமெரிக்கர் என்றழைக்கப்படும் கறுப்பர் இனத்தின் முதல் அமெரிக்க அதிபர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஒபாமா. கத்தோலிக்கர் ஜான் கென்னடியைத் தவிர, 1788ல் நடைபெற்ற முதல் அமெரிக்கத் தேர்தலிலிருந்து இன்று வரை ப்ராடஸ்டன்டுகள் மட்டுமே அதிபர் ஆகியிருக்கிறார்கள். மோர்மன் மதத்தைச் சேர்ந்த ராம்னி வெற்றி பெற்றால், இம்மதத் தின் முதல் அமெரிக்க அதிபராகிச் சாதனை புரிவார்.

சாதனைகள் இதோடு நிற்கவில்லை. உலக வரலாற்றிலேயே அதிகம் செலவழிக்கப்படுவது இந்தத் தேர்தலில்தான்.  மொத்தம் இரண்டு பில்லியன் டாலர் (5500 கோடி ரூபாய்!). சென்ற எழுபது ஆண்டுகளில், அமெரிக்காவின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்ட நிலையில் நடக்கும் முதல் தேர்தலும் இதுவே. அமெரிக்கா உலகின் மிகப் பெரும் கடனாளியான நிலையில் நடைபெறும் முதல் தேர்தலும் இதுவே. கணிப்புகளில் ராம்னி, ஒபாமா இருவருமே சம நிலையில் இருக்கிறார்கள். பொதுமக்கள் வாக்குகளில் ராம்னியும், ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் மாகாணத் தேர்வாளர் வாக்குகளில் ஒபாமாவும் முன்னிலையில் இருக்கிறார்கள்.

மேலும் விவாதிக்குமுன், அமெரிக்கத் தேர்தல் முறையைப் பற்றிக் கொஞ்சம்... இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் அரசியல் கட்சிக்கும் கட்சி வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் மாகாணத் தேர்வாளர்கள் மட்டுமே அதிபரைத் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்கள், தலைநகர் வாஷிங்டன் உள்ள கொலம்பியா மாவட்டம்... எல்லாம் சேர்த்து மொத்தம் 538 தேர்வாளர் வாக்குகள். இவற்றில் 270 வாக்குகளைப் பெறும் வேட்பாளரே அதிபர். தேர்தல் முடிந்து ஒன்றிரண்டு நாட்களில் முடிவுகள் தெரிந்துவிடும் எனினும், டிசம்பர் 17ம் தேதி தேர்வாளர் மாநாட்டிற்குப் பிறகே அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிக்கப்படும். சிக்கல்கள் ஏற்படுகையில், தேர்வாளர் மாநாடு வரை இழுபறி தான். அதற்குப் பின்னும் இழுபறியாகி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்மானிக்க வேண்டிய நிலையும் 2000ம் வருடத் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது.



கடந்த நான்கு ஆண்டுகளாக ஒபாமா எதையும் சாதிக்கவில்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்ற வாரக் கணக்குப்படி இரண்டு கோடிப் பேர் வேலையில்லாமல் மானியம் பெறுகிறார்கள். பொருளாதார நிலையும் மோசம். 2008ல் பத்து லட்சம் கோடி டாலராக இருந்த அமெரிக்கக் கடன், பதினாறு லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. 2008ல் அரசாங்க உணவுப் பத்திரங்கள் பெற்றவர்கள் மூன்று கோடிப் பேர்; 2012ல் ஐந்து கோடி. பின்லேடனைக் கொன்றதைத் தவிர, ஒபாமாவின் சாதனைகள் வெறும் பூச்சாகவே கருதப்படுகின்றன.  

ராம்னியின் கதை வேறு. தொழில்முறைச் சாதனைகளையும் மாநில ஆளுநர் சாதனைகளையும் எத்தனை பெரிதுபடுத்தினாலும் மக்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. ‘ராம்னி பணக்காரன், ஏழைகளின் விரோதி’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. குடியரசுக் கட்சி மதவெறி, ஆணாதிக்கம், பெண்ணுரிமை இழப்பு, போர் விருப்பம் போன்றவற்றை ஆதரிக்கும். ராம்னி நம்பத்தகாதவர் என்ற எண்ணமும் விரவியிருக்கிறது.

இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான பொது விவாதங்கள் அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய அம்சம். உள்நாட்டுக் கொள்கை, பொதுக் கேள்விகள், வெளியுறவுக் கொள்கை எனும் மூன்று தலைப்புகளில் நடந்த விவாதங்கள் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாயின. முதல் விவாதத்தில் ராம்னி வென்றார். இரண்டாவதில் ஒபாமா வென்றார். மூன்றாவதில் ஒபாமாவின் கை மேலோங்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன.  

முதல் விவாத வெற்றி காரணமாக, ராம்னிக்கு ஆதரவு வளரத் தொடங்கியது. அதுவரை ராம்னியை அறிந்திராத அமெரிக்க மக்கள் பலர் - குறிப்பாக ‘சாத்திய மற்றும் தீர்மானிக்க இயலாத’ வாக்காளர்கள், ராம்னியை ஆதரிக்கத் தொடங்கினர். அந்த வாதத்தில் தொடங்கிய ராம்னி அலை இன்றைக்கு ஒபாமாவை மூழ்கடிக்கும் நிலையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஒபாமா அலை ஓயவே இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது.



இந்தியாவையோ, உலக நாடுகளையோ யாருடைய வெற்றி எவ்வாறு பாதிக்கும்?
யார் வென்றாலும், சில கொள்கைகளில் மாற்றம் இராது:
*  பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி பரிசோதனைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகும்.

*  அமெரிக்காவுக்கு உள்நாட்டு வணிக உரிமை வழங்கப்படவில்லையெனில் சீனாவுடனான வணிகம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

*  உற்பத்தித் துறை அவுட்சோர்சிங் கட்டுக்குள் கொண்டு வரப்படும். புது வரிகளுக்குட்படும். உள்நாட்டிற்கு மீட்டு வரும் உற்பத்தித் தொழில்களுக்கு வரி நீக்கமும் சலுகைகளும் கிட்டும்.

*  தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் புது வரிகளுக்குட்படும். எனினும், கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி இராது.

ஒபாமா, ராம்னி இருவருமே இந்தியாவை மதிப்பவர்கள். 2040க்குள் இந்தியா ஒரு வல்லரசாகும் சாத்தியத்தை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்துவதால், நட்பு பாராட்டத் தயங்க மாட்டார்கள். சீனாவுடனான வணிகம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகமாகும் சாத்தியம் இருப்பதால், இந்தப் பிரதேசத்தில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருப்பதையே விரும்புவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஒபாமா ஒரு மத்திய பார்வையே கொண்டிருந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஈடுபாடு அதிகரிப்பது, ஹிலாரி கிளின்டனுக்குப் பதிலாக வரப்போகிறவர் யாரென்பதைப் பொறுத்து இருக்கிறது. ராம்னி இந்தியாவின் மேல் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். பாகிஸ்தானுக்குப் போட்டியாகவோ அல்லது தன்னிச்சையாகவோ இந்தியாவுடன் தீவிரவாத எதிர்ப்புக் கூட்டுத்திட்டங்களை ஆதரிப்பார். அமலில் இருக்கும் அணுசக்தி உடன்படிக்கைகள் இன்னும் பரவலாகும் சாத்தியமுள்ளது. இருவரின் ஆட்சியிலும் இந்தியர்களுக்கான பி  1ஙி, க்ரீன் கார்ட் வரம்புகள் அதிகரிக்கப்படும் என்றாலும், ராம்னியின் ஆட்சி இந்திய ஐடி கம்பெனிகளுக்கு பெரிதும் ஆதரவாக இருக்கும்.  இருவருமே இந்தியாவில் அந்நிய முதலீட்டுச் சிக்கல்களைத் தகர்க்க இந்திய அரசை வற்புறுத்துவார்கள்.
 
இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பலர் ரிபப்ளிகன் ஆளுநர்களாகவும் கட்சித் தலைவர்களாகவும் இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்க இந்தியர்கள் பெரும்பாலும் ஒபாமாவையே ஆதரிக்கிறார்கள். ராம்னி, ஒபாமா இருவருக்குமே, முன் சொன்ன 270 வாக்குகளைப் பெற வழி இருப்பதால், இந்தத் தேர்தலும் இழுபறியாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். கட்சி உறுப்பினர்களின் அடிப்படையிலும் மாகாணக் கட்சி ஆதரவின் அடிப்படையிலும் தேர்வாளர் வாக்கு வெற்றி விகிதம் பின்வருமாறு கணக்கிடப்பட்டிருக்கிறது:
*  நிச்சயம்: ஒபாமா-217, ராம்னி-191
*  சாத்தியம்: ஒபாமா-36, ராம்னி-15
*  தீர்மானமாகாதவை: 79
தீர்மானமாகாத வாக்குகள் 79, சாத்திய வாக்குகள் 51 ஆகிய இவையே வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போவதால், கடும்போட்டி நிலவுகிறது. உள்நாட்டுப் பிரச்னையை மையமாகக் கொண்டு எலக்டோரல் காலேஜ் வாக்களித்தால், ராம்னிக்கு வாய்ப்பு. இல்லாவிட்டால் ஒபாமாவுக்கு சான்ஸ்!