நோய் தீர என்ன செய்ய வேண்டும்?





ஜோதிடம் என்பது சமுத்திரம் போன்றது. கையகல சிப்புக்குள் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்த விஞ்ஞானிகள் போல, பண்டைய ரிஷிகள் பன்னிரெண்டு கட்டங்களுக்குள் வாழ்க்கையை அடக்கி விட்டார்கள். இன்பமோ, துன்பமோ, யோகமோ, பாக்கியமோ, புண்ணியமோ, பாவமோ... அனைத்துக்கும் தனித்தனி கட்டங்களை ஒதுக்கி கணக்கிட்டார்கள். அதுபோல பிரச்னைகள் என்பதற்காகவே ஒரு கட்டத்தை ஒதுக்கினார்கள். அவை என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுவோமா?

சிலர் வாழ்க்கை பூஞ்சோலையாகவும், சிலர் வாழ்க்கை போர்க்களமாகவும் இருக்கும் மர்மம் என்ன? ‘‘காய்ச்சலோ, காமாலையோ வந்து ஒருநாளும் அவரு படுத்ததேயில்லை. எனக்குத் தெரிஞ்சு அவரு மருந்து மாத்திரைன்னு சாப்பிட்டதா நினைவில்லை’’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், பலருக்கு மருந்தே உணவாகிப் போன அவலமும் இருக்கத்தானே செய்கிறது. பாட்டனின் ஆறு சென்ட் இடத்திற்காக ஆறு கிரவுண்ட் இடத்தை விற்று வாதாடுபவர்களும் இங்கிருக்கிறார்கள். தேடாமலே தினம் தினம் சொத்து சேர்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.  

இதுவரை திருமணம், குழந்தைப் பேறு, வீடு, வேலை என்று பார்த்தோம். ஒருவரின் சொந்த ஜாதகத்திலோ அல்லது பிறந்த ராசியை அடிப்படையாகக் கொண்டு ஐந்தாம் இடம் எனில் குழந்தைப்பேறு எனவும், பத்தாம் இடமெனில் வேலை ஸ்தானம் எனவும், நான்காம் இடமெனில் வீடு வாசல் எப்படி அமையும் என்றும் பார்த்தோம். அதுபோல ஆறாம் இடத்தை ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்பார்கள். ருணம் எனில் கடன்; ரோகம் என்றால் நோய்; சத்ரு என்றால் எதிரி. இந்த மூன்றையும் பற்றி முக்கியமாகக் கூறும் இடம் என்பதால் ‘ருண, ரோக, சத்ரு ஸ்தானம்’ என்றார்கள்.

பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறது; அது செய்தி அல்ல. வாழ்க்கையும் நகர்ந்து கொண்டேயிருக்கிறது; அதுவும் செய்தி அல்ல. அந்தப் பேருந்து விபத்துக்குள்ளாகிறபோது செய்தியாகிறது. அதாவது, ஜாதகத்தில் ஆறாம் இடம் வேலை செய்யத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். சின்னச் சின்ன துன்பங்களை நாமே தீர்த்துக் கொள்ளலாம். அல்லது கடந்து சென்று விடலாம். அதுவே பெரும் சுமையாக அழுத்தினால்? அந்தப் பெருவெள்ளத்தை சுட்டிக் காட்டுவதுதான் ஆறாம் இடம்.

எல்லோரும் நிம்மதியாக இருக்கவே விரும்புகிறோம். தோல்வியை யாரும் முழு மனதோடு ஏற்பதில்லை. சொந்த வாகனம் சொகுசு வாகனம் என்று போகும்போதே அடிபட்டு படுக்கையில் விழும் நிலையும் வருகிறது. நெரிசலில் நின்று மூச்சு முட்டினாலும் பரவாயில்லை என்று பேருந்தில் வருவோரும் உண்டு. ‘சாதிக்கறமோ இல்லையோ, சண்டை சச்சரவு இல்லாம நாலு பேர் நம்பள பார்த்து கேவலமா பேசாம இருந்தாலே போதும்’ என்று இருந்துவிடுவோரும் உண்டு. இப்படி வாழ்க்கையைக் குறுக்க வைப்பதும் ஆறாம் இடம்தான். வேறு எந்தெந்த விஷயங்களை இந்த ஆறாம் பாவம் உணர்த்துகிறது?

முதலில் நோய் பற்றி விவரிக்கிறது. ‘ராசிக்கு ஆறாம் இடத்தில் இந்தக் கிரகம் இருந்தால், இவர் நிச்சயம் இம்மாதிரி நோயால் அவதிப்படுவார்’ என்று வருமுன் காக்கச் சொல்கிறது. ‘‘அதற்காக எப்போ வியாதி வரும்னு பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்றீங்களா?’’ என்று நீங்கள் கேட்கலாம். அப்படியில்லை. ஒருமுறை இந்த ஆறாம் இடத்தைப் பார்த்து விட்டால் பெரிய நோய்கள் தாக்கும் காலத்தை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் ஆறாம் இடத்திற்குரிய கிரகங்களின் நிலைமைகளையும், தசாபுக்திகள் நடைபெறுவதையும் வைத்து கோடிட்டுக் காட்டலாம்.

‘‘சார்.. நீங்க இப்போ அவங்க மேல வழக்கு தொடுக்காதீங்க. அவங்க உங்கமேல வழக்கு தொடுக்கட்டும். நீங்க எமோஷனால கேஸ் போட்டா அவங்க ஜெயிச்சுடுவாங்க. அப்புறம் ஒண்ணுக்கு பத்து மடங்கா அலைய வேண்டியது வரும்’’ என்று நீங்கள் வழக்காடலாமா, வேண்டாமா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

‘‘தயவுசெஞ்சு பத்து பைசா கூட கடன் வாங்காதீங்க. பத்தாயிரம் ரூபா நீங்க கொடுக்க வேண்டி வரும்’’ என்றும், ‘‘சார்... கடனா ஏதாவது வாங்கி வைங்க சார். அது வீட்டுக்கடனா கூட இருக்கட்டும். இல்லைன்னா ஹெல்த் பிராப்ளம் வந்து பெரிய அளவுல செலவு வைக்கும்போல கிரகங்கள் காட்டுது’’ என்று வருமுன் உரைக்கவே ஆறாம் இடம் பயன்படுகிறது. அதனால்தான் கடன், நோய் எல்லாவற்றையுமே இந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள்.

‘‘சின்ன பிராப்ளம்தான் உங்களுக்கு. ஏன் பெருசா போட்டு மனசை உழட்டிக்கறீங்க. நின்னா, நடந்தா, ஓடினா... ஏன் எல்லாத்துக்கும் பயப்படறீங்க. அது அப்படி ஆயிடுச்சின்னா... இது இப்படி ஆயிடுச்சின்னா... என்று விபரீத கற்பனை வேணாம். இப்போ எந்த விஷயத்தை நீங்க தொட்டாலும் அப்படித்தான் டீல் பண்ணுவீங்க’’ என்று மன உளைச்சலின் வேகத்தை மட்டுப்படுத்தலாம்.

‘‘இவர் மேல தப்பேயில்லை. லெப்ட்லதான் போனாரு. எதிர வந்த வண்டிக்காரன்தான் குடிச்சிட்டு வந்து மோதியிருக்கான். இடிச்சவனுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, இவருக்கோ இன்னும் ரெண்டு நாள் போனாதான் என்னன்னே சொல்ல முடியும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க’’ என்று கண நேர விபத்தில் வாழ்க்கையே மாறிப்போவதை இந்த இடம்தான் தீர்மானிக்கிறது. ‘‘மறந்துபோய்க்கூட ஹெல்மெட்டை வீட்ல வச்சிட்டு போகாதீங்க’’ என்று முன்கூட்டியே கண்டிக்கலாம். ‘‘எப்போ யாருக்கு என்ன ஆகும்னே தெரியாது’’ என்று உங்களுக்குள் கேள்வி வரலாம். உண்மைதான். ஆனால், ஜோதிடம் எச்சரிக்கும் நேரத்தில் ஜாக்கிரதையாக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே.

‘‘ரொம்ப பணத்தை கையில வச்சுக்காதீங்க. அம்பதுன்னு எடுத்துக்கிட்டுப்போய் ஐநூறு ரூபாயை கடன் வாங்கி செலவு பண்ணுவீங்க’’ என்று வீண் செலவு பற்றி எச்சரிக்கலாம். ‘‘மனசு அறிஞ்சி ஒரு ஈ எறும்பைக் கூட அடிக்க மாட்டாரு. அவரைப்போய் கொலை பண்ணாருன்னு சொல்லி உள்ள தூக்கி வச்சிருக்காங்க’’ என்பதெல்லாம் ஆறாமிடம் செய்யும் எடக்கு மடக்கான வேலைதான். ‘‘கூடவே இருந்தான். நல்லா வளர்த்து விட்டாரு. ஆனா, துரோகம் பண்ணிட்டு அங்க போய் வேலைக்கு சேர்ந்துட்டான். எல்லா ரகசியங்களையும் கக்கிட்டான். இப்படியா முதுகுல குத்துவான்?’’ என்கிற நம்பிக்கை துரோகத்தை அலாரம் அடிப்பதுபோல எச்சரிக்கிறது. ‘‘தயவுசெய்து கூட்டு வியாபாரமே வேணாம் சார். ஒரு தாய் புள்ளையா இருந்தாக்கூட வேணாம். உங்களுக்கு சரியா வராது’’ என்று நேருக்கு நேராக இந்த இடம் சொல்லி விடும்.

‘‘பக்கத்து தெருவுலதான் சார் எனக்கு வீடு. சும்மா வண்டியில வந்தேன். வீட்டுக்கு போய் லைசன்ஸை எடுத்துகிட்டு வந்துடறேன்’’ என்று அடிக்கடி ஸ்பாட் பைன் கட்டினால் ஆறாம் இடம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள். இதை ஜாதகம் எச்சரிக்கும். ‘‘பதினஞ்சு பவுன் நகையை வச்சி அஞ்சு வருஷம் ஆச்சு. வட்டி கட்டின காசுக்கு முப்பது பவுன் புது நகையாவே வாங்கியிருக்கலாம். இப்போ பாருங்க மூழ்கிப்போச்சு’’ என்று நகை மூழ்கிப் போதலையும், சீக்கிரம் மீட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆறாமிடம் அறிவுரை கூறுகிறது.



‘‘ரெண்டு நாள்தான் தலைவலின்னு சொன்னான். ஸ்கேன் எடுத்தா மூளையில கட்டிங்கறாங்க. என்ன பண்றதுன்னே தெரியலை’’ என்று திடீர் அறுவை சிகிச்சையை ஏற்படுத்துகிறது. ‘‘ஒண்ணும் ஆகாது. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. தீர்க்காயுசு’’ என்று ஆறாமிடத்தின் பாதிப்பை உடனடியாக விரட்டலாம்.  

‘‘அவரு வாயைத் திறந்து ஒரு பொய் சொன்னது கிடையாது. ஆனா, என்ன ஆச்சுன்னு தெரியலை. அந்த கேஸ்ல கோர்ட்டுல நின்னு பக்கம் பக்கமா பொய் சொல்லிக்கிட்டிருக்காரு’’ என்று பொய் சாட்சியாக மாறத் தூண்டுவதும் ஆறாம் இடம்தான். ‘‘யார் ஆட்சிக்கு வந்தாலும் சரிதான். அவங்களை கிழிகிழின்னு கிழிச்சு காய்ச்சறதுதாங்க அவரோட வேலையே’’ என்று ஆட்சியாளர்களுக்கு எதிராக கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தூண்டுவதும் இந்த இடம்தான்.

‘‘ஒண்ணா படிச்சாங்க. ரெண்டு பேருமே நல்ல மார்க்தான். ஆனா, இவரு எதைத் தொட்டாலும் ஜெயிக்கறாரு. ஆனா, அவரு தொட்டதெல்லாம் துலங்க மாட்டேங்குது. தோல்வி மேல தோல்வி வந்து அலைக்கழிக்குது’’ என்று வாழ்வையே மாயமாக்குகிறது.

ஒரு வீடு என்றால் ஹாலில் இடம்பெறக்கூடிய பொருட்கள், சமையலறையில் புழங்கக் கூடிய பொருட்கள் என்று வகை இருக்கிறது. இந்தப் பொருட்களை மாற்றி வைத்தால் வீடு அலங்கோலமாகும். அதுபோல ஒருவரின் ஜாதகத்தில் ராசிநாதன், சுகஸ்தான அதிபதி என்கிற நான்காம் இடத்து அதிபதி, பூர்வ புண்ணியம் என்கிற ஐந்தாம் இடத்து அதிபதி போன்றவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் மேற்கண்ட யோகங்களைத் தரும் கிரகங்களெல்லாம் ஆறாம் வீட்டில் சென்று அமர்ந்தால், அல்லது ஆறாம் இடத்திற்குரிய கிரகங்களெல்லாம் யோக கிரகங்களோடு சேர்ந்தால் வாழ்க்கையே சின்னாபின்ன மாகும்.

ராசிநாதன்தான் அழகு, இளமை, தோற்றப் பொலிவு, அசாத்தியமான ஆற்றல், நுண்ணறிவு, அடிப்படை சுகங்களை அளிப்பார். இவர் போய் ஆறாம் இடத்தில் அமர்ந்தால் எல்லாவற்றையும் இழக்க வைப்பார். இருக்கும் சுகங்களை அவஸ்தையாக்குவதுதான் ஆறாம் இடம். ஆனால், இது இம்மாதிரியான அவஸ்தைகளைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். ‘மழை பெய்யும் போல் தெரிகிறது. குடையைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள்’ என்று எச்சரிக்கை செய்யலாம். நூலிழையில் சிறிய சிராய்ப்புகளோடு எழுந்து விடலாம். பிரச்னைகள் வராது என்று சொல்லவே முடியாது. ஆனால், அதைத் தாங்கும் திறனை நாம் கைக்கொள்ளலாம். சிற்சில இழப்புகளோடு தாங்கும் சக்தியைப் பெறலாம்.

அப்படிப்பட்ட தாக்குப் பிடிக்கும் சக்தியை இறையருளால் நாம் பெறலாம். ஆறாம் இடம் வெறும் அச்சுறுத்தலாக இருக்கிறதே என்று பயப்படாதீர்கள். இறைவனின் அருளால் துணிவு பெறலாம். அந்தத் துணிவையும், தாங்கும் சக்தியையும் மகாசக்தியான சரபேஸ்வரர் தருவார்.

நரசிம்மரின் ஆக்ரோஷத்தையே அடக்கியவர் சரபேஸ்வரர். நரசிம்மரின் ஆக்ரோஷத்தைக் குறைக்க ஈசன் சரபம் என்கிற பறவையின் உருவில் வந்தார். ஒரு சிறகில் பிரத்யங்கரா எனும் காளி அம்சமும், மறு சிறகில் சூலினி துர்க்கையும் அவரின் சக்தியை உந்த, அவர் தன் கூர்மையான அலகால் பூமிப்பந்தை குத்திக் கிளறி வாயுவை விட வேகமாக நகர்ந்து நரசிம்மரின் முன்பு நின்றார். அப்படிப்பட்ட சரபேஸ்வரரை, கும்பகோணம் அடுத்த திருபுவனம் தலத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் ஒரு தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இனி வாழ்வில் எழவே முடியாது என்கிற அளவுக்கு பிரச்னைகள் உள்ளவராக இருந்தாலும் சரி... இவரின் சந்நதியில் நின்றாலே போதுமானது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா தேவி ஆலயம், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியிலுள்ள வெள்ளீஸ்வரர் ஆலயம் போன்றவற்றிலெல்லாம் தனிச் சந்நதி கொண்டு சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவரை தரிசியுங்கள். ராசி மற்றும் நட்சத்திர வாரியாக என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்றும், அதைத் தீர்க்கும் பரிகாரக் கோயில்கள் என்ன என்பதையும் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)