இனி அடிக்கடி புயல் வரும்?





‘தானே’ புயலோடு நமக்குப் பிறந்தது புத்தாண்டு. இதோ இப்போது ‘நிலம்’ புயலோடு தீபாவளியை எதிர்கொள்கிறோம். கொண்டாடும் தருணங்களை, அச்சுறுத்தும் பயத்தால் சுழற்றிச் சூறையாடிவிட்டு ஓயும் புயல்கள் நமக்கு புதுசு. 1964ல் தனுஷ்கோடி தீவின் அழிவுக்குப் பிறகு, தமிழகம் பெரிய அளவிலான புயல்கள் எதையும் சந்திக்கவில்லை. ஆனால் இப்போது அடுத்தடுத்து பத்து புயல்கள் எட்டிப் பார்த்துப் போகின்றன. ஆண்டுக்கு ஆண்டு புயலின் வேகமும் வீரியமும் அதிகரித்து வருகிறது. இதைப்போன்ற பல புயல்களை வருங்காலங்களில் தமிழகம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். காரணம், புவிவெப்பநிலை மாறுபாடு.

‘‘புவி வெப்பநிலை மாறுபாடு உலக அளவில் தட்பவெப்பத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது. எந்த அளவுகோலையும் வைத்து இயற்கையைக் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 ஆண்டு கால பாதிப்பின் அளவு அதிகரித்திருக்கிறது...’’ என்று அச்சமூட்டுகிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய கடலோர ஆராய்ச்சிப்பிரிவு இயக்குனர் டாக்டர் வி.செல்வம்.  

‘‘நிலமும், கடலும் இரண்டுவிதமான தன்மையோடு இயங்குபவை. அதிகபட்ச கார்பன் டை ஆக்சைடு பயன்பாட்டால் கடல்மட்டத்தின் வெப்பநிலை அதிகமாகி வருகிறது. அதனால் ஆவியாகும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதிக அளவு தண்ணீர் ஆவியாவதால் காற்றின் ஈரப்பதம் மாறி, மேகத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். கடலோடு ஒப்பிடும்போது, நிலத்தின் ஈரப்பத அடர்த்தி குறைவாகவே இருக்கிறது. அதனால், அதிவேகத்தில் வந்து அடர்த்தியை சமன்செய்கிறது காற்று.



கார்பன் டை ஆக்சைடு பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இதுபோன்ற புயல் தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், உலக அளவில் பருவநிலை மாற்றம் பற்றி ஆய்வுசெய்து வரும் அமைப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. முன்பு தமிழகத்தை நெருங்கிவரும் புயல்கள், வழிவிலகி ஒடிஷாவைத் தாக்குவது வழக்கம். இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர, தமிழகக் கடலோரப் பகுதிகள் இலக்காக மாறியிருக்கின்றன’’ என்கிறார் செல்வம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் பருவநிலை மாற்றத்துறை இயக்குனர் அறிவுடைநம்பியும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்.
‘‘பருவநிலை மாற்றத்தின் விளைவை உலகம் உணரத்தொடங்கிவிட்டது. திடீர் திடீரென புயல்கள் தாக்குகின்றன. மழை அதிகம் பெய்யும் என்று நம்பப்படுகிற பகுதிகள் வறட்சியில் தவிக்கின்றன. மழையே பெய்யாது என்று கூறப்படும் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்கிறது. அண்மைக்கால புயல்களின் சீற்றமும், கடலரிப்பின் வேகமும் அதிகமாகி வருகிறது.  
இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் வழக்கத்தை விட சீக்கிரமே வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் கடல் நீரோட்டத்தில் வெப்பம் அதிகமாவதையே காரணமாகக் கருத வேண்டியுள்ளது’’ என்கிறார் அவர்.


வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைத்துறை இணைப் பேராசிரியர் கணபதி, ‘‘தமிழ்நாட்டின் புவியியல் சூழலால், புயல்கள் வந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.

‘‘ஐ, ஐவால், சிரோஷ்கேனோபி... இவை மூன்றும்தான் புயலின் உறுப்புகள். சிரோஷ்கேனோபி பெரிதாக இருந்தால் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். மழை அதிகம் பெய்யும். ‘தானே’ புயலின் சிரோஷ்கேனோபி அளவு சிறியது. அதனால் பாதிப்பு அதிகம். ‘நிலம்’ புயலின் சிரோஷ்கேனோபி பெரியது. அதனால் பாதிப்பு குறைவு. எனவே புயல் என்றாலே அழிவை உருவாக்கும் என்று அஞ்சத் தேவையில்லை. பொதுவாக புயலின் தாக்கம், வளைவுப்பகுதிகளில்தான் அதிகம் இருக்கும். வங்காள விரிகுடாவில் உருவாகி வலுப்பெறும் புயலானது, ஒரிசா, ஆந்திரம் என்று போகவே வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் பருவநிலை மாற்றத்தால் வீரியமுள்ள புயல்கள் உருவாகலாம் என்ற கருத்தை புறம்தள்ளத் தேவையில்லை’’ என்கிறார் கணபதி.

சென்னை வானிலை ஆய்வு மைய புயல் எச்சரிக்கைப் பிரிவு இயக்குனர் ரமணனிடம் பேசினோம். ‘‘வானிலையை 10, 20 ஆண்டு கால தகவல்களை வைத்துக் கணிக்க முடியாது. 100, 200 வருட டேட்டாக்களை வைத்தே பார்க்க வேண்டும். ஒவ்வொரு பருவமழைக்காலத்திலும் புயல்கள் உருவாவது வாடிக்கைதான். பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீரோட்டம் சூடாகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதனால் கண்டிப்பாக பாதிப்பு உண்டு. ஆனால், அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமே தவிர, மக்களை தேவையில்லாமல் பயமுறுத்தக்கூடாது’’ என்கிறார் அவர்.
- வெ.நீலகண்டன்